இவ்வாறு ஏகாதிபத்திய உலகமயமாதலின் பாதிப்புகளுக்கு ஏதிராக விழிப்படைவோம் என்னும் தொனிப்பொருளில் சர்வதேச மக்கள் ஒத்துழைப்பு அமையம் 01.01.2011 அன்று யாழ் நகரில் நாடத்திய ஏகாதிபத்திய எதிர்ப்பு தினம் மற்றும் கியூபா விடுதலை தின நிகழ்வுகளில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய புதிய ஜனநாயக மாக்சிய லெனிசக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சி.கா. செந்திவேல் குறிப்பிட்டார்.
யாழ். பலநோக்குக் கூட்டுறவுச் சங்க கேட்போர் கூட மண்டபத்தில் தோழர் கே.ஏ. சீவரட்ணம் தலைமையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை நடை பெற்ற இந்நிகழ்வில் சி.கா. செந்தில்வேல் தொடர்ந்து பேசுகையில்;
யாழ்ப்பாணத்தில் பல வருடங்களுக்குப் பின்பு முதல் தடவையாக ஏகாதிபத்திய எதிர்ப்பு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இலங்கையில் இடதுசாரி இயக்கம் ஆரம்பித்த காலத்திலிருந்து ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வந்தவர்கள் இடதுசாரிகள். 1935 டிசம்பர் மாதம் 18ஆம் திகதி இடதுசாரி இயக்கம் சமசமாஜக் கட்சியாக ஆரம்பிக்கப்பட்ட போது பல்வேறு தரப்பினரும் இணைந்திருந்தனர். காலப் போக்கில் பல பின்னடைவுகள் பலவீனங்கள் திசை விலகள்கள் ஏற்பட்டன உண்மை எனினும் நேர்மையான மாக்சிய லெனினிச இடதுசாரிக் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் மத்தியில் தெளிவான சிந்தனை இருக்கிறது. இன்று உலகம் பூராகவும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அலை அலையாக எழுந்து வருகிறது.
எவ்வாறு ஏழை மக்களைச் சுரண்டுவது கோடி கோடியாகப் பணத்தைச் சம்பாதிப்பது என்று உள்ளுர் முதலாளிகளுக்கும் உலக முதலாளிகளுக்கும் கற்றுக் கொடுக்கும் மத்திய நிலையமாக அமெரிக்க ஏகாதிபத்தியம் விளங்குகிறது. உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் ஏகாதிபத்திய வாதிகளுக்கு அனுசரணையாக எழை நாடுகளைச் சுரண்டியும் வளங்களை கொள்ளையடிக்கும் கைங்கரியத்தைக் கச்சிதமாக நிறைவேற்றி வருகின்றது.
முதாளித்துவம் இலாபத்தை நோக்கமாகக் கொண்ட இறக்குமதி நுகர்வுக் கலாசாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. உள்ளுர் நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி பற்றி இவர்கள் சிந்திப்பதில்லை. அப்படிச் சிந்தித்தாலும் அது இலாப நோக்கம் கொண்டதாகவே அமைகிறது. உள்ளுரில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறிப் பயிர்களுக்கு இரசாயன மருந்துகளை பயன்படுத்தப் பழக்கியது இலாப நோக்கம் கொண்ட முதலாளித்துவ ஏகாதிபத்திய பல்தேசிய நிறுவனங்கள் ஆகும்.
ஈராக் நாட்டில் அந்நாட்டு எண்ணெய் வளங்களைக் கொள்ளையடிக்க ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் படைகளைக் குவித்து இலட்சக் கணக்கான மக்களை கொன்று ஒழித்து இரத்த ஆறு ஓடச் செய்தது அமெரிக்க ஏகாதிபத்தியம்.
இலங்கையில் 1977 இல் பதவிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனா அரசு ஏகாதிபத்தியவாதிகளுக்குச் சார்பாக திறந்த பொருளாதாரக் கொள்கையை அறிமுகப் படுத்தியது. சிங்கள மக்கள் மத்தியில் ஏகாதிபத்தியத்திற்க்கு எதிர்ப்பு ஏற்படாதிருக்க தாழ் மட்டத்தில் இருந்த இனப்பிரச்சினையை உயர்நிலைக்குச் கொண்டு வந்தது. உலகவங்கி, சர்வதேச நாணயநிதியம் என்பவற்றின் ஆலோசனைப்படி செயல் பட்டது அதனை எதிர்த்து சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தம் செய்த 80000 அரச ஊழியர்கள் வீதிக்கு விரட்டப்பட்டார்கள். இவற்றுக்குப் பின்னால் அன்றும் ஏகாதிபத்திய சத்திகளே வழிகாட்டி நின்றன. இன்றும் அதே சக்திகள் தான் அரசாங்க தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வை இன்றும் அரசாங்கம் மறுப்பதற்கு வழிகாட்டி நிற்க்கின்றன.
