Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

எம்மைத் தொடரும் பாசீஸம் : அசோக்

ragavan001சமீப நாட்களாக அநாமதேய மின்னஞ்சல்களும் அநாமதேய இணையத்தளங்களும் என்னையும் ஏனைய சமூக உணர்வுள்ளவர்களையும்   நோக்கிய சேறடிப்புக்களில் இறங்கியுள்ளன. நான் எழுதியதாக இவர்களால் ‘புனையப்பட்ட’ பின்னூட்டங்கள் மின்னஞ்சல் மூலம் பல முகவரிகளுக்கு அனுப்பப்படுவதுடன் , தங்களின் அநாமதேய இணையத்தளத்தில் என் பெயரில் இவ் மின்னூட்டங்கள் பதிவு செய்யப்படுகின்றன. நான் அ. மாக்ஸ்சுக்கு தீரா நதியில் எழுதிய ‘திறந்த கடிதத்திற்குப் பிற்பாடு இவ்வாறான செயல்கள் தீவிரமடையத் தொடங்கியுள்ளன . இவற்றிற்கு பின்னால் சோபாசக்தியும், லண்டன் ராகவனும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருகிறார்கள். அவர்களோடு கீரனும் அடக்கம்.

இவர்களால் புனையப்பட்டு, என் பெயரில் விடப்படும் மின்னஞ்சல்கள் பதிவுகள் மிக மோசமான வார்த்தைகளையும் பாலியல் வக்கிரகங்களையும் கொண்டனவாக இருக்கின்றன. இவற்றை எனக்கு மட்டும் அனுப்புவதோடு இல்லாமல் எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் திட்டமிட்டு அனுப்பப்படுகின்றன. இவர்களின் வக்கிரமான எழுத்துக்களால் நானும் குடும்ப உறுப்பினர்களும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுகின்றோம். இவ்வாறான செயல்பாடுகள் தாக்குதல்கள் புகலிடத்தில் எனக்கு புதியவை அல்ல. 2002ம் ஆண்டில் இவ்வாறு என் மீது மிக மோசமான மனோவிகார சேறடிப்புக்களை ‘பாலியல் மனோவிகார கிரிமினல்’ சோபாசக்தி நிகழ்த்தி இருந்தார்.

அன்று மொட்டைக் கடதாசி என்றும் மின்னஞ்சல் என்றும் இதே பாணியை கைக்கொண்டார். கலைச்செல்வன், லக்சுமி என இவரின் வதந்திகளும் காழ்ப்புணர்ச்சிகளும் புகலிடத்தில் தொடர்ந்தன. (இரயாகரனுக்கு உயிரோடு கல்வெட்டு எழுதிய குரூர மனம் கொண்டவர் அல்லவா இவர் ) புகலிடம் அவற்றை இன்னும் மறக்கவில்லை.

மீண்டும் இப்போது ராகவன் என்ற நபரின் துணையோடு மீண்டும் தன் கிரிமினல் தனத்தை தொடங்கிவிட்டார். இவர்கள் இருவரிடமும் தேங்கியிருக்கும் இந்த கிரிமினல் வகைப்பட்ட செயல்பாடுகள் புலிகளிடமிருந்து இவர்கள் கற்றுத் தேர்ந்த அரசியலில் இருந்து உருவாகியதாகும்.

இலங்கையில் தங்கள் அரசியலுக்கு முரண்பாடான அனைவரையும் துரோகிகள் ஆக்கி அவர்கள் மீது வதந்திகளையும் சேறடிப்புக்களையும் கதை கட்டல்களையும் பரப்பி கொலைகளைப் புரிந்த – புரிந்துகொண்டிருக்கின்ற புலிகளின் வரலாற்று பாரம்பரியத்தை ராகவனும் சோபாசக்தியும் புகலிடத்தில் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். இவர்கள் செய்யும் சேறடிப்புக்களும் பாலியல் மனோவிகார குரூர எழுத்துக்களும் ஒரு மனிதனை உளவியல் ரீதியில் கொலை செய்வதற்கு ஒப்பானதாகும். இது பாசிசத்தின் ஒரு வெளிப்பாடாகும் புலியின் பாசறையில் இருந்து வெளிவந்த இந்த பாசிஸ்ட்டுக்கள், தங்கள் குரூர மனோ விகாரங்களை மிக நுட்பமாக இன்றைய மின் இணைய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அரங்கேற்றுகின்றனர்.

இவ்வாறான கேவலம் மிக்க ராகவன், சோபாசக்தியின் நடவடிக்கைக்கான பின்னணியை ஆராய்வோம்.

