இன்று ஆசியா மற்றும் ஆபிரிக்க நாடுகளிலிருந்து ஐரோப்பா நோக்கி வரும் அகதிகளின் அவலம் பிரித்தானிய மக்களின் ஒரு பிரிவினரின் மனிதாபிமானப் பக்கத்தைத் தட்டியெழுப்பியுள்ளது. பிரித்தானியர்களின் விடுமுறைகாலச் சொர்க்கபுரியான துருக்கியின் கடற்கரையில் மரணித்துக் கிடந்த மூன்று வயதுக் குழந்தை ஏலான் குர்தியின் படங்கள் ஊடகங்களை ஆக்கிரமித்துக்கொண்ட போது அகதிகளையும் மனிதர்களாக கருதிய மக்கள் கூட்டம் வெளித்தெரிய ஆரம்பித்தது. சமூகத்தின் ஆழத்தில் பொதிந்துகிடந்த மனிதாபிமானம் சிறிதுசிறிதாக மேலெழ ஆரம்பித்தது.
அந்த நிலையில் இடதுசாரிக் கருத்துக்களை தமது சுய லாபத்திற்காகப் பயன்படுத்தும் போலிகளாகட்டும், தீவிர வலதுசாரிக் கருத்துகளைக் கூச்சமின்றி மக்கள் மத்தியில் பரப்பும் டேவிட் கமரனாகட்டும், அகதிகள் மீது அக்கறைகொள்வது போல நாடகமாட ஆரம்பித்தனர். இவர்களுக்கு அகதிகள் மீது அக்கறை கிடையாது. மக்கள் தங்களுக்கு எதிராகத் திரும்பிவிடுவார்களோ என்ற அச்சம் மட்டுமே போலி அக்கறை ஊடாக வெளிப்பட்டது.
யாழ்ப்பாணம் சென்று எம்.ஜீ.ஆர் வேடம் போட்ட கமரன், எதிர்வரும் ஐந்து வருடங்களில் 20 ஆயிரம் அகதிகளை அனுமதிப்பதாக அறிகைவிடுத்தார்.
கமரோன் உட்பட மேற்குலகின் ஏகாதிபத்திய நிர்வகிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட யுத்தத்தின் கோரத்தால் பலியானது துருக்கிக் கடற்கரையில் ஒரு குழந்தை மட்டுமல்ல. ஆயிரமாயிரம் பச்சிழம் குழந்தைகளும், கர்ப்பிணித் தாய்களும். இவர்கள் அனைவருக்கும் கமரோனின் விலை நிர்ணையம் ஒரு வருடத்திற்கு நாலாயிரம் மனிதர்களுக்கு உயிர்பிச்சை என்பதே.
கமரோனின் விலை நிர்ணையத்தைக் கேள்வியுற்ற பல்தேசிய வர்த்தக ஊடகங்கள் புழகாங்கிதமடைந்தன. தேசிய அக்கறைக்கும் மனிதாபிமனத்திற்கும் இடையே சமநிலையை எட்டியுள்ளார் என்று கமரோனைப் பாராட்டின.சிரியாவில் ஜனநாயகம் வாங்கித் தருவதாக ஐரோப்பிய நாடுகள் கட்டவிழ்த்துவிட்ட யுத்தத்தில் அகதிகளாக வெளியேறியுள்ளவர்கள் நான்கு மில்லியன் மக்கள். அதில் அரைவாசிக்கும் மேலானவர்கள் 18 வயதிற்கும் குறைவானவர்கள்.
ஐரோப்பிய அமெரிக்க அழிவு ஆயுதங்களுக்கு எல்லைகள் இல்லை. அகதிகளுக்கு மட்டும் எல்லைகள் நிர்ணையிக்கப்படுகின்றன. எல்லைகளுக்குள் இப்போது விலையும் நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது.