Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஏகாதிபத்திய எதிர்ப்பு போருக்கு தயாராகுங்கள்! : வெனிசுலா மக்களுக்கு சாவேஸ் அறைகூவல்!

போருக்கு தயாராவதிலும், போருக்கு தயாராக மக்களுக்கு உதவுவதிலும் நாம் ஒரு நாளைக் கூட வீணாக்கக் கூடாது என்று வெனிசுலா ஜனாதிபதி ஹூயூகோ சாவேஸ் தம்முடைய வாராந்திர மக்கள் சந்திப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அறைகூவல் விடுத்துள்ளார்.

கொலம்பியாவில் உள்ள ஏழு ராணுவ முகாம்களை அமெரிக்க ராணுவம் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்காவும், கொலம்பியாவும் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தை வெனிசுலா உள்ளிட்ட அண்டை நாடுகள் எதிர்த்தன. இருப்பினும் ஒப்பந்தம் கையெழுத்தானதையடுத்து சாவேஸ் இந்த அறைகூவலை விடுத்துள்ளார்.

நாம் ராணுவமாவோம், உழைப்பாளிகள், மகளிர் அனைவரும் தாய்நாட்டைக் காக்க தயாராக வேண்டுமென்று சாவேஸ் குரல் கொடுத்தார். போரைத் தவிர்க்க போருக்கு தயாராவதே சிறந்த வழி என்றும் அவர் அறிவித்தார். அமெரிக்கா – கொலம்பியா ஒப்பந்தம் செப்டம்பர் 30-ல் கையெழுத்தானது. அதற்குப் பின் கொலம்பியா எல்லைப் பகுதியையொட்டிய வெனிசுலா பகுதிகளில் ராணுவம் அதிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கொலம்பியாவில் உள்ள ஏழு ராணுவ முகாம்களில் அமெரிக்க ராணுவத்தினர் எண்ணிக்கை 1,400 ஆக உயர்த்தப்படும். பொலிவியா, ஈகுவடார் மற்றும் வெனிசுலா ஆகிய அண்டை நாடுகள் தொடக்கம் முதல் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து வருகின்றன.

சாவேஸின் அறைகூவல் குறித்து ஐ.நா. பாதுகாப்புக்குழுவிடமும், அமெரிக்க நாடுகளின் அமைப்பிடமும் முறையிடப் போவதாக கொலம்பியா கூறியுள்ளது.

Exit mobile version