லண்டனிலிருந்து இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ( TBC ) என்னும் ஒலிபரப்பு நிலையம் சில வருடங்களுக்கு முன் இரண்டு தடவைகள் கொள்ளை அடிக்கப்பட்டு சேதமாக்கப்பட்டது. இவ் வானொலி தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் அரசியலை வன்முறை சார்ந்த செயல்பாடுகளை கடும் கேள்விக் உள்ளாக்கி விமர்சனம் செய்துவந்ததால் இக் கொள்ளைகள் விடுதலைப் புலிகளால் செய்யப்பட்டதாகவே நம்பப்பட்டது.

இதில் சம்பந்தப்பட்ட தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் அடையாளம் காணப்பட்டு வழக்கு தாக்குதல் செய்யப்பட்டது. சில காலங்களில் பின் இக் கொள்ளைகள் தொடர்பாக மேலதிக தகவல்கள் கசியத் தொடங்கின. இக் கொள்ளைகள் விடுதலைப் புலிகள் செய்யவில்லை என்றும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களோடு வேறு சில நபர்களும் சேர்ந்தே இக் கொள்ளையை செய்தார்கள் என்பதும் வெளிவந்தது. (முழுமையான விபரங்கள் அறிய தேசம் நெற் இணையத்தை அழுத்தவும்) இந்த நபர்கள் யார் யார் என அறிய வந்தபோது நாங்கள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தோம். காரணம் அதில் சம்பந்தப்பட்டிருந்த ஒருவர் எங்களது நண்பராக இருந்தார்.

அவர்  கீரனாகும், இன்னொருவர் எங்களுக்கு தெரிந்தவாராக இருந்தார். அவர் லணடன் ராகவன் ஆகும், அத்தோடு இவ்விருவரும் லண்டனில் இயங்கும் இலங்கை ஐனநாயக ஒன்றியத்தின் (SLDF)முக்கிய உறுப்பினர்களாகவும் இருந்தார்கள்.

எனவே இதனை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக எங்களுக்குள் பல வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன. சம்பந்தப்பட்டவர்கள் பெயர்கள் வெளிவரும் போது விடுதலைப் புலிகள் மீது குற்றம் சுமத்தியது பொய்யாகிவிடும் என்பதும் அவை புலிகளுக்கு சாதகமாகிப்போய்விடும் என்ற அபிப்பிராயங்களும் தெரிவிக்கப்பட்டன. இதனால் தெரிந்த எங்களால் இவை மூடிமறைக்கப்பட்டன. ஆனால் இது எப்படியோ ஆங்கில இணைய தளம் ஒன்றின் ஊடாக வெளிவந்துவிட்டது.

இந்த ஆங்கில அறிக்கை உண்மையானதாயின்  ராகவன், கீரன் குழுவிடமிருந்து நியாயத்தையும், பொய்யானதாயின்  மறுப்பையுமே நாம் எதிர்பார்த்தோம். இதில் எந்த வித அநீதியும் அயோக்கியத்தனமும்  இருப்பதாக நான் கருதவில்லை. கேள்வி கேட்டால் துரோகிகள் என்ற புலிகளின் வன்முறைச் சாக்கடைக்குள் ஜனநாயக முத்தெடுக்க முனைபவர்களுக்கு வேண்டுமானால் இது அயோக்கியத்தனமாகத் தெரியலாம்.

இதன் காரணமாக அந்த ஆங்கிலச் செய்தியை தமிழில் மொழியாக்கம் செய்து இனியொருவில் வெளியிட்டோம். இதுவே ராகவன் என் மீது காழ்ப்புணாச்சி கொள்வதற்கு காரணமாயிற்று.

இவ்விடத்தில் இன்னுமொரு சம்பவத்தை கூறவிரும்புகின்றேன். 14.06.2002ல் பரிசில் லாசப்பல் என்னும் இடத்தில் வைத்து நான்கு இளைஞர்களால் நான் தாக்கப்பட்டேன். அதில் ஒரு இளைஞர் புலிகளின் தீவிர ஆதரவாளர் என்பதால் இத்தாக்குதலை தமிழ் ஈழ விடுதலைப் புலிகளே செய்ததாக நாம் நினைத்தோம். எங்களது கண்டனங்களும் விமர்சனங்களும் புலிகளை நோக்கியே வைக்கப்பட்டன. 23.06;.2002ல் அன்று ‘அடிப்படை மனித உரிமைகள் மீறலுக்கு எதிரான அமைப்பு’பின் பெயரில் ஒரு கண்டன கூட்டத்தை நடாத்தினோம். புலிகளின் பக்கத்தில் இருந்து பலத்த எதிர்ப்பையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டோம். இது நடந்து சில வாரங்களின் பின் சில உண்மைகள் வெளிவந்தன. இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஒரு இளைஞரே முன் வந்து இத் தகவலை எங்களுக்கு தந்தார். இந்த இளைஞருக்கு இத்தாக்குதலின் பின்னேதான் என்னைப்பற்றிய முழுவிபரமும் தெரிந்தது.

