Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஐ. நா. மனித உரிமைகள் சபை,இலங்கையிடம்தோல்வி அடைந்துவிட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது.

ஐ. நா. மனித உரிமைகள் சபை, இலங்கை மீது நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் தோல்வி அடைந்துவிட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கடந்த ஓராண்டுகால நடவடிக்கைகள் குறித்து 69 பக்க அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அதில் 2010 ஜூலை மாதம் முதல் 2011 ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் பணிகள் அறிக்கையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.

சில நாடுகளில் மனித உரிமைகள் சபையின் நடவடிக்கைகள் வெற்றிகரமாக அமைந்தபோதும் மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற இலங்கை, ஆப்கானிஸ்தான், பஹ்ரைன் ஆகிய நாடுகளின் விடயத்தில் நடவடிக்கை எடுக்க ஐ.நா. சபை தவறிவிட்டது என்று கண்காணிப்பகம் சாடியுள்ளது.

அறிக்கையில் இலங்கை குறித்து ஒன்றரைப் பக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்களைச் சுட்டிக் காட்டும் கண்காணிப்பகம், நிபுணர் குழு சுட்டிக்காட்டிய குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துவதற்குப் பதிலாக இலங்கை அரசு வெறுமனே குற்றச்சாட்டுக்களை நிராகரித்ததாகவும் சாடி உள்ளது.

அத்தகைய அறிக்கையைப் பெறுவதற்காக, நிபுணர் குழு ஒன்றை நியமிக்கும் அதிகாரம் ஐ.நா. பொதுச் செயலாளருக்கு இல்லை என்று இலங்கை அரசு தவறாகக் கூறிவருகிறது. இது நிபுணர் குழுவில் அடங்கியிருந்தவர்களின் பக்கச்சார்பின்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறது.

அறிக்கையின் பரிந்துரைகளின்படி நடவடிக்கை எதனையும் எடுக்க வேண்டாம் என்று மனித உரிமைகள் சபை உள்ளிட்ட ஐ.நா.வுக்கு, இலங்கை ராஜதந்திர அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றது என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகின்றது.

2009 ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் சபையில் கொண்டுவரப்பட்ட பிரேரணையையின் மீது மீண்டும் கவனம் செலுத்துமாறு நிபுணர் குழு தனது அறிக்கையில் பரிந்துரைத்தபோதும், மனித உரிமைகள் சபை கடந்த ஜூன் மாதம் வரை அதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது என்றும் கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது.

Exit mobile version