தொடர்ந்தும் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் சபை நாகரிகமின்றி தலையிடுமாயின் உள்நாட்டிலிருந்து ஐ. நா. அலுவலகத்தை விரட்டியடிக்கும் மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
ஜி. எஸ். பி. வரிச் சலுகை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவிகள் உட்பட சர்வதேசத்தின் எந்தவொரு கடனுதவியும் இலங்கைக்குத் தேவையில்லை. சொந்த முயற்சியால் அபிவிருத்தியடையக் கூடிய சகல வளங்களும் இலங்கைக்கு உண்டு எனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு எதிரான ஐ. நா. சபையின் தீர்மானங்கள் குறித்து நேற்று வியாழக்கிழமை கருத்து வெளியிடுகையிலேயே எல்லாவல மேதானந்த தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
“கடந்த காலங்களில் இலங்கையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட புலி இயக்கத்தினருக்கு ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச நாடுகளும் உதவி செய்து வந்தன. இலங்கை அரசாங்கம் பயங்கரவாதிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்கும் போதும் பல்வேறு வகையில் தடைகளை சர்வதேசம் இலங்கைக்கு எதிராகச் செய்து வந்தது.
இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாக ஆராய ஐ. நாவுக்கு உள்ள தேவையென்ன?
பான் கீ மூனினால் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட முடியாது. இலங்கை தற்போது தடைகளின்றி சுயாதீனமாக செயற்பட்டு அபிவிருத்திப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றது. இதனை குழப்பியடிக்கும் வகையில் எவரும் செயற்படக் கூடாது. ஆசிய நாடுகளை சுயாதீனமாக செயற்பட மேற்கத்தேய நாடுகள் இடமளிக்க வேண்டும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ. எஸ். பி. வரிச் சலுகையும் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவிகளும் இன்றிக் கடந்த காலங்களில் இலங்கை மிக சிறப்பாக செயற்பட்டுள்ளது.
எனவே மேற்படி உதவிகள் கிடைக்காமல் போவது தொடர்பாக யாரும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை” என்றார்.