Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஐக்கிய இலங்கைக்குள்ளான சுயமரியாதை சுயாட்சி தீர்வை விக்கினேஸ்வரனின் கருத்துகள் வலியுறுத்துகின்றன : மனோ

ஐக்கிய இலங்கைக்குள்ளான சுயமரியாதை சுயாட்சி தீர்வை விக்கினேஸ்வரனின் கருத்துகள் வலியுறுத்துகின்றன
– சிங்கள அறிவுஜீவிகள் புரிந்துகொள்ள வேண்டும் மனோ

இந்த நாட்டை பிரிக்காமல், ஆயுதத்தை தூக்காமல், அதிகாரத்தை பகிர்ந்துகொண்டு வாழ நாங்கள் தயார் என்றும், இது எங்கள் தாய்நாடு என்றும், வடமாகாண முதல்வர் விக்கினேஸ்வரன் மிகதெளிவான செய்தியை சிங்கள அறிவுஜீவுகளுக்கு அறிவித்துள்ளார்.

அத்துடன் வடமாகாணசபை புலம்பெயர்ந்த தமிழர்களின் கைப்பொம்மையாக செயற்பட்டு தனித்தமிழீழத்தை நோக்கி பயணிக்கின்றது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து சிங்கள மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி அரசியல் செய்யும் தென்னிலங்கை கட்சிகளை வழிக்கு கொண்டு வருவது உங்கள் பொறுப்பு என்றும் தென்னிலங்கை அறிவுஜீவுகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடக்கு மக்களின் மக்கள் ஆணையை பெற்றுள்ள முதல்வரின் இந்த கருத்துகள் தெற்கில் தேசிய நல்லிணக்க கதவுகளை திறக்க வேண்டும். அவரது இந்த உரையை முழுமையாக நமது கட்சியின் ஊடக செயலகம் சிங்கள மொழியில் பெயர்த்து விநியோகிக்க உள்ளது. இந்த நாட்டில் உண்மை அமைதியை காண விரும்புவோர் என்ற முறையில் நீங்கள் இந்த முயற்சிக்கு உதவிட வேண்டும் என மொறட்டுவை கொரக்கான கிராமத்தில் சிங்கள ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகரசபை உறுப்பினரும், நிர்வாக செயலாளருமான பிரியானி குணரத்ன தலைமையில் முன்னணியின் மகளிர் இணைய வேட்பாளர்கள் நந்தினி விஜெரட்னம், பானு சிவப்பிரகாசம் ஆகியோருடன் பெருந்தொகையான பொதுமக்களும் கலந்துகொண்டு இன்று நடைபெற்ற இந்த மக்கள் சந்திப்பில் மனோ கணேசன் சிங்கள மொழியில் மேலும் உரையாற்றியதாவது,

சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களின் நற்செய்தியை கொண்டு செல்லும் நற்பணியை நமது கட்சி நீண்ட காலமாக செய்து வருகிறது. இதன்மூலம் இந்த நாட்டில் உண்மையான சமத்துவத்தின் அடிப்படையில் அமைதியை காண உழைப்பது எங்கள் நோக்கங்களில் ஒன்று. அதற்கு உங்கள் கிராமத்தை சேர்ந்த எங்கள் கட்சி பணியாளர் பிரியானி குணரத்ன பெரும் பங்காற்றுகின்றார். இன்று அவருடன் இணைந்து எங்கள் மகளிர் இணைய பணியாளர்கள் நந்தினியும், பானுவும் பணியாற்ற முன்வந்துள்ளனர்.

சிங்கள மக்களுடன் ஐக்கியமாக வாழவே நாங்கள் விரும்புகின்றோம். ஆனால் அந்த ஐக்கியம் சமத்துவத்துடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். இதையே வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரனும் வலியுறுத்துகிறார். இதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் .

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் தீர்வுக்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பங்குபற்றவில்லை. இதை காரணம் காட்டி கூட்டமைப்புக்கு அரசியல் தீர்வில் அக்கறை இல்லையென தென்னிலங்கை கட்சிகள் பிரச்சாரம் செய்கின்றன. உண்மை அதுவல்ல. பேச்சுவார்த்தை செய்வதற்கான நிகழ்ச்சி நிரலை தயாரிக்க இந்த அரசு தயார் இல்லை. எதைபற்றி பேசுவோம் என தெரியாமல் உட்கார அவர்கள் தயார் இல்லை. இந்த நாட்டில் கடந்த 60 வருடங்களாகவே பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு சிங்கள தலைவர்களுடன், தமிழ் தலைவர்கள் பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளார்கள். ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளன. அவை நடைமுறை படுத்தப்படவில்லை. ஆனால், அந்த ஆவணங்கள் நம்மிடம் இருக்கின்றன. இந்த அரசின் ஆட்சியிலும் சர்வ கட்சி மாநாடு நடத்தி, உங்கள் அமைச்சர் திஸ்ஸ விதாரண தலைமையில் ஒரு ஆவணம் தயாரிக்கப்பட்டு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதுதவிர இந்த நாட்டு அரசியல் யாப்பில் 13ம் திருத்தம் இருக்கிறது. இதை மேலும் அபிவிருத்தி செய்வோம் என இந்த நாட்டு ஜனாதிபதி, ஐநா செயலாளர் நாயகத்துக்கு எழுத்துமூலம் உறுதி வழங்கியுள்ளார்.

இந்த ஆவணங்கள் எதையும் பேச்சுவார்த்தை மேஜையில் வைக்க அரசாங்கம் தயார் இல்லை. ஆரம்பத்தில் இருந்து மீண்டும் ஆரம்பிப்போம் என்று அரசு சொல்கிறது. இது படித்து, வளர்ந்து, பல்கலைக்கழகம் வந்துவிட்ட இளைஞனை மீண்டும் முன்பள்ளியில் சேர்ந்து அரிச்சுவடி படி என்று சொல்வதற்கு ஒப்பானதாகும். இதை நாம் ஏற்றுகொள்ள மாட்டோம். ஏற்றுக்கொண்டு மீண்டும் ஏமாற மாட்டோம். இதைதான் விக்கினேஸ்வரன் சொல்கிறார். பேச்சுவார்த்தை ஆவணங்களை மேஜையில் இந்த அரசாங்கம் வைக்கட்டும். நானே யாழ்ப்பாணம் சென்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் கொழும்பு அழைத்து வருகிறேன். நேர்மையான அரசியல் தீர்வு ஏற்பட்டு இந்த நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழும் நல்ல காலம் பிறந்தால் நான் அரசியலில் இருந்து விடைபெற்று என் சொந்த வாழ்வுக்கு திரும்பி விடுவேன். விக்கினேஸ்வரனும் அப்படிதான் என் நான் நம்புகிறேன். அவர் அரசியல்வாதி அல்ல. இந்த நாட்டில் வடக்குக்கும், தெற்குக்கும் இடையில் உண்மையான இணைப்பு ஏற்படவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக நாங்கள் எல்லோரும் சேர்ந்து கொழும்பில் வாழ்ந்த அரசியல்வாதி இல்லாத அவரை அரசியலுக்குள் தள்ளிவிட்டோம். இதை தயவு செய்து நீங்கள் புரிந்துகொள்ளுங்கள்.

Exit mobile version