மூடப்பட்ட வாகனத்தின் பின்னால் ஏற்றிச் செல்லப்படுகின்றனர்; பெரும்பாலும் இரவு வேளைகளிலேயே கைது செய்யப்பட்டுக் கடத்தப்படுகின்றனர்; கைகளில் இரும்பு விலங்குகள் பூட்டப்படுகின்றன; விடுதலை செய்யப்படும் நாட்கள் தெரியாது மூடிய அறைக்குள் அடைக்கப்படுகின்றனர்; குற்றம்சுமத்தப்படாதவர்கள்; அவர்கள் பெண்கள்’- இவை இலங்கையில் நடைபெறும் சம்பவங்களைப் போன்ற மாதிரியை நினைவு படுத்துகின்றன; ஆனால் இது பிரித்தானியாவில் நடைபெறுகிறது. பிரித்தானியாவில் அகதியாக் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களையும், சட்டவிரோதமாகத் தங்கியிருப்பவர்களையும் அடைத்துவைத்திருக்கும் முகாம் பெட்போர்ட் என்ற இடத்தில் காணப்படுகின்றது. ஐரோப்பாவின் மிகப்பெரிய அகதிகளைத் திருப்பியனுப்பும் வரை தடுத்துவைக்கும் இந்த முகாமில் ஆயிரம் வரையானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அருகிலுள்ள நகரங்களுக்கே தெரியாமல் இரகசியமாக நடத்தப்படும் இந்த முகாமில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக பிரித்தானியாவில் ஆங்காங்கு குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
மெல்ரிம் அவிசில் என்ற பெண்ணுக்கு 13 வயது ஆரம்பமாகியிருந்தது. மருத்துவராகும் கனவுடன் பள்ளிக்குச் சென்ற அக்குழந்த 8 வயத்லிருந்து பிரித்தானியாவில் வசித்துவந்தது. அதிகாலை ஆறு மணியளவில் வீட்டுக்கதவை பெரும் சத்ததுடன் யாரோ தட்டும் ஒலி கேட்டது. வெளியே காத்திருந்த காவல்துறை அவரது அம்மாவையும் அவரையும் கைவிலங்கிட்டு அழைத்துச் செல்கிறது. இருவரும் யார்ள் வூட் முகாமில் மாற்றுவதற்குப் போதிய உடைகளின்றி அடைத்துவைக்கப்படுகின்றனர். இது நடந்தது ஏழு வருடங்களின் முன்னர். மூன்று மாதங்கள் தடுப்புமுகாமின் கோரத்தின் மத்தியில் வாழ்க்கையைக் கடத்திய அந்த இருவரும், விசாரணைகளின் பின்னர் விடுதலையாகின்றனர். இன்று 20 வயதான மெல்ரிம் அவிசில் அகதிப் பெண்களுக்கான பெண்கள் என்ற அமைப்பை ஆரம்பித்து முகாமை மூடிவிடுமாறு பிரச்சாரம் செய்கிறார். எனது அம்மா அனுபவித்த துயரத்தை கண்ணால் கண்டிருக்கிறேன் என்கிறார் அவிசில்.
யார்ள் வூட் என்ற இந்தச் சிறை தனியார் நிறுவனம் ஒன்றால் நடத்தப்படுகிறது. அங்கு சுதந்திரம் மறுக்கப்பட்ட பெண்களில் எழுபது வீதமானவர்கள், தாம் மிகக் கேவலமாக நடத்தப்பட்டதாகக் கூறுகின்றனர். அதில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாகக் கூறுகின்றனர்.
உரிமை அமைப்புக்கள் பல இந்தத் தடுப்பு முகாம் குறித்துப் பேச ஆரம்பித்துள்ளன. ஜேடி சிமித் என்ற பிரித்தானிய எழுத்தாளர் முகாமிற்கு எதிரான பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார். ‘சுந்தந்திரத்திற்கு எதிரான குற்றம்’, ‘நாகரீகமுள்ள எந்த நாட்டிற்கும் இது அவமானச் சின்னம்’ என்றெல்லாம் அந்த எழுத்தாளர் தடுப்பு முகாம் குறித்துக் கூறியுள்ளார். பல ஈழத் தமிழர்களும் இந்த முகாமில் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர். சிலர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். பிரித்தானியாவில் தமிழர்களுக்கான தலைமை இல்லாத நிலையில் அங்கு அடைக்கப்பட்டுள்ள தமிழர்களின் எண்ணிக்கை குறித்தோ நிலைமை குறித்தோ தகவல்கள் பெறமுடியவில்லை. எதிர்வரும் வியாளனன்று சில அமைப்புக்களால் உள்துறைச் செயலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
http://www.politics.co.uk/news/2014/02/11/an-offence-to-liberty-author-zadie-smiths-lashes-out-at-yarl
http://www.theguardian.com/uk-news/2014/feb/10/end-despair-detention-female-asylum-seekers-yarls-wood
http://www.theguardian.com/uk-news/2014/feb/10/end-despair-detention-female-asylum-seekers-yarls-wood