நேற்றய தினம் ஜேர்மனியில் நடைபெற்ற மனித உரிமைகள் தீர்ப்பாய அமர்வின் போது ஐக்கிய நாடுகள் சபை ஈழத் தமிழர்கழைப் பாதுகாக்கத் தவறியது. ஐநா அவையும் இனவழிப்பில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது. இலங்கை அரசிற்கு எதிராகப் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அவற்றை இனப்படுகொலை நடத்தியவர்களே தமக்குச் சார்பானதாகப் பயன்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலைமையை மாற்றுவதற்குரிய அரசியல் தலைமை தமிழ்ப் பேசும் ஒடுக்கப்படும் மத்தியில் தோன்றினால் மட்டுமே வெற்றியை நோக்கிய அரசியலை உருவாக்க முடியும்.
அவ்வாறன்றெனின் தீர்மானங்கள் நிறைவேற்றும் அரசியலையே உருவாக்க முடியும்.
ஆணையாளர்,
ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு.
அவர்கட்டு
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் உலக மனித உரிமைகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய தினத்தில் இலங்கைத்தீவின் வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைந்த தமிழர் தாயகப் பகுதியில் வாழுகின்ற தமிழ் பேசும் மக்கள் எதிர்கொண்டுவரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் கட்டமைப்புசார் இன அழிப்புத் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்தினை ஈர்க்க விரும்புகின்றோம். 2012, 2013ம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையினால் சிறீலங்கா தொடர்பில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போதிலும் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளும், மனித உரிமை மீறல்களும் குறைந்துவிடவில்லை மாறாக முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துவருகின்றன. இத்தகைய மனித உரிமைகள் மீறல்களினை வெறுமனே தற்போதைய ஆட்சியாளர்களின் தவறாகவோ ஆட்சிமாற்றம் ஒன்றினூடாவோ இவற்றினைத் திருத்தி விடலாமென நாம் கருதவில்லை. இத்தகைய மனித உரிமைகள் மீறல்களானவை காலாகாலமாக மாறிமாறி இலங்கைத்தீவை ஆட்சி செய்துவரும் ஆட்சியாளர்களின் தமிழின ஒடுக்குமுறையின் தொடர்ச்சியாகவே நாம் பார்க்கின்றோம்.
தமிழ் மக்களின் தாயக பூமியானது கீழே விபரிக்கப்படும் முக்கியமான மனித உரிமைகள் மீறல்கள் உட்பட்ட பல்வேறு மனித உரிமை மீறல்களிற்கும் ஆட்பட்டிருக்கின்றது.
1. தமிழ் மக்களை அவர்களின் சொந்த தாயக பூமியில் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக்கும் நோக்கில் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள்.
2. தமிழ் மக்களின் தனிப்பட்ட சொந்தக் காணிகள் அரசால் பறிமுதல் செய்யப்படுதல்.
3. இராணுவ ஆக்கிரமிப்பு.
4. காலாசார அடையாளங்களை மாற்றும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் கட்டாய சிங்கள பௌத்த மயமாக்கல்.
5. தமிழ் மக்களின் சுதேசிய பொருளாதாரத்தை திட்டமிட்டு அழித்தல்.
6. சட்டவாட்சியின்மை மற்றும் தண்டனை விலக்கு.
2013-02-13 அன்று வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையானது மேற்கூறப்பட்ட விடயங்களைப் பெருமளவில் உறுதிப்படுத்துகின்றது. மேற்கூறப்பட்ட விடயங்கள் நல்லிணக்கமும் பொறுப்புக்கூறலும் இன்மையினாலே நடைபெறுகின்றது எனப்பார்க்கப்படக்கூடாது மாறாக தமிழ் மக்களின் அடையாளங்களை அழித்து அவர்கள் ஓர் தனித்துவமான தேசமாக இருப்பதனை இல்லாமல் செய்யும் நோக்கிலான திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் என்றே நோக்கப்படல் வேண்டும் என்பதனை நாங்கள் வலியுறுத்துகின்றோம். இந்நிலையில் வரலாற்று ரீதியாகத் தோற்றுப்போன உள்ளுர் பொறிமுறைபற்றி அழுத்துதல் பயனற்றது.
