இப்போது இலங்கையில் ஐ.நா இன் தீர்மானத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதாக இவர் செயற்படுவார். தனிநபர்களால் எந்த மாற்றமும் ஏற்படபோவதில்லை. ஏற்கனவே நடைமுறையிலுள்ள அதிகார மையங்களின் திட்டங்களை நிர்வகிப்பவர்களே இவர்கள். இப்போது இலங்கை இனக்கொலை அரசும் புலம்பெயர் தேசிய பிழைப்புவாதிகளும் எண்ணை மில்லியேனரான இவரைப் பிடித்து ஏதாவது சாதித்துவிடலாமா என்று பொறி தெறிக்கும் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை அரசு அதிர்ச்சியடைந்துள்ளது என்பதில் ஓரளவு உண்மையிருக்கிறது. நவனீதம் பிள்ளை தமிழர் என்பதால் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுகிறார் எனப் பூச்சாண்டி காட்டி சிங்கள மக்கள் மத்தியில் வாக்குப் பொறுக்கிவந்த காலம் முடிவடைந்துவிட்டதே அந்த அதிர்ச்சிக்குக் காரணம். இதனால் புதிய ஆணையாளர் நவனீதம்பிள்ளையைவிட கடும்போக்காளர் எனக் கதைபரப்ப ஆரம்பித்துள்ளது.
ஜோர்டானிய மன்னர் அப்துல்லாவிற்கும் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையேயான உறவு, ஜோர்டானுடன் இலங்கைக்கு காணப்படும் வர்த்தக உறவு போன்றவற்றையும் மீறி இலங்கை தனது மின்சாரக் கதிரை பூச்சாண்டிக்குப் புதியவரை நியமிக்க வேண்டிய நிலையிலுள்ளது.
இளவரசர் ‘மனித் உரிமை’ இலங்கை அரசுக்கு எதிராக கடுமையான ஊடகச் செய்தியைத் தெரிவிக்க, புலம்பெயர் நாடுகளின் தமிழ்த் தலைமைகள் தீபாவளி கொண்டாட, இலங்கை அரசு மின்சாரக்கதிரையைக் காட்ட புதிய நாடகம் உருவாகிவிட நாளெடுக்காது.
புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள அல்-ஹுசேன் (50), கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பிஹெச்டி பட்டம் பெற்றவர். இவர் ஜோர்டான் நாட்டுக்கான ஐ.நா.சபையின் நிரந்தர உறுப்பினராக பதவி வகித்து வந்தார். மேலும், 2007 முதல் 2010ஆம் ஆண்டு வரை அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ நாடுகளுக்கான ஜோர்டான் நாட்டுத் தூதராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.
ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையராக கடந்த 2008ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட நவநீதம் பிள்ளையின் பதவிக்காலம் 2012ஆம் ஆண்டுடன் முடிவடைந்தது. இந்நிலையில் அவரது பதவிக்காலம் 2014ஆம் ஆண்டு ஜூன் வரை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டிருந்தது.