Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

எழுதுதாள் ஏந்திழை : நோர்வே நக்கீரா

dfem

எங்கோ மூலையில்

ஏனோ தானோ என்று

என்பாட்டில் கிடந்த என்னை

எட்டி எடுத்து

தட்டித் பின் தடவி

மல்லாக்காய் போட்டு

ஏறி நின்று

எழுந்து….

விழுந்து….

கிடந்து….

என்மேல் எழுதினான்

ஒருகவிஞன்
பேனாவின் அழகில்

மயங்கியதாலே

கூரியமுனையால் குத்துப்பட்டேன்.

கீறப்பட்டேன்

பின் கிழிக்கப்பட்டேன்.
என்மேல் கிறுக்கியவனை

விட்டுவிட்டு

என்னைக் கிறுக்கி என்றது

உண்மையற்ற உலகம்.
நீ எழுதி…எழுதி

எழுந்தபோது

கத்திக் கத்தியே

என் காதலைச் சொன்னேன்

வேதனை தாங்காது

அழுது அழுதே சிரித்தேன்
உலகமே உன்கவிதைகளை

வாசித்து வசியப்பட்டு

உன்வசப்படும் போது

பொறாமையில் பொருமுவேன் -நீ

எனக்கு மட்டும் உரியவன் என்று
உன்னைச் சுமப்பதால்

கண்டவன் நிண்டவன்

கைகளில் நான்

விபச்சாரியாக..

விமர்சிக்கப்பட்டேன்
நீ யோசித்ததை

யார் யாரோ வாசித்தனர்

ஆசித்தனர்….

பூசித்தனர்…..

உன்னால் வாசிக்கப்பட்ட

நான் மட்டும்….

தூசிக்கப்படுகிறேன்.

கண்டவன் நிண்டவன்

கைகளில்…..
நீ எழுதிப்போன தாள்

நான் என்பதால்

யாரும் என்மேல் இனி

எழுதப்போவதில்லை.
என் அடிமடியில்

நீ மறைத்து எழுதிய

கையெப்பம் மட்டும்

உன் முகவரி தெரியாது

வளர்கிறது என் வயிற்றில்
உன்னை வெளியுலகிற்கு

வெளிச்சம் போட்டுக் காட்டியவள்

இருளிலல்லவா கிடக்கிறேன்.

கண்ணா!!

விழி மொழியாயோ?

வாழ்வில் ஒளி தருவாயோ?
என்கருவறை சுமக்கும்

உன் கவிதைகளுக்கு

காசுக்களால் காணிக்கை

பணத்தினால் பட்டாபிசேகம்

என்கருவறைக்கு மட்டும்

கண்ணீர்தானா காணிக்கை???

இதுதான் உலகின் வாடிக்கை

பெண்ணாய் போனதால்

எல்லாமே கேளிக்கை…வேடிக்கை!!!

Exit mobile version