Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

எதிர்பார்ப்பு அரசியலும் அடிமை விசுவாச நிலைப்பாடும் மீளவுமா?:காலகண்டன்

 

 போர்கள் என்பது கொடுமைகளில் மிகப் பெரும் கொடுமையானதாகும். அவை நாடுகளுக்கிடையிலானவையாகினும் உள்நாடுகளில் இடம்பெறுபவையாகினும் அழிவுகளின் இருப்பிடமாகவே இருந்து வந்துள்ளன. முதலாவது உலகப் போரை விட இரண்டாவது உலகப் போர் மனித உயிர்களை இலட்சம் இலட்சமாகப் பலிகொண்ட போராகும். இதில் ஐரோப்பிய ஆசிய நாடுகளின் மக்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். அன்றைய சோஷலிச சோவியத் யூனியன் சுமார் இரண்டு கோடி மக்களையும் பலகோடிகள் பெறுமதியான சொத்துகள் வளங்களையும் இழந்து கொண்டது.

 ஹிட்லர் முசோலினி ஜப்பானிய ஆதிக்கவாதிகள் ஆகிய முத்தரப்பினர் தொடுத்த உலக அளவிலான ஃபாசிசப் போரினால் தத்தம் நாடுகளைக் காப்பாற்ற மக்கள் போராட வேண்டியதாயிற்று. அத்தகைய தேசபக்த மக்களிடையே கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஜனநாயக சக்திகளும் பரித்தியாக உணர்வுடன் முன்னின்றனர். அதன் காரணமாகவே அப் ஃபாசிசப் போர் முறியடிக்கப்பட்டு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.அவ்வாறு அப்போர் முடிவுக்கு வந்ததும் பாதிக்கப்பட்ட நாடுகளும் மக்களும் தங்களை மீளக் கட்டியெழுப்புவதில் முன்னின்றனர்.

குறிப்பாக சோஷலிச சோவியத் யூனியனும் புதிதாக உருவாகிய சோஷலிச நாடுகளும் போர்க்காலக் காயங்களை ஆற்றிக் கொண்டு புனரமைப்பு, புனர்வாழ்வு, மீள் கட்டியெழுப்புதல் என்பனவற்றை முன்னெடுத்தன. மிகக் குறைந்த காலத்தில் உலகம் அதிசயிக்கத்தக்க வகையில் போர் அனர்த்தங்களில் இருந்து தம்மை மீட்டு அபிவிருத்தி சுபிட்சப் பாதையில் வீறு நடைபோட்டனர். விவசாயம், கைத்தொழில், விஞ்ஞான தொழில்நுட்பத் துறைகளில் முழுக் கவனத்தையும் செலுத்தினர். கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சமூக வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் திட்டமிட்ட வழிமுறைகளும் செயற்பாடுகளும் குறித்த இலக்குகளுடன் முன்னெடுக்கப்பட்டன. இவை அனைத்திற்கும் உரிய உறுதியான அரசியல் தலைமைத்துவமும் பரந்துபட்ட மக்கள் மீதான நாட்டின் மேலான அதன் அக்கறைகளுமே காரணமாகும்.

இத்தகைய பின்புலத்தில் வைத்து நமது நாட்டில் போரின் பின்பான தற்போதைய சூழலை நோக்க வேண்டியுள்ளது. அங்கு இடம்பெற்ற போர் நாடுகளின் மீது தொடுக்கப்பட்ட ஆக்கிரமிப்புப் போர்களாகும். ஆனால், இங்கு இடம்பெற்றது உள்நாட்டுப் போர்வகை சார்ந்ததாகும். சொந்த மக்களின் ஒரு பிரிவினர் மீதும் அவர்கள் வாழ்ந்துவந்த பாரம்பரிய பிரதேசத்தின் மீதும் நடாத்தப்பட்ட போராகும். இப்போரில் ஏற்பட்ட அழிவுகளுக்கும் இழப்புகளுக்கும் ஆளும் தரப்புகள் மட்டும் காரணமாகி விடவில்லை. ஆயுதங்களின் மீதும் தத்தமது தோள் வலிமைகள் மீதும் மிகை நம்பிக்கை வைத்து தமிழ் மக்களுக்கு வீண் நம்பிக்கைகள் கொடுத்து நின்ற போராட்டத் தமிழ் இயக்கங்களும் காரணமாகும். அதுமட்டுமன்றி இத்தகைய தமிழ்த் தரப்பினரின் யதார்த்தத்திற்குப் பொருந்தாத நடைமுறைச் சாத்தியமற்ற அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஒரு பகுதி மக்களும் இளைஞர்களும் ஆதரவு ஒத்துழைப்பு வழங்கியமையையும் மறுத்துவிட முடியாது. மந்திரத்தால் மாங்காய் வீழ்த்துவது போன்று ஒரு சிலரின் வீரதீரத்தால் யாவும் கிடைத்துவிடும் என்று நம்பிய குருட்டுத்தனமான அரசியல் போக்குகளின் பாரிய எதிர்விளைவுகளைத் தமிழ் மக்கள் இன்று அனுபவிக்க வேண்டியவர்களாகவே உள்ளனர்.

