Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஐரோப்பாவை நாசப்படுத்த எழுச்சி பெறும் நாஸிக் கட்சிகள்

greceenaziஐரோப்பாவின் பொருளாதார நெருக்கடி மக்கள் இயக்கங்களையும் போராட்டங்களையும் தோற்றுவிக்கும் அதே வேளை நாஸி இயக்கங்களையும் பாசிஸ்டுக்களையும் தோற்றுவிக்கின்றன. கிரீஸ் நாட்டில் கடந்த வருடம் இடது சாரி இயக்கச் செயற்பாட்டாளரும் ராப் பாடகருமான 34 வயதானவர் சாகும் வரை கத்தியால் ஒன்றால் வெட்டப்பட்டார். இவரது கொலை தொடர்பாக பின்னர் 44 வயது மனிதர் ஒருவர்கைது செய்யப்பட்டார்.

கொலையாளி தங்க விடியல் (Golden Dawn) என்ற கட்சியைச் சேர்ந்தவர் என்றும் அதன் ஆணையின் பெயரிலேயே கொலை செய்ததாகவும் ஒத்துக்கொண்டார். கிரேகத்தின் இடதுசாரிக் கட்சிகளுக்கு அடுத்த நிலையில் மூன்றாவது மிகப் பெரும் கட்சியாக இக் கட்சி திகழ்கிறது. தங்கவிடியல் கட்சி ஹிடல்ரின் தொடர்ச்சி என்று தம்மைக் கூறிக்கொள்கிறது.

இராணுவக் குழு ஒன்றையும் கொண்டுள்ள இக் கட்சி கிரேக்கத்தில் சுதந்திரமாக இயங்கி வருகிறது. இக் கட்சியின் சின்னமும் ஹிடலரின் சின்னத்தை ஒத்ததாகவே காணப்படுகின்றது. கிரேக்கத்தில் நடைபெற்ற 2012 ஆம் ஆண்டுத் தேர்தலில் புரட்சியைத் தமது அரசியல் வழிமுறையாகக் கொண்ட மார்க்சிய லெனினியக் கட்சி மக்களின் பெரும்பகுதி வாக்குகளைப் பெற்றுள்ளது என்று ஜனநாயக முற்போக்கு சக்திகளும் மனிதாபிமானிகளும் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் அதன் மறுபுறத்தில் தங்கவிடியல் கட்சி ஏழு வீதமான மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டது.
நியூ யோர்க்கிலும் அவுஸ்திரேலியாவிலும் அலுவலகங்களைக் கொண்ட இக் கட்சி மேற்கு உளவு நிறுவனங்களின்உற்பத்தியா என்ற சந்தேகங்கள் எழுகின்றன.

கிரேக்க அரசாங்கம் இக் கட்சியின் 30 கிரிமினல் வழக்குகளை விசாரணை செய்து வருகின்றது. நிக்கலேயோ மிசலேயேகோஸ் என்பவரால் 1985 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கட்சி இவராலேயே இன்றுவரை தலைமை தாங்கப்படுகின்றது. 2012 ஆம் ஆண்டு இவர் ஜேர்மனியில் நடைபெற்ற யூதப் இனப் படுகொலைகள் படுகொலையல்ல என வெளிப்படையாக நிராகரித்தார்.

30 வருடங்களாக யாரும் கண்டுகொள்ளாத தங்க விடியல் 2010 ஆம் ஆண்டின் பின்னர் பணபலத்தோடு தனது குறுந்தேசிய வாத – நிறவாதப் பிரச்சாரங்களை முடுக்கிவிட்டது. 2012 ஆம் ஆண்டுத் தேர்தலில் நேரடியாகவே நாஸிக் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்தது. இக் கட்சியின் 18 கிரிமினல்கள் பாராளுமன்ற ஆசனங்களை வென்றுள்ளனர். இக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான டியோரோவ் எதன்ஸ் நகரின் பிரதான சந்தை ஒன்றின் ஊடாக பல்வேறு கட்சி அடியாட்களுடன் சென்று அங்கு கிரேக்கர் அல்லாத ஆசியர்களையும் ஆபிரிக்கர்களையும் மிரட்டினர்.

