Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஐரோப்பிய நாடுகளில் முன்னாள் போராளிகள் ஆபத்தில் : பினாமிகள் எங்கே?

அண்மையில் ஜெயந்தன் தர்மலிங்கம் என்ற முன்னை நாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் பிரான்சில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். அவரது அரசியல் தஞ்சக் கோரிக்கை நிலுவையில் உள்ள காரணத்தினால் அதன் முடிவு வெளியிடப்படும் வரைக்கும் அவரைச் சட்டரீதியாகக் கைதுசெய்ய இயலாது என அவரின் சட்டத்தரணி திரு.ஜக்மான் கால அவகாசத்தைப் பெற்றுள்ளார். ஜெயந்தன் மட்டுமல்ல ஐரோப்பாவை நோக்கிவந்த ஆயிரக்கணக்கான போராளிகள் பல்வேறு காரணங்களுக்காகத் தெருக்களில் விடப்பட்டுள்ளனர். பலர் தண்டிக்கப்படலாம் என்ற அச்சத்தில் வாழ்கின்றனர்.

ஐரோப்பாவிலும் ஏனைய மேற்கு நாடுகளிலும் நிலவும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்ட பலர் அடிப்படை வாழ்வாதரத்தையே உறுதிப்படுத்த முடியாத நிலையிலுள்ளனர். தமிழர்களின் வியாபார நிறுவனங்களில் அடிப்படை ஊதியத்திற்கும் குறைவான பணத்திற்கு வேலைசெய்யும் பலரின் எதிர்காலம் நிச்சயமற்றதாக உள்ளது.

கால்கள் பொருத்தப்பட்டு பல இன்னல்கள் ஊடாக ஐரோப்பிய நாடு ஒன்றிள் தஞ்சமடைந்த பெண்போராளி ஒருவர் அடிப்படைச் சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்குக் கூட வாய்ப்பற்ற நிலையிலிருப்பதாகக் கூறுகிறார்.

இன்னொரு முன்னை நாள் போராளியுடன் பேசிய வேளையில் ஒரு நாளைக்கு ஒருதடவையே உணவருந்துவதாகக் கூறுகிறார். ஐரோப்பிய நாடு ஒன்றில் புலிசார் அமைப்புக்கள் ஈழம் பிடித்துத்தருவதாகக் கூறும் தேசத்தில் இவர் பலரைத் தொடர்புகொள்ள முயற்சித்து தோல்வியடைந்துள்ளார். புலி அடையாளத்தையும் பிரபாகரனையும் வைத்துப் பிழைப்பு நடத்தும் புலம்பெயர் பினாமிகள் இதுகுறித்துத் துயர்கொள்வதில்லை.இணையத்தளங்களைத் திறந்தால் கொல்லப்பட்டவர்களுக்கு இரத்த அஞ்சலி செலுத்தும் உணர்ச்சி வியாபாரம் வியாபித்துக்காணப்படுகிறது.

ஜெயந்தனைப் போன்று சர்வதேச உளவு நிறுவனங்களின் பிடிக்குள்ளும் போர்க்குற்ற அச்சத்திலும் வாழ வேண்டிய நிலைக்குப் பலர் தள்ளப்பட்டுள்ளனர். எப்போதும் மரணிப்பதற்குத் தயாராக கழுத்தில் சயனைட்டுடன் வாழ்ந்த போராளிகள் மீது போர்க்குற்றம் சுமத்த முடியாது என்பதையும் சர்வதேச போலிஸ்படைகளால் தேடப்பட முடியாது என்பதையும் பொதுப் புத்தியாகக் கட்டமைக்க வேண்டும்.

பொதுவான தளம் ஒன்றில் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் முன்னை நாள் போராளிகள் பாதுகாக்கப்பட வேண்டும். மனித உரிமை அமைப்புக்கள் மட்டுமன்றி ஜனநாயக முற்போக்கு சக்திகளும் இந்த விடயம் குறித்து அணுகப்பட வேண்டும். ஐரோப்பிய ஜனநாயக முற்போக்கு சக்திகள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும். இவற்றிற்கு முன்வராத பிழைப்பு வாதிகள் அரசியல் நீக்கம் செய்யப்பட வேண்டும். போராடுவதற்கு இணைந்தவர்களோ இணைத்துக்கொள்ளப்பட்டவர்களோ போர்க்குற்றங்கள் இழைப்பதற்காகச் செல்லவில்லை. அரசியல் போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்காக ஆயுதம் ஏந்தியவர்கள். இவர்கள் ஆயுதம் எந்தியதற்கு இலங்கைப் பேரினவாதப் பாசிஸ்டுக்களே காரணம் என்பது சொல்லப்பட வேண்டும்.

Exit mobile version