Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஐயே மச் பலுவத – நீங்க எப்ப யாழ்ப்பாணம் போறீங்க?: மருதமூரான்

‘ஐயே மச் பலுவத (அண்ணா match பாத்தீங்களா)’ கல்கிசையில் என் வீட்டுக்கு அருகிலுள்ள சலூன் கடையில் என் தலைக்கு வேலை பார்த்துக் கொண்டு இரோஸ் கேட்டான். நான், ‘ஒவ் பலுவா(ஓம் பார்த்தேன்)’ என்றேன். சகோதர இனத்தைச் சேர்ந்த அவன் இரத்தினபுரியில் வசிப்பதால் அழகாக தமிழும் பேசுவான். இரத்தினபுரியில் வசிக்கும் தமிழர்களுடன் அவனுக்கு அதிக பழக்கமுள்ளதாக கூறுவான். ஆனாலும், முதலில் தனது தாய்மொழியிலேயே ஆரம்பிப்பான். நானும் சிங்களம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவனுடன் தெரிஞ்ச சிங்களத்திலேயே அதிகம் பேச முயல்வேன்.

அவனுக்கு (தமிழ்) சினிமாவிலும், அரசியலிலும், கிரிக்கட்டிலும் ஆர்வம் அதிகம். என்னுடன் அதிகளவில் அவை தொடர்பிலேயே பேசுவான். விஜயையும், சிம்புவையும் அவனுக்கு அதிகம் பிடிக்கும். நான் புதிய தமிழ் படங்கள் பார்ப்பதற்கு முதல் அவனிடம் சிலவேளை விமர்சனம் கேட்பதும் உண்டு. என்னவோ தெரியாது நான் சந்திக்கின்ற சலூன்களில் இந்த மூன்று விடயங்களுமே அதிகளவில் பேசப்படுகின்றன. தென்னாசிய நாடுகளில் அதிகளவில் இவைதான் பேசப்படும் என்றும் நினைக்கிறேன். ஐ.சி.சி.இருபதுக்கு20 கிரிக்கட் போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கை, பாகிஸ்தானிடம் தோற்றது குறித்து அதிகம் அலட்டிக்கொண்டான். நானும் தான்.

ஐயே, நீங்க எப்ப யாழ்ப்பாணம் போறீங்க? என்றான். இல்ல.. இப்போதைக்கு போறதா ஐடியாவெல்லாம் இல்ல… இன்னும் சில மாதங்களுக்கு பிறகு போறேன் என்றேன். அவன் சொன்னான், ஏன் அங்க பிரச்சினையெல்லாம் முடிச்சுதுதானே போகலாம் தானோ.. இல்ல இல்ல பிரச்சினைக்காக போகாமல் நிக்கல்ல… எனக்கு கொழும்பில கொஞ்சம் வேலை இருக்குது. அதுதான் இப்போதைக்கு போகவில்லை.. என்றேன். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பல சிங்களவர்கள் என்னிடம் கேட்ட கேள்வியே, நீங்க எப்ப யாழ்ப்பாணம் போறீங்க? இதே கேள்விகள் கொழும்பிலும், அதன் சுற்றுப்புற நகரங்களிலுமுள்ள வடக்கு, கிழக்கு தமிழர்களிடம் அதிகளவில் கேட்கப்பட்டன, கேட்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. எதிர்காலத்திலும் கேட்கப்படும். பெரும்பான்னையாக வாழும் சிங்கள மக்களுக்கு கொழும்பிலும், அதன் சுற்றுப்புற நகரங்களிலும் தமிழர்களின் அதிகரிப்பும், அதனால் தமிழர்களுக்கு ஏற்படும் சிறியளவிலான அரசியல் ஆதிக்கமும் பிடிக்கவேயில்லை.

என்னவோ தெரியவில்லை, என்ன அன்னியோன்னியமாகப் பழகினாலும் சிங்களவர்கள் தமிழர்களை விரோதிகளாகவே பார்க்கின்றனர். அதுபோலவே தமிழர்களும் சிங்களவர்களை விரோதிகளாகவே நோக்குகின்றனர். இதற்கான அடிப்படைக்காரணங்கள் யாவரும் அறிந்த ஒன்றுதான். ஆனாலும், நட்பு ரீதியாக மிகவும் பிணைந்திருக்கின்றவர்களுக்கு இடையிலேயே இந்த அடிமன விரோதங்கள் வெளிப்பட்டுக் கொள்கின்றன. நிறைய சிங்கள நண்பர்களுடன் பழக்கமுள்ள எனக்கும் இந்த அனுபவம் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. அதுபோல, நானும் சில தருணங்களின் ஆழ்மனதிலுள்ள விரோத மனநிலையை அவர்களிடம் மிகவும் ஆக்ரோசமாக வெளிப்படுத்தி விடுகின்றேன். இது, எமது மரபணுக்களுக்குள் எமது முன்னோர்களால் விதைக்கப்பட்டு விட்டவை. என்ன செய்ய முடியும். இந்த விரோத மனப்பான்மையை போக்க நீண்ட காலம் தேவைப்படும்… என்று சில நண்பர்கள் கூறுவதுண்டு. ஆனாலும், எனக்கு அதில் பெரிய நம்பிக்கையில்லை. நாளைகூட என்னைப்பார்த்து, நீங்க எப்ப யாழ்ப்பாணம் போறீங்க? என்ற கேள்வி கேட்கப்படலாம்.
நன்றி : http://maruthamuraan.blogspot.com/2009/06/blog-post_24.html

Exit mobile version