Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஐ.நாவின் போர்க்குற்ற நாடகமும் புலம்பெயர் அமெரிக்க விசிறிகளும்

வவுனியாவில் அமெரிக்க இராணுவம்
வவுனியாவில் அமெரிக்க இராணுவம்

ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள ஐநா மனித உரிமை கவுன்சிலின் 27ஆவது கூட்டத்தொடரின் துவக்கத்தில்இலங்கை சார்பாக உரையாற்றியுள்ள மனித உரிமை கவுன்சிலுக்கான இலங்கையின் நிரந்தரத் தூதர் ரவிநாத ஆரியசிங்க, இலங்கையில் நடந்ததாகத் தெரிவிக்கப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் விசாரணை நடத்துவதற்குப் பணித்திருந்த ஐநா மனித உரிமைக் கவுன்சில் தீர்மானத்தையும், ஐநா மனித உரிமை அலுவகம் நடத்தக்கூடிய விசாரணையையும் இலங்கை திட்டவட்டமாக நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மற்றும் அமெரிக்காவும் கிளித்தட்டு விளையாடுவதற்கு ஆராம்பித்துவிட்டன. லட்சக்கணக்கான மனிதர்கள் சாரி சாரியாகக் கொல்லப்பட்ட போது மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்த அதே நாடுகளும் நிறுவனங்களும் மக்களை முட்டாளாக்கும் நோக்குடன் நடத்தும் நாடகமே இந்த விசாரணை நாடகம்.

இந்துசமுத்திரப் பிரந்தியத்தின் சுண்டெலி அரசான இலங்கை அரசிற்கும் உலகின் மூலை முடுக்கெல்லாம் ஆட்சி செலுத்தும் அமெரிக்க அரசிற்கும் இடையே அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்க இலங்கையில் அமெரிக்க இராணுவமும் அமெரிக்கப் பல்தேசிய நிறுவனங்களும் சாமானிய இலங்கையரின் கொல்லைப் புறங்களில் நிலைகொள்ளும்.
வியட்னாமில் கொத்துக்கொத்தாகக் கொலை செய்த அமெரிக்க இராணுவம் தாய்வானை இடத்தங்கலுக்காகப் பயன்படுத்தியதன் விளைவே இன்று பாங்கொக் பாலியல் தொழில் நகரமாக மாற்றப்பட்டுள்ளது.

போர்க்குற்ற விசாரணை நாடகத்தின் இரசிகப் பெருமக்களான புலம்பெயர் அரசியல் கனவான்கள் உருவாக்க எண்ணும் தமிழீழம் அமெரிக்க இராணுவத்தின் பிடியில் இன்னொரு பாங்கொக்காக மாற்றமடையும்.
உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் கண்ணிவெடிகளை விதைத்து வைத்திருக்கும் அமெரிக்க கொலைஞர்கள் இலங்கையில் கண்ணிவெடியை அகற்றுகிறோம் என்று கண்த்துடைப்புக் காரணங்களை முன்வத்து இராணுவத்தளத்தை உருவாக்கி வருகின்றனர்.

இலங்கையில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் குலைப்பதாக இந்த தீர்மானமும் விசாரணையும் அமைந்துள்ளது என இலங்கைப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க கூறியதற்கு மீண்டும் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அமெரிக்கா செல்லமாகக் கடிந்துகொண்டது.

தாமே பிரேரணை கொண்டுவருவதற்குக் காரணம் எனக் கூறும் அமெரிக்காவின் புலம்பெயர் விசில்கள் குறைந்தபட்சம் தமிழர்களுக்குத் தேவையான பிரேரணை மீதான திருத்தங்களை முன்வைக்கவில்லை. அது குறித்து அவர்களுக்கு எந்த அக்கறையும் கிடையாது.

இரண்டு பக்கத்தின் போர்க்குற்றஙக்ளையும் தண்டிக்கப் போகிறோம் என்று அப்பாவிப் போராளிகளைக்கூட அழிக்க வழிசெய்யும் பிரேரணையைக் கூடத் திருத்தங்கள் செய்ய முயலாமல் காட்டிக்கொடுத்த கூட்டம் அரசியல் அரங்கிலிருந்து அகற்றப்பட வேண்டும்.

அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இலங்கை அரசு போர்க்குற்ற அரசு என்கிறது என்றால் இலங்கையுடன் இராணுவ பொருளாதார உறவுகளை நிறுத்துமாறு புலம்பெயர் நாடுகளில் ஏன் போராட்டங்களை ஆரம்பிக்ககூடாது?

Exit mobile version