Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஏனைய துறைகளுக்கும் பரவும் தென்னாபிரிக்க தொழிலாளர் போராட்டம்

லோன்மின் மாரிக்கானா பிளாட்டினம் சுரங்கத்தில் ஆரம்பித்த வேலைநிறுத்த அலை இப்பொழுது தென் ஆபிரிக்காவின் பிளாட்டினம், தங்கம் மற்றும் நிலங்கரிச் சுரங்கத் தொழில்களையும் சூழ்ந்து, போக்குவரத்து இன்னும் பிற துறைகளுக்கும் பரவியுள்ளது.
தென்னாபிரிக்கா நெடுகிலும் மொத்தத்தில் 100,000 தொழிலாளர்கள் இப்பொழுது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 16ம் திகதி பொலிசார் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த மாரிக்கானா தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 34 பேரைக் கொன்றனர், 78 பேரைக் காயப்படுத்தினர். தொழிலாளர்கள் 22 சதவிகித ஊதிய உயர்வைப் பெற்றபின்தான் கடுமையான போராட்டம் நிறுத்தப்பட்டது. அவர்களுடைய உறுதியான நிலைப்பாடு இன்னும் பலரை முதலாளிகளுக்கு எதிராகப் போராடி நிற்பதற்குத் தைரியத்தைக் கொடுத்துள்ளது.
கோல்ட்பீல்ட்ஸ், ஆங்கிலோகோல்ட் இன்னும் பல சுரங்க நிறுவனங்களில் திடீர் வேலைநிறுத்த நடவடிக்கைகள் ஏற்பட்டுவிட்டன. தொழிலாளர்கள் மீண்டும் 22% ஊதிய உயர்வைக் கோரிய வகையில் தென்னாபிரிக்காவில் தங்கச் சுரங்கங்களில் முழுமையாக 39% திறன் பாதிக்கப்பட்டுவிட்டது.
ஆல்கிலோகோல்ட் அசன்டி, மூன்றாம் மிகப் பெரிய தங்க உற்பத்தி நிறுவனம் அதன் தென்னாபிரிக்க செயற்பாடுகள் அனைத்தையும் இந்த வாரம் நிறுத்தி வைத்துள்ளது. அதன் 35,000 தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் செப்டம்பர் 20ம் திகதி கோபனோங்கில் தொடங்கிய திடீர் வேலைநிறுத்தத்தில் சேர்ந்துள்ளனர்.
சரக்கு மற்றும் போக்குவரத்துத் துறையில் 12% ஊதிய உயர்வைக் கோரி 22,000 தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்துள்ளது.
தொழிலாளர்களுக்கு முக்கிய அச்சுறுத்தல் அரசாங்கம் மற்றும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் மூலம்தான் வருகிறது.
தொழில்துறை மந்திரி மில்ட்ரெட் ஒலிபன்ட் “சமீபத்திய முறையற்ற [சட்டவிரோத] வேலைநிறுத்தங்கள் நியாயப்படுத்தப்பட முடியாதவை”, மேலும் “சட்டமற்ற நிலைக்கு எந்தக் காரணமும் இல்லை” என்று அறிவித்தார்.

Exit mobile version