ஒரு வியாபாரியின் கடை ஒன்றை அடித்து நொருக்கினர். அது வரை கிரேக்க ஊர்வலங்களை ஒடுக்கும் போலிஸ்படைகள் அங்கு வரவில்லை. இந்த வருட மேமாததில் 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏதன்ஸ் நகரில் 4 எகிப்தியர்களை மிருகத்தனமாக பொது வெளியில் பட்டப்பகலில் தாக்கினார்கள். வெளி நாட்டவர்கள் எப்போதும் தாக்கபடலாம் என்ற பயத்தில் குழுக்களாகவே உலாவ வேண்டிய நிலையிலுள்ளனர். குறிப்பிட்ட தாக்குதல்கள் சில உதாரணங்கள் மட்டுமே. இரண்டு மாதங்களின் முன்னர் கட்சித் தலைவரின் மகள் மற்றும் இரண்டு கட்சி உறுப்பினர்கள் பாகிஸ்தானியர் ஒருவரைத் தாக்கிக்கொண்டிருக்கும் போது கைது செய்யப்பட்டனர்.

கிரேக்கப் போலிஸ் படைகள் மத்தியில் தங்கவிடியல் நாஸிக் கட்சிகளுக்கு மிகப்பெரும் ஆதரவு நிலவுவதாக கணிப்புக்கள் கூறுகின்றன. கடந்த தேர்தலில் சில பகுதிகளில் இரண்டில் ஒரு போலிஸ் தங்கவிடியலுக்கு வாக்களித்தாகக் கூறப்படுகின்றது. கிரேக்கத்தின் முன்னை நாள் இராணுவ அதிகாரிகள் தங்கவிடியலுக்கு பயிற்சியளிப்பதாகவும் நாட்டின் பணக்காரர்கள் நன்கொடைகள் வழங்குவதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதார நெருக்கடிக் காலத்தில் இடதுசாரி எழுச்சிகளை அழிக்கும் நோக்கோடு ஹிட்லரை மேற்கு ஏகாதிபத்தியங்கள் இணைந்து தோற்றுவித்ததைப் போன்று நாஸி கடசிகளை ஐரோப்பா முழுவதும் தோற்றுவிக்கின்றனவா என்ற சந்தேகங்கள் பரவலாகத் தெரிவிக்கப்படுகின்றன.

பிரான்ஸில் தேசிய முன்னணி கட்சியும், பிரித்தானியாவில் பிரித்தானிய சுதந்திரக் கட்சி, பிரித்தானிய தேசியக் கட்சி, ஆங்கிலேயர் பாதுகாப்பு அமைப்பு என்பன பாசிச நாஸி கருத்துக்களோடு மக்களை நச்சூட்ட ஆரம்பித்துள்ளமை அச்சம் தருவதாகும். பிரித்தானிய ஆளும் கட்சியான பழமைவாதக் கட்சிக்குப் பணம் வழங்கும் 14 பணக்காரர்கள் அக்கட்சிக்குத் தமது ஆதரவை நிறுத்திக்கொண்டு பிரித்தானிய சுதந்திரக் கட்சிக்குப் பணம் வழங்க ஆரம்பித்துள்ளதாக இன்றைய இன்டிபெண்டன் நாழிதழ் தெரிவிக்கிறது.

ஆக, தங்க விடியல்கள் ஐரோப்பா முழுவதும் தமது தேவைக்கேற்ப அதிகாரவர்க்கம் பயன்படுத்தும் காலம் உருவாகிவிட்டது. மக்களின் தவிர்க்கவியலாத தேவையான கம்யூனிச சமூகத்தை நோக்கிய அணி திரள்வை அழிப்பதற்கு பல கிட்லர்களை அதிகாரவர்க்கம் தோற்றுவித்து சமூகத்தை நாசப்படுத்த ஆரம்பித்துவிட்டன.

Exit mobile version