“எனது குழந்தைகள் பசித்த வயிற்றோடு பட்டினி கிடக்கின்றனர். நான் காத்திருந்து நம்பிக்கையற்றுப் போய்விட்டேன்” இவை ஒரு ஆபிரிக்க நாட்டுத் தாய் கூறியவையல்ல, ஆசியாவின் வறுமையின் வார்த்தைகள் அல்ல. சொர்க்க புரி என இதுவரை உலக மக்களைக் கவர்ந்திழுத்த ஐரோப்பிய நாடு. கிரேக்கத்தில் ஒரு தாய் கூறிய வார்த்தைகள்,. ஹெரக்கிலன் பகுதியில் பல் பொருள் அங்காடி ஒன்றில் பாலையும் ஐஸ் கிறீமையும் திருடும் போது கையும் களவுமாகப் பிடிக்கப்பட்ட ஒரு பெண் கூறியவை. கைது செய்யப்பட்ட மறு நாள் அந்தத் தாய் கூறுபவை உண்மையானவை என நீதிமன்றம் அவரை விடுதலைசெய்தது.
வறுமையைக் கண்டிராத மத்தியதர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் வேலையிழந்து இரண்டு வருடங்கள். இதுவரை நேர்மையான உழைப்பாளி என அயலவர்கள் சாட்சிக்கு வந்தனர்.
மக்களின் ஆதாரவு இந்தப் பெண்ணுக்கு இருந்ததால் பல்தேசியப் பல்பொருள் அங்காடி இவருக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற்றுக்கொண்டது. தற்கொலை போசாக்கின்மை மருத்துவ வசதியின்மை ஆகியவற்றால் மரணித்துப் போகும் கிரேக்கர்களின் தொகை அதிகரித்துள்ளது.
ஸ்பெயின், இத்தாலி, போத்துக்கல் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து இதே நிலை ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்படும் என எதிர்வுகூறப்படுகின்றது.