கடந்த 30 ஆண்டு கால இன விடுதலைப் போராட்ட வரலாற்றில் மூன்று இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஏகாதிபத்தியத்தை விளங்கிக் கொள்ளாது ஏகாதிபத்தியத்தின் துணையுடன் தமிழ் மக்கள் தமது உரிமைகளையும் விடுதலையையும் பெற்று விடலாம் என்று நம்பி இருப்பது மேசமான எதிர்பர்ப்பாகும். அதே போன்று இந்திய பிராந்திய மேலாதிக்க வல்லரசைய் நம்பி அவர்களது வழிகாட்டலையும் ஆலோசனைகளையும் எதிர்பர்த்து நிற்ப்பதும் மேசமான பிற்போக்கு நிலைப்பாடாகும். எனவே தமிழ் மக்களும் ஏனைய தேசிய இனங்களும் சிங்கள உழைக்கும் மக்களுடன் இணைந்து ஏகாதிபத்தியத்தை எதிர்க்க் ஓர் அணியில் திரளவேண்டும். அதன் மூலமே தமிழ் மக்களை ஒடுக்கி வரும் பேரினவாத முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தை எதிர்த்து நிற்கவும் முடியும்
இன்றைய தினம் கியூபாவின் விடுதலைத்தினமாகும். ஜன்பத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிடல் கஸ்ரோ, சேகுவோரா போன்றவர்கள் தலைமையில் கியூபா மக்கள் போராடி தமது விடுதலையை வென்றெத்தார்கள் அன்றில் இருந்து இன்று வரை அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கியூபா மக்கள் தொடர்ந்து போரடி வருகிறார்கள். அதே வேளை சோசலிசக் கட்டுமானங்களையும் பல்வேறு சவால்கள் மத்தியில் முன்னெடுத்து வருகிறார்கள் மக்களது அடிப்படை தேவைகளை நிறைவேற்றியும் வருகிறார்கள். கல்வி சுகாதாரம் மற்றும் சமூக நலத்திட்டங்களை முன்னெடுத்தும் வருகிறார்கள். கியூபாவில் உயர்ந்த கட்டடம் அரச பொது மருத்துவமனையாகும் ஏகாதிபத்திய நாடுகளில் உயர்ந்த கட்டடம் சர்வதேச வர்த்தக மையம். போன்ற தனி நபர் லாபம் பெறும் கட்டிடங்கள் ஆகும். டெங்கு நோயைப் பரப்பும் நுளம்பை ஒழிக்க கியூபா வைரசு ஒன்றைக் கண்டு பிடித்துள்ளது. அந்த வைரசை இங்கு கொண்டு வர இலங்கை அரசாங்கம் முழுமனதாக விரும்பவில்லை. காரணம் நுளம்புத்திரி வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் கமிஷன் இல்லாமல் போய்விடும் என்பதாலாகும்.
ஜம்பது ஆண்டுகலாக கியூபா நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீனியையோ ஏனைய உற்பத்திகளையோ ஏனைய நாடுகளுடன் வர்த்தகம் செய்யவிடாது அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதித்து வந்துள்ளது. அவ்வாறு இருந்தும் வீரம் மிக்க கியூபா மக்களும் அவர்களது தலைவரான பிடல் கஸ்ரோவும் ஏகாதிபத்தியத்துக்கு ஏதிராக துனிவுடன் போரடி வருவது நம் எல்லோருக்கும் சிறந்த முன் உதாரணமாகும். தமிழ் மக்களும் இலங்கை அனைத்து மக்களும் ஏகாதிபத்தியத்தை ஏதிர்த்து பரந்து பட்ட போரட்டங்களை முன்னெடுப்பதோ நமக்கு முன்னாள் உள்ள கடமையாகும்.
தோழர்கள் எஸ்.சிவபாலன், க. தணிகாசலம், க. சிவராசா, த. பிரகாஸ் ஆகியோரும் உரை நிகழ்த்தினர். கா. கதிர்காமநாதன் நன்றி நவின்றார்.