Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஏன் அப்பாவி மீனவரைக் கொன்றோம் : ஜெயலலிதா சர்வாதிகாரம்

கூடங்குளம் போராட்டக் குழுவினர் போலீசாரை கட்டையால் தாக்கியதால் தற்காப்புக்காக போலீசார் நடவடிக்கை மேற்கொண்டதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார். தற்காப்புக்காக காவலர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதேவேளை, கூடங்குளம் பகுதியில் போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவை திரும்பப் பெறாவிட்டால் இன்னும் 2 நாட்களில் தமிழகம் தழுவிய சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்திந்திய மீனவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அனைத்திந்திய மீனவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த கடலோர மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் ஜெயக்குமார், அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கத்தலைவர் எஸ்.ஏ.மகேஷ் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இடிந்தகரை கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக பெண்கள், குழந்தைகள் என அனைவரும் கடந்த 25 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். போராட்டம் கடந்த ஒரு ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
கூடங்குளம் பகுதி மக்கள் தங்களின் வாழ்வாதாரத்துக்காகவும், வாழ்விடத்துக்காகவும் போராடி வருகிறார்கள். இவர்களை காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் விரட்டி உள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
மேலும், கூடங்குளம் பகுதியில் போடப்பட்டு உள்ள 144 தடை உத்தரவை வாபஸ் பெறவேண்டும் என்று கோரி போலீஸ் டி.ஜி.பி.யை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம். மனுவின்மீது உரிய நடவடிக்கை எடுத்து தடை உத்தரவை திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் வரும் 2 நாட்களில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றனர் அவர்கள்.

Exit mobile version