மார்க்சிய புரட்சியாளர்களால் நிறுவப்பட்ட பாரபுன்டா மார்ட்டி நேஷனல் லிபரேஷன் பிரண்ட் (எப்எம்எல்என்) கட்சியின் தலைவர் மாரிசியோ ப்யூன்ஸ் எல் சால்வடார் நாட்டின் ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.
50 ஆண்டுகளாக முறிந்திருந்த கியூபாவுடனான ராஜீய உறவுகளை மீண்டும் தொடங்கி வைத்து பிறப்பித்த, உத்தரவுதான் மாரிசியோவின் முதல் உத்தரவாகும். அமெரிக்காவுடனான நல்லுறவுகள் தொடரும் என்றும் அவர் அறிவித்தார்.
மாரிசியோ பதவியேற்பு விழாவில் கியூபா துணை ஜனாதிபதி ஆல்பிரடோ லாசோ, பிரேசில் ஜனாதிபதி லூலா, சிலி ஜனாதிபதி மிச்செல்லி, பேச்சலெட் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுடன் அமெரிக்க அயல்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும் கலந்து கொண்டார்.
பதவியேற்ற பின் மாரிசியோ உரையாற்றினார். லூலாவையும் ஒபாமாவையும் முன்மாதிரியாகக் கொள்கிறோம். முற்போக்கு சிந்தனை கொண்ட தலைவர்கள் ஆபத்தானவர்களாக இல்லாமல் மக்கள் விரும்பும் புதிய, பாதுகாப்பான மாற்றாகத் திகழ்வார்கள் என்பதற்கு இவர்களே சான்றாவார்கள் என்று அவர் தம் உரையில் குறிப்பிட்டார்.
தனிமையில் அமெரிக்கா
எல்சால்வடார் கியூபாவுடன் உறவைப் புதுப்பித்துக் கொண்ட பின், கியூபாவுடன் ராஜீய உறவு இல்லாத ஒரே அமெரிக்கக் கண்ட நாடு. ஐக்கிய அமெரிக்கக் குடியரசுகள் (யுஎஸ்ஏ) மட்டுமே. அமெரிக்கக் கண்டத்தில் தற்போது மாறி வரும் சூழலில் அமெரிக்கா தனிமைப்பட்டு நிற்கிறது. மாரிசியோ பதவியேற்பு விழாவில் பேசிய ஹிலாரி கிளிண்டன் இதை அங்கீகரிக்கிறார்.
நாங்களும் முழுமையானவர்கள் அல்ல என்பதை ஏற்கத்தான் வேண்டும். மேற்குக் கண்டத்தில் உள்ள நாடுகளுடன் நீடிக்கக் கூடிய வலிமையான உறவுகளைக் கட்டுவதில் எங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களுக்கு நாங்களே காரணமாக இருக்கலாம். மற்றவர்கள் கூறுவதைக் கேட்காததும், மற்றவர்கள் மீது கவனம் செலுத்தாததும் காரணமாக இருக்கலாம் என்று அமெரிக்க தூதரக ஊழியர்களிடம் பேசிய ஹிலாரி கிளிண்டன் குறிப்பிட்டார்.