இவரின் அண்ணன் இந்தியாவில் என் நண்பனாக இருந்தவர். நான் தாக்கப்பட்ட செய்தி இந்தியாவிலிருந்த என் நண்பனுக்கு தெரிந்தபோது அதில் தன் தம்பியும் சம்பந்தப்பட்டிருப்பதாக அறிந்தபோது அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் அவர் தன் தம்பியோடு தொடர்பு கொண்டு விசாரித்தபோது உண்மைகள் வெளிவந்தன. இந்த தாக்குதலுக்கு திட்டமிட்டு அந்த நான்கு இளைஞர்களையும் பயன்படுத்தியது சோபாசக்தியும் இன்று பிள்ளையானின் ஆலோசகராக இருக்கும் எம். ஆர் ஸ்ராலின் என்ற ஞானமும் என்பதாகும். இவர்களுக்கு துணையாக சுகனும் தேவதாசும் இருந்துள்ளனர். நான் தாக்கப்பட்டு சில நாட்களின் பின் மீண்டும் என்னையும் நண்பன் கலைச்செல்வனையும் தாக்கும்படி இந்த நால்வரும் அந்த இளைஞர்களை அனுகியுள்ளனர். ஆனால் அவர்கள் மறுத்துவிட்ட விடயமும் அந்த இளைஞர் மூலம் வெளிவந்தது. எனவே இவ்வாறான வன்முறை சார்ந்த செயற்பாடுகள் சோபாசக்தி ராகவன் போன்றோருக்கு புதியவை அல்ல.

சோபாசக்தி, ராகவன் ஆகியோரின்  புகலிட வருகைக்கு பின்பே இங்கு மாற்றுத்தளத்தில் இயங்கிக் கொண்டிருந்த புகலிட இலக்கிய அரசியலாளர்களிடம் முரண்பாடுகளும் குழுவாதங்களும் உருவாகத் தொடங்கின. மற்றவர்களின் தனிமனித பலவீனங்களை கண்டறிந்து அதற்கேற்றவாறு ‘தீனிபோடும்’ சோபாசக்தி புலிகளின் பாசறையில் கற்றுத் தேர்ந்த அந்தக்’கலையை’ மிகவும் கட்சிதமாக இங்கும் தமிழ் நாட்டிலும் நடைமுறைப்படுத்துகின்றார்.

தனிநபர் தாக்குதல்கள் எமது நோக்கமல்ல  ஆனால் தனிநபர்கள் வன்முறை அரசியலை பிரதிநிதிதுவப் படுத்தி  மிரட்டும் போது அவர்களை அம்பலப்படுத்துவது ஜனநாயகத்தில் விருப்புள்ள ஒவ்வொரு மனிதனதும் சமூகக் கடமையாகும்.

புலிகள் வன்முறைத் தர்பார் நடாத்திக்கொண்டிருந்த 80 களில்  சிறிலங்கா அரசைக் காரணம் காட்டியே மௌனிகளாக்கப்பட்டோம்.  மீண்டும் ஜனநாயகத்தின் பேரால் அதே வன்முறை தலைவிரித்தாடும் போது புலிகளைக் காரணம்காட்டி புத்தர்களாக தியானிக்கக் கோருவது நியாயமற்றது.

குறிப்பு: தீராநதியில் வெளிவந்த என்னால் எழுதப்பட்ட ‘அ.மார்க்ஸக்கு திறந்த கடிதத்திற்கு’ திருவாளர் சோபாசக்தி அவர்கள் தன்னுடைய வழமையான பாணியில் எழுதிய புனைவுகளுக்கு என் எதிர்வினை விரைவில் வெளிவர இருக்கிறது. அதில் புகலிட இலக்கிய அரசியல் முரண்பாடுகள் சோபாசக்தியின் வன்முறை நடவடிக்கைகள் பற்றி எழுத இருப்பதால் அவற்றை இங்கு விபரிப்பதை தவிர்த்துள்ளேன்.

Exit mobile version