தமிழ்நாட்டுத் தமிழர்களின் தொப்புள்கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் கடலோரப்பகுதியில் மிகக் கொடூரமான முறையில் கொன்று குவிக்கப்பட்ட மே 18 உலக வரலாற்றில் துக்கநாள் ஆகும். இந்த நாளில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் அனைவருக்கும் வீர வணக்கம் செலுத்துவோம்.
அணு ஆயுத வல்லரசுகளின் உதவியுடன் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களை ஜனாதிபதி ராஜபக்ஷ கொன்றுகுவித்து இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடையும் போதிலும் இனப் படுகொலைக்கு காரணமானவர்களுக்கு இன்றுவரை தண்டனை கிடைக்கவில்லை. இன்னுயிர் நீத்த தமிழர்களுக்கு இன்னும் நீதி வழங்கப்படவில்லை.
இரண்டாம் உலகப் போரில் ஜேர்மனியில் 60 லட்சம் ஐரோப்பிய யூதர்கள் ஹிட்லர் அரசால் மிகக் கொடூரமான முறையில் படுகொலைசெய்யப்பட்ட பிறகு, உலகில் நடத்தப்பட்ட மிகப்பெரிய இனப்படுகொலை ஈழத் தமிழர் படுகொலைதான்.
இலங்கையில் இனப்படுகொலை நடத்தப்பட்டதை ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் அமைத்த நிபுணர் குழு உறுதி செய்துள்ள நிலையில், அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய இந்தியா உள்ளிட்ட வல்லரசு நாடுகள், கொலை காரர்களை மயிலிறகால் வருடிவிடுவது வேதனை அளிக்கிறது. இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்துவதற்காக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும் அதன் மீது இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மிகக் கொடூரமான முறையில் அரங்கேற்றப்பட்ட ஈழத் தமிழர் படுகொலைக்கு நீதி பெற்றுத்தர வேண்டிய பெரும் பொறுப்பு அவர்களின் சொந்தங்களான தமிழகத் தமிழர்களுக்கு உண்டு. இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைத்து தனித் தமிழீழம் அமைப்பது குறித்து உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடையே ஐ.நா. மூலம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதற்கு முன்பாக 1999ஆம் ஆண்டில் கொசோவா நாட்டில் செய்யப்பட்டதைப் போன்று இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகள் உடனடியாக ஐ.நாவின் நேரடி நிர்வாக வரம்புக்குள் கொண்டுவரப்பட வேண்டும்.
தமிழர்களைக் கொன்று குவித்த ஜனாதிபதி மஹிந்தவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த இலக்கை நோக்கிப் போராட தமிழ்நாட்டுத் தலைவர்கள் அனைவரும் இனப்படுகொலை நாளான்று உறுதி ஏற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் .