ரெலோ:
தமிழரசுத் தந்தை செல்வா அவர்களின் உருவச்சிலை நேற்று நள்ளிரவு திருகோணமலை சிவன் கோவிலடியில் துண்டிக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளதையிட்டு நாம் எமது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.
காவல் அரணுக்கு பக்கத்தில் இருந்த தந்தை செல்வாவின் சிலை சேதமாக்கப்பட்டது. சிங்கள இனவெறி நடவடிக்கை அரச ஆதரவுடன் செயற்படுத்தப்பட்டுள்ளது.
சர்வதேசத்திற்கு தமிழ் இனத்தின் பிரச்சினைகளை கொண்டுச்சென்றதால் சகிக்க முடியாத இனவெறிச் சக்திகள் இந்தக் கோழைத்தணமான ஈணச் செயலைச் செய்துள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் தமிழ் இனத்தை அச்சுறுத்த முடியாது.
தமிழரசு தந்தையின் வழியில் தமிழ் தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை என்பவற்றை வென்றெடுத்து சுயாட்சித் தமிழத் தரப்பை நிறுவுவதற்கு தமிழ் மக்களை கடுமையாக உழைக்க வேண்டும் என்ற செய்தியையே இந்த இனவெறி நடவடிக்கை காட்டி நிற்கின்றது.
சிலையாக நிற்பதற்கு கூட தமிழருக்கு உரிமை இல்லை என்பதை சர்வதேசத்திற்கு திருகோணமலை சிலைத் தகர்ப்பு காட்டி நிற்கின்றது.
எம்.கே சிவாஜிலிங்கம
அரசியல் தலைவர்,
தமிழ் ஈழ விடுதலை இயக்கம்(ரெலோ),
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.
மனோ கணேசன்:
திருகோணமலையில் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் சிலையின் தலைப்பகுதி உடைத்து சேதமாக்கப்பட்டிருப்பதாக திருகோணமலையிலிருந்து வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தின் முழுமையான நிர்வாகத்திற்கு உள்ளிருக்கும் நகரில் நடத்தப்பட்டுள்ள இந்த காட்டுமிராண்டித்தனமான செயல் எம்மை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களிலிருக்கின்ற தமிழர்களின் அரசியல் சமூக, கலாசார, பொருளாதார அடையாளங்கள் அனைத்தையும் அழிக்கும் பேரினவாத நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெவித்துள்ளார்.
தந்தை செல்வா தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட ஒடுக்கு முறைகளுக்கு எதிராக சாத்வீகப் போராட்டத்தை முன்னெடுத்த பெருந்தலைவராவார். மலையக தமிழர்களின் குடியுரிமை பறிப்பிற்கு எதிராக கிளர்ந்து எழுந்தவர் ‘ஈழத்து காந்தி’ என்று போற்றப்படும் தந்தை செல்வா அவர்களை இலங்கையில் வாழ்கின்ற எல்லாத் தரப்பு தமிழ் மக்களும் தேசிய தலைவராக ஏற்றுக் கொண்டு போற்றி வணங்குகின்றார்கள்.
இன்று ஒட்டுமொத்த இனத்திற்கும் எதிராக நிகழ்த்தப்படும் பல்வேறு பேனவாத அனர்த்தங்களைப் பற்றி தந்தை செல்வா அன்றே தீர்க்கதரிசனமாக எடுத்துக் கூறியிருக்கின்றார். இத்தகைய உன்னதமான தலைவன் சிலை இன்று திருகோணமலையிலே உடைக்கப்பட்டிருக்கின்றது. இது தமிழ் மக்களின் சாத்வீக சிந்தனைகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுள்ளதாகவே நாங்கள் கருது கின்றோம்.
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கி ன்ற வடகிழக்கில் சமீபகாலமாக திட்டமிட்ட வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றன. தமிழினத்தின் அனைத்து பரிமாணங்களையும் அழிக்கும் முயற்சிகளை இந்த அரசாங்கம் நேரடியாகவும் மறைமுகமாகவும் தூண்டிவிடுகின்றது. இத்தகைய பேரினவாதப் போக்கின் கடைசி வெளிப்பாடுதான் இந்த காட்டுமிராண்டி செயலாகும். இத்தகைய பேரினவாத ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ் மக்கள் தங்களது சாத்வீகப் போராட்டத்தை தந்தை செல்வா வழியில் உறுதியுடன் முன்னெடுக்க வேண்டும் என்பதையே இத்தகைய சம்பவங்கள் வலியுறுத்தி நிற்கின்றன எனவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
புளொட்:
தந்தை செல்வாவின் சிலை திருமலையில் சிதைக்கப்பட்ட செய்தி தமிழ்மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சாத்வீகத்தின் தந்தையென்றும், ஈழத்துக் காந்தியென்றும் அழைக்கப்பட்ட தந்தை செல்வா அவர்கள், உண்மையிலேயே தமிழ்பேசும் மக்களின் உரிமைகளை நிலைநாட்டவென சாத்வீக முறையிலே நேர்மையாக போராட்டங்களை முன்னெடுத்தவர்.
ஆயுதப்போராட்டம் உக்கிரமாயிருந்த காலப்பகுதியில், தந்தை செல்வாவின் நேர்மையையும் தீர்க்கதரிசனங்களையும் தியாகங்களையும் நினைவுகளையும் பலரும் மறந்திருந்தவேளையில் அன்று அரச கட்டுப்பாட்டிலிருந்த திருமலை, மன்னார் நகர்களில்; தந்தை செல்வாவின் உருவச்சிலையை நிறுவி அவரின் நினைவுகளை எப்போதும் மக்கள் மனங்கொள்ள முயற்சித்தோம். அந்தவகையில் 1995ம் ஆண்டு ஜூலை 16ம்திகதி எமது கழகத்தின் செயலதிபர் அமரர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் ஆறாவது நினைவுதினமான வீரமக்கள்தின நிகழ்வுகளின்போது அன்றைய எமது திருமலை மாவட்ட அமைப்பாளர் திரு. வ.விஜயரட்ணம் (செல்லக்கிளி மாஸ்டர்) அவர்களினால் திருமலை நகரில் தந்தை செல்வாவின் சிலை திறந்துவைக்கப்பட்டது.
அன்று 35 லட்சம் தமிழ்பேசும் மக்களின் உரிமைக்குரலாக திகழ்ந்த தந்தை செல்வா எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எந்தவொரு மனிதருக்கும் தீங்கு விளைவித்தவருமல்ல, விளைவிக்க நினைத்தவருமல்ல. அப்படியான ஒரு மாபெரும் தலைவரின் சிலையை, அமைதியும் சமாதானமும் நிலவுவதாக அரசும் பேரினவாதிகளும் நாடகமாடும் இன்றையநிலையில், அடித்து நொருக்கி சிதைத்திருக்கின்றார்கள். இழிவான இச்செயலின் மூலம் இந்த நாட்டில் பேரினவாதம் எவ்வளவு தூரம் புரையோடியுள்ளதென்பதை உலகம் அறிந்து கொள்ளும்.