ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சார்பில் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இன்று இலங்கை தொடர்பான விசாரணையின் வாய்மொழி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்போது, இலங்கையில் நீடித்த சமாதானம், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளுக்காக ஐ.நாவின் சர்வதேச விசாரணைக்குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஐ.நாவின் பிரதி மனித உரிமை ஆணையாளர் ஃலேவியா பின்சேய்ரி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன் போது இலங்கையில் காணாமல்போனோர் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு நடத்தும் விசாரணை முறை தொடர்பாக அவர் கவலை தெரிவித்தார். இலங்கையில் ஐ,நா விசாரணைக் குழுவிற்கு அனுமதி மறுத்தமைக்கு எதிராகக் கருத்து வெளியிட்ட அவர் இந்த விசாரணை மட்டுமே இலங்கையில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் என்றார்.
அதே வேளை வடக்குக் கிழக்கில் நடைபெறும் அபிவிருத்தி தொடர்பாகப் பாராட்டுத் தெரிவித்தார். பிரதி ஆணையாளரின் அறிக்கைக்கு பதிலளித்து உரையாற்றிய ஜெனிவாவுக்கான இலங்கை பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க, மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்துடன் தொடர்ந்தும் இணைந்து செயற்பட்ட போதிலும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களையும் விசாரணைக் குழுவையும் தொடர்ந்தும் நிராகரிப்பதாக கூறியுள்ளார்.
2009 ஆம் ஆண்டு இனப்படுகொலை நடந்துகொண்டிருந்த காலத்திலிருந்து ஐ.நா மற்றும் இலங்கை அரசிற்கு இடையேயான நாடகம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இஸ்ரேலிற்கு எதிராகக் கடந்த மூன்று தசாப்தங்களாக நடத்தப்படும் இவ்வாறான நாடகத்தின் பின்னணியில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசுகள் செயற்படுகின்றன. ஒரு பக்கத்தில் மனித் உரிமை மீறல் தொடர்பாக பக்கம் பக்கமாக இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா அறிக்கை வெளியிட மறுபக்கத்தில் ஆயிரமாயிராய் மேற்கு நாடுகள் ஆயுதங்கள் வழங்கிவருகின்றன, ஐ.நாவை நம்பி பலஸ்தீனியர்களின் விடுதலைக்கு ஆதரவான பல்வேறு ஜனநாயக சக்திகள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
ஐ.நா ராஜபக்ச அரசிற்கு எதிராகச் செயற்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திய கடந்த ஆறு ஆண்டு காலப்பகுதியில் இரண்டு முக்கிய நிகழ்ச்சிப் போக்கைக் காணமுடியும்.முதலில் மக்கள் மத்தியிலிருந்து எழுந்த போராட்டங்கள் ஐ.நா வை முன்வைத்து வலுவிழந்து போயின. போராட்டங்கள் எழும்போதெல்லாம் ஐ.நா பார்த்துக்கொள்ளும் எனக்கூறி மக்கள் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டுள்ளன. இரண்டாவதாக நிலப்பறிப்பு, பௌத்த சிங்கள மயமாக்கல் என்பன எதிர்ப்பின்றித் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.
அபிவிருத்தி என்ற பெயரில் இலங்கையில் நடைபெறும் நிலப்பறிப்பையும் சூறையாடலும் நியாயப்படுத்தப்படுகின்றன.
ஐ.நா-ராஜபக்ச நாடகத்தைப் பார்வையிடுவதற்காக தமிழர்களின் பிழைப்புவாதத் தலைமைகள் அங்கு முகாமிட்டுள்ளன.