Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஏற்கனவே உள்ள மாகாண சபை முறையில் சில திருத்தங்களைச் செய்வதே அரசின் எண்ணம்!:அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா.

 எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில்,   யாப்பு மாற்றத்திற்கான ஆணையாக, மகிந்த சிந்தனையை முன்வைத்து மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைப் பலத்தின் மூலம்   அரசியல் மாற்றங்களை செய்யவுள்ளதாகஊடக அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா  ’The Nation’ பத்திரிகைக்கு அவர் தெரிவித்துள்ளார்.

இதில் வடக்கு, கிழக்கு இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏற்கனவே உள்ள மாகாண சபை முறையில் சில திருத்தங்களைச் செய்வதே அரசின் எண்ணம் எனக் குறிப்பிட்டுள்ள அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா, செனற் சபை ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்ததும் புதிய யாப்பு சீர்திருத்தத்தை மேற்கொள்வதற்கான அரசியல் நிர்ணய சபை ஒன்றை கூட்டுவதென்றும், அதன் மூலம் இம் மாற்றங்களை மேற்கொள்வது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றம் இரு சபைகளைக் கொண்டதாக இருக்கும் என்றும், அதில் ஒன்று பிரதிநிதிகள் சபையாகவும், மற்றையது செனற் சபையாகவும் அமையும் எனவும் குறிப்பிட்ட அமைச்சர், உருவாக்கப்படவுள்ள செனற் சபையின் அதிகாரங்கள் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

பிரதிநிதிகள் சபை 225 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். தொகுதிவாரி முறையின் மூலம் நாடு 160 தொகுதிகளாக பிரிக்கப்பட்டு, 5 இரட்டை அங்கத்தவர் தொகுதிகளுடன் மொத்தம் 165 தொகுதிவாரிப் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவர் என அமைச்சர் லக்ஸ்மன் யாப்பாவை மேற்கோள் காட்டி அப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதில் மிகுதி 60 வெற்றிடங்களும் தற்போது நடைமுறையில் இருக்கும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் மூலம் நிரப்பப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

செனற் சபையானது துறைசார் நிபுணர்களையும், மதகுருக்களையும் உறுப்பினர்களாகக் கொண்டு அமைந்திருக்கும். இந்த உறுப்பினர்களுக்கான தெரிவு பற்றியோ அன்றி நியமனம் பற்றியோ எவ்வித விபரமும் இச்செய்தியில் தெரிவிக்கப்படவில்லை.

அதேவேளை, ஜனாதிபதி முறையில் சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அப்பத்திரிகை, நாடாளுமன்றத்துக்கு பதில் சொல்லவல்ல ஜனாதிபதி முறை உருவாக்கப்படும் என்றும், அமைச்சரவையை மேற்பார்வை செய்வதற்கு ஓர் ஆலோசனை சபை அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

அதேவேளை, அரசின் தலைவராகவும், அரசாங்கத்தின் தலைவராகவும் ஜனாதிபதியே இருப்பார் என்பதிலும் மாற்றங்கள் இருக்காது எனவும் அச்செய்தி சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், வடக்கு – கிழக்கு இணைப்பற்ற, மகாணசபைகளை செழுமைப்படுத்துவது என்ற விடயத்தினை மட்டுமே சுட்டிக்காட்டியுள்ள இப்பத்திரிகை, இந்தியாவில் காணப்படும் பஞ்சாயத்து முறையைக் கருத்தில் எடுத்து மாகாண மட்டத்தில் ஒரு ஜென சபா எனும் மக்கள் சபையையும், கிராம மட்டத்தில் கம் சபா எனப்படும் கிராம சபையையும் உருவாக்கப்படவுள்ளதாகவும் கூறியுள்ளது.

Exit mobile version