Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஏழை இந்தியாவில் வேகமாக உருவாகும் கோடீஸ்வரர்கள்:தாஸ்

இந்திய நாடு மக்கள் தொகை எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆனால் ஏழைகளின் எண்ணிக்கையில் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் 2007ம் ஆண்டில் உலகில் எந்த நாட்டிலும் காணப்படாத வேகத்தில் கோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளார்கள்.

2006ம் ஆண்டில் டாலர்கள் மதிப்பீட்டில் ஒரு லட்சம் கோடீஸ்வரர்கள் இந்தியாவில் இருந்தனர். 2007ம் ஆண்டில் இத்துடன் 23 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர் என்று மெர்லில் லின்ச் கேப் ஜெமினி என்ற செல்வம் மற்றும் சொத்து நிறுவனம் கூறுகிறது.

இதே சமயத்தில் அரசின் மானிய உதவி இருந்த போதும் நாளொன்றுக்கு ஒரு டாலருக்கும் (சுமார் 42 ரூபாய்) குறைந்த வருமானத்தில் வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை 35 கோடி. இரண்டு டாலருக்கும் குறைவான வருமானத்தில் வாழ்வோர் 70 கோடி. அதாவது ஒவ்வொரு கோடீஸ்வரருக்கும் இணையாக 7000 ஏழைகள் உள்ளனர். இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2006ல் 20.5 சதவீதமாக இருந்தது. 2007ம் ஆண்டில் இது 22.7 சதவீதமாக உயர்ந்தது.

உலகின் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை வளர்ச்சி 9.4 சதவீதமாக இருக்கிறது. உலக கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை முதல்முறையாக ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. அமெரிக்கா பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள போதும் அங்கு 30 லட்சத்துக்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்கள் உள்ளனர். உலகில் உள்ள கோடீஸ்வரர்களில் மூவரில் ஒருவர் அமெரிக்கர்.

உலகில் உள்ள செல்வந்தர்களின் மொத்த செல்வ மதிப்பீடு ஏறத்தாழ 41 லட்சம் கோடி டாலர்களாக அதிகரித்துள்ளது. அதாவது ஒரு செல்வந்தரின் செல்வ மதிப்பு சராசரியாக 40 லட்சம் டாலர்களாகும்.

இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை உயர்வைக் கணக்கிடும் நிறுவனங்கள் ஏழைகளின் எண்ணிக்கை உயர்வைக் கண்டு கொள்வதில்லை. அதற்குரிய காரணங்களையும் கூறுவதில்லை. இன்று கோடீஸ்வரர்களாக மாறியவர்கள் அனைவரும் முன்னாள் அன்றாடங்காய்ச்சிகள் அல்ல. வேண்டுமானால் அவர்கள் கோடீஸ்வரர்களாக இல்லாமல் லட்சாதிபதிகளாக இருந்திருப்பார்கள். சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்று கூறப்படுவதை சுரண்டும் நபர்களது உலகம் என்று மாற்றிக் கூறலாம்.

Exit mobile version