22.01.2009.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினர் வன்னியில் தமது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் பணியாற்றும் ஐ.நா பணியாளர்களை, அங்கிருந்து வெளியேற அனுமதி மறுத்து வருவதாகக் கூறும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் தலைமையகம், ஐ.நா பணியாளர்களையும் அவர்களில் சார்ந்திருப்போரையும் உடனேயே அங்கிருந்து வெளியேற அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
இது குறித்து ஐ.நாவின் கொழும்பு அலுவலகம் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் விடுதலைப்புலிகள் இவ்வாறு ஐ.நாவிற்காக பணியாற்றும் உள்ளூர் பணியாளர்களையும், அவர்களில் சார்ந்திருப்போரையும் அங்கிருந்து வெளியேற முடியாதவாறு அனுமதி மறுத்திருப்பதனை மிகவும் கடுமையான தொனியில் கண்டித்திருப்பதோடு, அவர்கள் தற்போது வன்னியிலுள்ள ஐ.நாவின் வாகனத் தொடரணியோடு அங்கிருந்து வெளியேற விடுதலைப்புலிகள் அனுமதிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது.
இந்த பணியாளர்கள் கடந்த வெள்ளிக்கிழமை வன்னியில் மோதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசத்திலுள்ள மக்களுக்காக உணவுப் பொருட்களையும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களையும் ஐ.நாவின் அனுசரணையில் ஏற்றிச் சென்ற வாகனத் தொடரணியில் சென்றவர்களில் ஒரு தொகுதியினர் என்றும், புலிகளுக்கும் அரசபடையினருக்கும் இடையே கடுமையான மோதல்கள் காரணமாக இந்தத் தொடரணி இன்றுதான் பாதுகாப்பாக அங்கு செல்ல முடிந்தது என்றும் ஐ.நா தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
புலிகள் அமைப்பினர் தமது பொறுப்புக்களில் இருந்து தவறாது இந்த ஐ.நா பணியாளர்களையும், அவர்களில் சார்ந்திருப்போரையும் உடனடியாக அங்கிருந்து சுதந்திரமாக வெளியேற அனுமதிக்கவேண்டுமென்றும், அவர்களுக்கான பாதுகாப்பான வழிப்பயணத்திற்கான அனுமதிமறுப்பு என்பது சர்வதேச மனிதாபிமான நியமங்கள் தொடர்பில் புலிகளுக்கு இருக்கக்கூடிய கடப்பாட்டை தெளிவாக மீறும் செயலென்றும் ஐ.நா கூறியுள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து வன்னியில் மோதல்களினால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்காக ஐ.நாவின் அனுசரணையில் இதுவரை சுமார் 7000 தொன் அத்தியாவசிய உணவுப்பொருட்களும், நிவாரணப்பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.