பிரித்தானியாவில் நிறவாதக் கட்சிகள் பயன்படுத்தும் சுலோகமான ‘வீட்டுக்குச் செல்லுங்கள்’ என்ற பதாகைகளைத் தாங்கிய வாகனம் உள்நாட்டமைச்சின் உத்தரவின் கீழ் பிரித்தானியத் தெருக்களில் உலா வந்தது தெரிந்ததே. எதிர்க்கடசிகள் உட்பட பல ஜனநாயக முற்போக்காளர்கள் டேவிட் கமரன் தலைமையிலான அரசின் பாசிச நடவடிக்கை இது என கூறியிருந்தனர். வெளிநாட்டவர்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் சட்டரீதியான கடத்தல் வாகனம் போன்று ‘பிரித்தானியாவில் சட்டவிரோதக் குடியேற்ற வாசிகளா’, வீட்டுக்குச் செல்லுங்கள் என்ற சுலோகத்தோடும் தகவல் தெரிவிப்பதற்கான தொலைபேசி இலக்கங்களோடும் பவனிவந்த இந்த வாகனம் இதுவரையில் 11 சட்டவிரோதக் குடியேற்றக்கரர்களைக் கைது செய்துள்ளதாகக் கூறுகிறது.
பாசிச மற்றும் சர்வாதிகாரிகளால் பயன்படுத்தப்பட்ட சுலோகம் பயன்படுத்கப்படுகிறது என்று பிரித்தானிய மக்கள் மத்தியிலிருந்து எழுந்த எதிர்ப்புக்காரணமாக உள்நாட்டு அலுவல்கள் செயலாளரான தெரேசா மே இந்த வாகன ஊர்வலத்தைத் தற்காலிகமாக நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். அகதிகளுக்கும் சட்டவிரோதக் குடியேற்ற வாசிகளுக்கும் எதிரான நடவடிக்கைகள் தொடரும் என உள்நாட்டு அமைச்சர் மார்க் ஹார்ப்பர் தெரிவித்துள்ளார்.