Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

என்ன செய்யலாம் இதற்காக? :கொழும்புத் துறைமுகத்தில்

கடந்த மே 9 ஆம் தேதி சென்னையில் இருந்து கப்பல் மூலம் கனடாவிருக்கு அனுப்பப் பட்ட என்னசெய்யலாம் இதற்காக? எனும் ஈழ இனப்படுகொலைப் புகைப்பட ஆவணத்தின் 1000 பிரதிகளை இலங்கை அரசு கொழும்பு துறைமுகத்தில் சட்ட விரோதமாக பறிமுதல் செய்துள்ளது. ஏற்றுமதி செய்யப்பட்ட இந்தியாவிலும் சரி, இறக்குமதியாகவிருந்த கனடாவிலும் சரி இந்த ஆவணம் தடை செய்யப்பட்ட ஆவணம் அல்ல.
                       மேலும் இவ்விரு நாடுகளிலும் இந்நூலுக்கான வெளியீட்டு நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன. கடந்த சனவரி 9 அன்று இந்தியாவில் சென்னையிலும், கடந்த மார்ச் 13 அன்று கனடாவில் டொரோண்டோ நகரிலும், 1000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று இந்நிகழ்வுகள் நடைபெற்றன.இவ்விரு நாடுகளில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் இந்நூல் சென்றடைந்துள்ளது. பிரான்சு தலைநகர் பாரீசில் பெப்.4 ஆம் தேதியில் இந்நூல் ஆர்வலர்களால் நூல் அறிமுக நிகழ்வு நடைபெற்றுள்ளது. ஐ. நா. நிபுணர் குழு, டப்ளின் தீர்ப்பாயக்க்குழு உறுப்பினர்கள், சர்வதேச மனித உரிமை அமைப்புகள், பல நாடுகளின் நாடாளுமன்ற பிரதி நிதிகள் அனைவருக்கும் இந்நூல் உலகம் முழுவதும் உள்ள மனித நேய ஆர்வலர்களால்  கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.60 ஆண்டு கால ஈழ இனப்படுகொலைப் புகைப்படங்களை, 350 க்கும் மேல் உள்ளடக்கியுள்ள இந்த ஆவணம், பார்ப்பவர்களின் மனதில் மனித நேயத்தைதூண்டும் மனித நேய நூலாக இருப்பதால் உலகில் எந்த ஒரு நாட்டிலும் இந்நூல் தடுக்கப்படவில்லை.
                        இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இந்நூல் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தினமணி, ஜூனியர் விகடன், ஆனந்த விகடன், குமுதம், இந்தியா டுடே , சண்டே இந்தியன், உயிர்மை, புதிய பார்வை உள்ளிட்ட தமிழகத்தின் 30 க்கும் மேற்பட்ட இதழ்கள் நூலை வரவேற்று தமது கருத்தை பதிவு செய்துள்ளன.தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சியினர், தமிழ்த் திரைத் துறையினர், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், காந்தியவாதிகள், அனைத்து மத குருமார்கள், மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்நூலை பெரிதும் வரவேற்றுள்ளனர்.
                        எனவே இந்தியாவிலும் கனடாவிலும் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் வரவேற்பு பெற்றுள்ள இந்நூலை இந்திய சுங்கத்துறை அனுமதியுடன் கனடாவிற்கு செல்லும் வழியில் பறிமுதல் செய்ய இலங்கை சுங்கத் துறையினருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. இது  இந்திய, கனடா மக்களின் கருத்து சுதந்திர உரிமையை இலங்கை அரசு பறிக்கும் செயலாகும் என தெரிவித்து இலங்கை மீது வழக்கு தொடர வேண்டும் என சட்ட நிபுணர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, அனைத்து இந்திய ஊடகங்களும், தமிழகத்தின் அனைத்து அரசியல் அமைப்புகளும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் இலங்கை அரசின் இச்செயலை கண்டிப்பதோடு, சட்ட விரோதமாக பறிமுதல் செய்த நூலை இலங்கை அரசு விடுவிக்க அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்ள முன்வர வேண்டும்.

ஜெ.பிரபாகரன்,
நூலாசிரியர்,
என்ன செய்யலாம் இதற்காக?

அ.சரவணகுமார்,
பென்னி குயிக் பதிப்பகம்.
மதுரை.

20 .05 .11
மதுரை.
.

Exit mobile version