Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஐநா சீர்திருத்தம் கோரியுள்ளது இந்தியா.

ஐநா அவையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு பல நாடுகளின் உதவிகளையும் கோரி வருகிறது இந்தியா. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

பாதுகாப்புக் கவுன்சிலை விரிவுபடுத்தும் அதே சமயம், நிரந்தர உறுப்பினர்கள் மற்றும் நிரந்தரம் அல்லாத உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும் என்றும் இந்தியா சுட்டிக் காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியத் தூதர் ஹர்பிரீத் சிங் பூரி இக்கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவின் இக்கருத்தை பல நாடுகளும் வரவேற்றுள்ளன. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து அளிக்க வேண்டும் என இந்தியா, ஜப்பான், ஜெர்மனி, பிரேஸில் ஆகிய ஜி-4 நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த ஆண்டு நடைபெற உள்ள கூட்டத்தில் உறுப்பு நாடுகள் தங்களது கருத்துகளை அளிக்குமாறு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சிலின் தலைவர் ஜாஹிர் தனின் குறிப்பிட்டுள்ளார்.

உறுப்பினர்கள் அளிக்கும் பரிந்துரைகளை கலந்துரையாடல் மூலம் தீர்மானிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளின் செயல்குழு கடந்த 15 ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமும் இன்றி செயல்பட்டதால் அது கடந்த ஆண்டு கலைக்கப்பட்டது. பாதுகாப்பு மற்றும் அமைதி தொடர்பான முடிவுகள் எடுப்பதில் புதிதாக அதிக உறுப்பினர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டால் முடிவு எடுப்பது சிரமம் என்பதாலேயே நிரந்தர உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டாம் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்துகின்றனர்.

அதிக உறுப்பினர்களானால் ஒருமித்த கருத்தை எட்டமுடியாமல் போய் விடுகிறது என்றும் சுட்டிக் காட்டியுள்ளனர். பாதுகாப்புக் கவுன்சிலில் அதிக எண்ணிக்கையில் நிரந்தர உறுப்பினர்கள் இடம்பெற்றால் பாதுகாப்புக் கவுன்சில் உடையாது, அது மிகுந்த வலிமையுடன் செயல்படும் என்று நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கோரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்துகின்றனர். பாகிஸ்தான் தலைமையில் இத்தாலி உள்ளிட்ட 40 நாடுகள் இந்தியா, ஜப்பான், ஜெர்மனி, பிரேஸில் உள்ளிட்ட ஜி-4 நாடுகளின் கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. தற்போது ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சிலில் 15 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

இதை மேலும் விரிவுபடுத்தி 6 நிரந்தர நாடுகளையும் 4 நிரந்தரம் அல்லாத உறுப்பு நாடுகளையும் இணைக்க வேண்டும் என்று ஜி-4 நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆசியா, ஆப்பிரிக்கா நாடுகளில் தலா 3 மூன்று நாடுகளை நிரந்தர உறுப்பு நாடுகளாகச் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளன.

லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து தலா 2 நாடுகளை நிரந்தரம் அல்லாத நாடுகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தலைமையிலான நாடுகள் விரிவாக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், பெரும்பாலான நாடுகள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சிலில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை வரவேற்றுள்ளன.

Exit mobile version