Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கு எடுத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் திருப்பி அனுப்பப்படும் விவகாரம்

refugeeசுவிசில் அகதித் தஞ்சம் மறுக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களைத் திருப்பி அனுப்புவதை ஆட்சேபித்து ஆர்ப்பாட்டமும் மனுக் கையளிப்பும் திங்கட்கிழமை பிற்பகல் ஜெனீவா நகரில் நடைபெற்றது. ஜெனீவா ஐ.நா. முன்றலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நூற்றுக் கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். பகல் ஒரு மணியளவில் ஆரம்பமான இந்த ஆர்ப்பட்டம் மாலை 6 மணி வரை நீடித்தது.

அனுப்பாதே, அனுப்பாதே. திருப்பி அனுப்பாதே.
திருப்பி அனுப்பப்பட்டால் நாங்கள் அங்கே கொல்லப்படுவோம்.
சிங்கள நாட்டிலே நீதி இல்லை.
யுத்தக் குற்றம் புரிந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவதை ஐ.நா. சபையே தடுத்து நிறுத்து.
இந்த நாட்டில வாழ்வதற்கு எங்களுக்கு வாய்ப்பு வழங்குங்கள்.
கொலைகள், கடத்தல்கள், பாலியல் வல்லுறவு என்பவற்றைத் தடுத்து நிறுத்துங்கள்.
ஐ.நா. சபையே எங்களை வாழவிடு.
ஐ.நா. சபையே எங்களுக்கு உதவி செய்.

ஆகிய கோசங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசங்களையும் எழுப்பினர்.
இதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்களின் சார்பில் தூதுக்குழுவொன்று மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் அலுவலகத்திற்குச் சென்று சமூக நிறுவனங்கள் பிரிவுக்குப் பொறுப்பான மனித உரிமைகள் அலுவலர் மாரா ஸ்ரெக்காசினி அம்மையாரைச் சந்தித்து உரையாடியது. சுவிஸ் தமிழர் பேரவையின் செயலாளர் தம்பிப்பிள்ளை நமசிவாயம் தலைமையிலான இந்தக் குழுவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மருதையா கஜன், வேலாயுதம் நகுலேஸ்வரன், செல்வி சசீதா கருணாகரன், செல்வி நிவேதிகா தவபாலன் ஆகியோர் அடங்கியிருந்தனர்.

இந்தக் கலந்துரையாடல் ஆரோக்கியமானதாக அமைந்திருந்ததாகவும், சிறி லங்காவிற்குத் திருப்பி அனுப்படும் புகலிடக் கோரிக்கையாளர்கள் துன்புறுத்தப்படுவுது தொடர்பில் தமது குழுவினர் விரிவாக எடுத்துரைத்ததாகவும் தெரிவித்த த. நமசிவாயம், இது தொடர்பாக ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் மற்றும் சுவிஸ் வெளிநாட்டு அமைச்சர் ஆகியோரையும் தொடர்பு கொண்டு விடயங்களை எடுத்துரைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version