இத்தகைய பின்னணியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது
1. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவின் பொறுப்புக்கூறல் தொடர்பான அறிக்கை.
2. அண்மையில் வெளிக்கசிந்த ஐக்கிய நாடுகளின் பெற்றி என்பவரால் தயாரிக்கப்பட்ட அறிக்கை.
3. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 22வது அமர்வு தொடர்பான அறிக்கை, குறிப்பாக சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணைக்கான அழைப்பு விடுத்துள்ளமை.
இவ்விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்தை ஈர்க்க விரும்புகின்றோம்.
இறுதி யுத்தத்தின்போது நடந்தவை தொடர்பில் கூறப்படும் நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்கள் சர்வதேச சமூகமும், ஐக்கிய நாடுகள் சபையும் தம்முடைய பாதுகாப்பதற்கான கடமை என்ற கோட்பாட்டின் கீழான தனது கடமையான தமிழ்த் தேசம் சார்பாகத் தலையிடுவதனைத் தவிர்த்ததன் மூலம் செய்யத்தவறிவிட்டதை சுட்டிக்காட்டுகின்றோம்.
பயங்கரவாதத்தைத் தோற்கடித்தல் என்னும்பெயரில் தமிழ்த்தேசம் மீதான இன(ப்படுகொலை)வழிப்புப் போர் அரங்கேறியது. எது எவ்;வாறாயினும் யுத்தம் முடிவடைந்து நான்கரை வருடங்கள் நிறைவடைகின்றபோதிலும் தமிழ்த் தேசமானது ஓர் கட்டமைப்புசார் இனவழிப்பை தொடர்ந்தும் எதிர்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது
• காணாமல் போனவர்கள் தொடர்பில் பொறுப்புக் கூறல்.
• சிறையிலுள்ள அரசியல் கைதிகளை உடன்விடுதலை செய்தல்.
• வலிகாமம் வடக்கு, கேப்பாபிலவு, சம்பூர் உள்ளிட்ட வடக்கு கிழக்கு தாயகப் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் அவர்களது சொந்த இடங்களில் உடனடியாக மீளக் குடியமரச் செய்தல்.
•இனப்படுகொலை உட்பட சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில் சுயாதீனமானதும் நம்பகத்தன்மை கொண்டதுமான சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை ஒன்றினை நடாத்துதல்.
•அழிக்கப்பட்டுவரும் தமிழ்த் தேசத்தைப் காப்பாற்றுவதற்காக பாதுகாப்பதற்கான கடமை (Responsibility to Protect) என்னும் கோட்பாட்டின் அடிப்படையில், தமிழ் மக்களின் தாயக பூமியான இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் ஓர் இடைக்கால நிர்வாகம் ஒன்றினை உருவாக்குதல் தொடர்பில் ஓர் தீர்மானத்தை நிறைவேற்றல் (இத்தகைய இடைக்கால நிர்வாகமானது கட்டாயமாக தற்போதய இலங்கையின் அரசியல் அமைப்பு கட்டமைப்புக்கு வெளியில் ஏற்படுத்தப்படல் வேண்டும்.)
ஆகியன தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோருகின்றோம்.
இதுபோன்ற நடவடிக்கைகள் தமிழ்த் தேசத்தின் அழிப்பைத்தடுக்க உதவும் என்பதுடன் எதிர்காலத்தில் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண உதவும். அத்துடன் காணாமற்போனவர்களது குடும்பங்கள் மற்றும் சிறையிலடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கும் நியாயத்தினைத் பெற்றுக்கொடுப்பதாகவும் அமையும். மேலும் இத்தகைய இடைக்கால நிர்வாக சபையானது பொறுப்புக்கூறல் தொடர்பான ஆதாரங்களை திரட்டுவதற்கு மட்டுமல்லாது இருக்கும் ஆதாரங்களைப் பாதுகாப்பதற்கு உதவும் என நாம் கருதுகின்றோம்.
செ.கஜேந்திரன் (பொதுச் செயலாளர்)
வி.மணிவண்ணன் (தேசிய அமைப்பாளர்)
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி