Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

எல்லோரும் ஒன்றிணைந்து சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக போராடுவதன் மூலமே சமாதானத்தை உருவாக்க முடியும்: விக்கிரமபாகு கருணாரத்ன.

18.12.2008.

சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு போராடுவதன் மூலமே இந்த நாட்டில் சமாதானத்தை உருவாக்க முடியுமென்று இடதுசாரி முன்ணினயின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் மக்களை புண்படுத்தும் விதத்தில் பேரினவாத சக்திகள் தொடரும் நடவடிக்கைகளை கண்டித்து செவ்வாய்க்கிழமை மருதானையில் முஸ்லிம் இடதுசாரி அமைப்பு பைசால் தலைமையில் பத்திரிகையாளர் மாநாடு ஒன்றை நடத்தியது. இம்மாநாட்டில் இடதுசாரி முன்னணி தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணரத்ன, வணக்கத்திற்குரிய மாதம்பாகம அஸ்தஜி தேரர், அருட் தந்தை சக்திவேல், மௌலவி முபாரக், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம்.பி. ஆர்.எம். இமாம் , மாநகர சபை உறுப்பினர் எம்.ஏ.சகாப்தீன் , முன்னாள் மாநகரசபை உறுப்பினர் வ.திருநாவுக்கரசு ஆகியோர் கலந்துகொண்டனர்.

கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது;

“”நாங்கள் தமிழர்களின் எதிர்ப்புகளை தகர்த்து எறிந்துவிட்டோம். அதேபோல் முஸ்லிம்களை எதிர்கொள்ள தயாராகின்றோம். ‘இது மகிந்த அரசாங்கத்திற்கு ஆதரவு நல்கிவரும் சிங்கள பேரினவாத சக்திகளின் தற்போதைய கோஷமாகும். முஸ்லிம் மக்களின் கௌரவத்திற்கும் எதிரான இந்த மோசமான தாக்குதலை பொறுக்கமுடியாத முஸ்லிம் மக்கள், தமது எதிர்ப்பை வெளிப்படையாக காட்டியிருந்தனர்.

எம்முடன் இணைந்து மேலும் பல அமைப்புகள் இந்த மனிதத்தன்மையற்ற போக்கிற்கு எதிராக ஒரு நிலைப்பாட்டுக்கு வந்துள்ளோம். இந்தவிடயத்தில் அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் கட்சிகளும் அரசாங்கத்தை ஆதரிக்கும் சில தமிழ் , முஸ்லிம் கட்சிகளும் இணைந்து ஒரு பொது ஆவணத்தில் கையொப்பம் இட்டிருந்தன.

இதற்கு பின்னர் சில முஸ்லிம் இளைஞர் அமைப்புகள் மருதானையில் எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தியிருந்தனர். இதற்கு எதிராக அரசாங்கம் மிகக் கடுமையாக நடந்துள்ளதுடன், சிங்கள கடையொன்றை தாக்கினார்கள் எனக்கூறி பத்துக்கு மேற்பட்ட இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் தாம் வெற்றி பெற்றுவிட்டோம் என அரசாங்கம் வெற்றிவிழா கொண்டாடும் வேளையில், திட்டமிட்டு முஸ்லிம் இளைஞர்களால் சிங்களக் கடைகளை தாக்கமுடியும் என யாரும் நம்பமுடியுமா? தற்போது வேண்டுமென்றே முஸ்லிம்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் பரப்பும் முயற்சிகள் இடம்பெறுகின்றன.

உதாரணமாக லக்பிம பத்திரிகையில் வெளியான செய்தியில் ஜாதிக ஹெல உறுமய தலைவர்களில் ஒருவரான நிசங்க வர்ணசிங்க நிகழ்வு ஒன்றில் பேசும் போது, மௌலவி ஒருவரும் அவருடன் சென்ற முஸ்லிம் குழுவும் ஒரு பாடசாலைக்குள் சென்று பாரம்பரிய உடை அணிந்திருந்த சிங்கள மாணவி ஒருவரின் வயிற்றில்தட்டி மகளே நீங்கள் இங்ஙனம் வயிறு தெரியுமாறு உடைகள் அணியக்கூடாது எனக்கூறியதாக பேசியுள்ளார். இது சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கையாகும்.

உண்மையாக ஜாதிக ஹெல உறுமய தலைவர் என்ன செய்தார்? இவர் பொலிஸ் நிலையம் சென்று சிறுவர் பாதுகாப்பு பிரிவின் கீழ் முறைப்பாட்டைக் கொடுத்தாரா? இவர் பெற்றோர்களுடன் இணைந்து சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக ஏதேனும் போராட்டத்தை நடத்தினாரா? இல்லை அப்படி எதனையும் இவர்கள் செய்யவில்லை . ஏனென்றால் அப்படியான சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்பதே உண்மையாகும்.

எது எப்படி இருந்தாலும் நிசங்க ஊடகங்களில் வெளியிட்டிருக்கும் செய்தியைப் பார்க்கின்றபோது முஸ்லிம் மௌலவிகள் பௌத்த பாடசாலைக்குச் சென்று பாரம்பரிய உடையில் இருக்கும் சிங்கள மாணவிகள் வயிற்றை தொட்டு எச்சரிக்கும் நிலையில் இருக்கின்றனர் என்ற தோற்றப்பாட்டையே கொடுக்கின்றது. இங்கே திகதி, நேரம், இடம் குறிப்பிடப்படவில்லை. ஆனால் ஒரு முஸ்லிம் மௌலவி இப்படி நடந்துள்ளார் என்ற விபரத்தை வெளியிட்டுள்ளார்.

என்னைப் பொறுத்தவரை இவரின் அறிக்கை எனது பார்வையில் குற்றவியல் தன்மையுடையதாக உள்ளது. இதன் மூலம் சிங்கள மக்களை முஸ்லிம் மக்களுக்கு எதிராக தூண்டும் முயற்சியில் இவர் செயற்பட்டுள்ளார். இந்த நாட்டிலே இத்தகைய கோபத்தை துண்டுகின்ற குற்றவியல் முயற்சிகளை தண்டிக்க சட்டம் ஏதும் இல்லையா?

ஜாதிக ஹெல உறுமய மிகவும் பொறுப்பற்ற விதத்தில் செயற்படுகின்றது. இந்த அமைப்பின் தலைவரான சம்பிக ரணவக்க ஒரு நேர்காணலில் பொய்யான தகவல்களை தெரிவித்திருக்கின்றார். அதாவது இந்த நாடு முஸ்லிம்களும் உரித்துடையது அல்ல என்றும், ஏனைய தேசிய இனங்களும், மதங்களும் இங்கு நிலை பெற்று இருந்தாலும், அவர்கள் குடியேறியவர்களே என்றும் தெரிவித்துள்ளார்.

இங்கே கேட்கப்பட வேண்டிய கேள்வியென்னவென்றால், ஒரு தேசிய இனத்தை எவ்வாறு குடியேறியவர்களாக கருதமுடியும்? தனது தாயக மண்ணில் வாழ்ந்து தங்களுக்கு என ஒரு வரலாற்றை உருவாக்கிக்கொள்ளும் ஒரு இனமே தேசிய இனமாக கருதமுடியும். சம்பிக்க ரணவக்கவின் கருத்தின் பிரகாரம் முஸ்லிம்கள் வந்தேறு குடிகள் என்றும், எனவே அவர்களுக்கு இந்த நாட்டில் மரபுரிமை இல்லை என்றும் வாதிடுகின்றார்.

சம்பிக்க ரணவக்க கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற நிலையிலேயே உள்ளார். முஸ்லிம்கள் இந்த நாட்டில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர் என்பதோடு, பல வரலாற்று நிகழ்வுகளில் அவர்கள் பங்கு கொண்டதையும் மறுக்கின்றாரா? முஸ்லிம்கள் வரலாற்றில் இந்த நாட்டில் பல நகரங்களை ஆண்டுள்ளனர். இவர்கள் அரச சபைகளில் பங்கு கொண்டுள்ளதோடு, பல போர்களில் சிங்கள மக்களோடு நின்று போராடியுள்ளனர்.

எனவே வரலாற்றில் கோமோ மக்களின் இலங்கை தொடர்பு சிங்கள வரலாற்றுக்கு முன்பாக உள்ளது. ஆரம்பகால மனித இனம் 40,000 வருடங்களுக்கு முன்பு இவர்கள் ஆபிரிக்காவில் இருந்து வெளியேறி மத்திய கிழக்கிற்கும் பரவியபோது இலங்கைத் வருகை தந்துள்ளனர். இதன் பின்பு மனித குடிப்பரம்பல் அலை மத்திய கிழக்கில் இருந்தும் இந்தியாவிலிருந்தும் வந்துள்ளன. புத்தர் காலத்தில் நாக மக்கள் இந்திய துணைக் கண்டம் முழுவதும் பரவி இருந்தனர். முச்சிலிண்டா என்ற இளவரசன் மழைகாலத்தின் போது புத்தருக்கு தற்காலிக உறையை வழங்கி இருந்தார். இவர் நாக இனத்தைச் சார்ந்தவர் ஆவார்.

மேலும், புத்தர் இலங்கைக்கு இரண்டு நாக இளவரசர்களுக்கு இடையேயான பிணக்கைத் தீர்க்க வந்துள்ளார். அத்துடன் புத்தர் திராவிடர்களை தனது வாழ்நாளில் பலமுறை இந்தியாவிலும் இலங்கையிலும் சந்தித்துள்ளார். ஆரியர்களின் வருகையின் பின்பே சிங்கள பாரம்பரியம் தோன்றி பௌத்த பாரம்பரியமாக மாறியுள்ளது. இவ்வாறான வரலாற்று ஆதாரங்கள் இருக்கும்போது தமிழ், முஸ்லிம் மக்கள் வந்தேறுகுடிகள் என்றும் சிங்களவர்களுக்கே இந்த நாடு சொந்தம் என்றும் கூறியது பொருத்தமற்றதாகவே உள்ளது.

சமூக கலாசார ரீதியான பிரிவுகளை தவிர்த்து மனிதர்களை குழுக்களாக அடையாளப்படுத்துவது சரியானதல்ல. இலங்கை தொன்மையான கலாசார அடையாளத்தை கொண்டிருப்பது இலங்கையின் இயற்கை செல்வத்தின் ஒரு பகுதியாகும். எனவே இந்த நாட்டில் குடிமக்களை முதல் குடிமக்கள், இரண்டாம் குடிமக்கள் என கட்சியோ அமைப்போ தரம்பிரிக்க முயலுமாயின் அது நாட்டுக்கு செய்யும் பாரிய தீமையாகவே அமையும். நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக போராடுவோம்..!

 

Exit mobile version