லண்டன் பிரன்ட்ஸ் ஹவுசில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அருந்ததி ராய் பேசும் போது இலங்கை இனப்படுகொலை குறித்துக் குறிப்பிட்டார். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையில் பல்லாயிரக் கணக்கான அப்பாவிமக்கள் கொல்லப்படிருக்கிறார்கள் இன்று இலங்கையில் இந்திய நிறுவனங்கள் முதலிடுகின்றன, சீனத் துறைமுகம் உருவாகியுள்ளது, பாக்கிஸ்தான் முதலீடுகள் சென்றடைகின்றன. அமரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் முதலிடுகின்றன. மிகப் பெரும் இனப்படுகொலை நடைபெற்ற போதும், உலக மக்கள் மத்தியில், குறிப்பாக சமூகம் குறித்துப் பேசுபவர்கள் மத்தியிலும் கூட மௌனம் தான் நிலவுகிறது. இப்படுகொலை உலகத்தின் முன் பேசப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். அத்துடன் விழா ஏற்பாட்டாளர்களை இலங்கைத் தமிழர் ஒரு வரைப் பேசுவதற்கு அழைத்தும் இறுதி நேரத்தில் அது கைகூடாமல் போய்விட்டதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து கூறுகையில் இலங்கையில் எவ்வாறு மக்கள் கொல்லப்பட்டார்கள் என்ற உதாரணத்தை இந்தியா பாகிஸ்தான் போன்ற அரசுகளும் தமது மக்களுக்கு எதிராகப் பிரயோகிப்பதற்கு முனையலாம். இது குறித்து உலக மக்கள் இன்னும் மௌனமாக இருந்தால் ஏனைய நாடுகளும் இதே வகையான இனப்படுகொலைகளை மேற்கொள்ளும் என்றார். தவிர, ஈழத் தமிழர்கள் இந்தியாவில் கஷ்மீரி மக்களோடும், பாகிஸ்தானில் புலோச் இன மக்களோடும் இணைந்து ஏன் குரல் போராடக் கூடாது எனக் கேள்வியெழுப்பினார்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமானோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.