எவ்வாறாயினும் தமிழ் மக்கள் அனுபவித்து வரும் வரலாறு காணாத துன்பதுயரங்களுக்கும் மீட்க முடியாத இழப்புகளுக்கும் முதன்மையான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டியவர்கள் தெற்கின் ஆளும் வர்க்கமாக இருந்து பேரினவாதத்தின் ஊடே அதிகாரக் கயிறு பிடித்து வந்த அனைவருமேயாகும். அதேவேளை, அதன் எதிர்த்தரப்பிலே யதார்த்தங்களைப் புரிந்துகொள்ளாது குறுந்தேசிய ஆதிக்க அரசியலை வளர்த்து வந்த சகல தமிழ் அரசியல் தலைமைகளும் தமிழ் மக்களின் முப்பது வருடகால அழிவுகளுக்கும் இழப்புகளுக்கும் பொறுப்புக்கூறியேயாக வேண்டும். இதனைக் கடந்து தமிழ்த் தரப்புகள் தத்தமது நிலைப்பட்ட அரசியலைத் தொடருவது என்பது தமிழ் மக்கள் அனைவரையும் முட்டாள்கள் ஆக்கி அவர்களை மந்தைக் கூட்டம் போன்று மேய்க்க முற்படும் போக்கேயாகும்.

எனவே, மறுபரிசீலனையும் சுய விமர்சனமும் அற்ற தமிழர் தலைமைகளின் ஆதிக்க அரசியல் போக்கினை தமிழ் மக்கள் தான் தடுத்து நிறுத்தி நியாயம் கேட்க வேண்டும். அல்லாதுவிடின் அடுத்த இரண்டு , மூன்று தசாப்த காலத்தில் தமிழர் நிலை மேன்மேலும் கேள்விகளையும் துயரங்களையும் தான் சந்திக்க வேண்டி ஏற்படும் என்பது திடமான எதிர்வு கூறலாகும்.

முடிவுற்ற போருக்குப் பின்னான அண்மைய மாதங்களில் மூன்று இலட்சம் மக்கள் தொடர்ந்தும் முட்கம்பி வேலிகளுக்கு மத்தியில் முடக்கி வைக்கப்பட்டே வருகின்றனர். போரின் வெற்றி விழாக்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் அளவிற்கு போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு கொடுப்பதற்கான செயற்பாடுகள் மந்த கதியிலேயே இடம்பெற்று வருகின்றன.

வடக்கின் வசந்தம் என்ற மகுடத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் 180 நாள் வேலைத்திட்டம் எந்தளவிற்கு மீள் குடியேற்றத்தையும் புனர்வாழ்வையும் மூன்று இலட்சம் மக்களுக்கு கொண்டு வந்து சேர்க்கப்போகிறது. விவசாயம் மீன்பிடி சிறுதொழில்கள் மற்றும் தொழில் முயற்சிகள் யாவும் இழந்துள்ள மக்களுக்கு அரசாங்கம் முகாம்களில் வைத்து அளித்து வரும் அரைகுறை உணவினாலும் தொழில் பயிற்சிகளாலும் பெரிதாக எதுவும் நடந்துவிடமாட்டாது. எல்லாவற்றுக்கும் அடிப்படையாக மக்கள் கேட்பதும் விரும்புவதும் எங்களை எங்கள் சொந்த இடங்களில் குடியமர அனுமதிக்க வேண்டும் என்பதேயாகும்.

 எமது சொந்த வீட்டுக் கிணற்று நீரை அள்ளிக் குடிக்கும் போதே இழப்புக்களின் மத்தியிலும் வலிகள் மறந்த ஒருவகை நிம்மதி ஆறுதல் பெற முடியும் என்றே மக்கள் எதிர்பார்த்திருக்கின்றர். ஆனால், அரசாங்கம் மீள் குடியேற்றம் பற்றித் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் எதனையும் கூறுவதாக இல்லாத நிலையே காணப்படுகிறது.

அண்மையில் இந்தியாவுக்கு பயணித்த வடக்கு வசந்தத்திற்குப் பொறுப்பான ஜனாதிபதியின் சகோதரரும் ஆலோசகருமான பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ 180 நாள் வேலைத்திட்டம் பற்றி உயர் இந்திய அதிகாரிகளுக்கும் வெளியுறவு அமைச்சருக்கும் விளக்கமளித்துள்ளார். அதனைக் கேட்ட இந்தியத் தரப்பினர் திருப்தி தெரிவித்தனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏதோ குறிப்பிட்டளவு தொகைப்பணத்தை இடம்பெயர்ந்தோருக்காகவும் மீள்குடியேற்றத்திற்காகவும் இந்தியா வழங்கியுள்ளதாக ஒரு செய்தி வந்தால் அதுவே தான் நடந்துகொண்டவற்றுக்கான பிராயச்சித்தமாக அமைந்து கொள்ளும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாகும். அதற்கு மேலால் இந்தியா அப்படி அழுத்தம் தரும் இப்படி நெருக்குவாரம் செய்யும் என்று எதிர்பார்ப்பது ஊறிப்போன விசுவாச அடிமைத்தனமே அன்றி வேறெதுவும் இல்லை. இதனையே சில தமிழ்ப் பத்திரிகை ஆய்வெழுத்தாளர்கள் பக்கம் பக்கமாக எழுதிக் கொள்கிறார்கள்.

 இலங்கை என்ற தீவு நாடு இறைமையும் சுதந்திரமும் சுயாதிபத்தியமும் உள்ள நாடெனில் அதன் அனைத்து மக்களும் சுதந்திரமான மக்களாகவே இருக்க முடியும். தமது சொந்தக் கால்களில் நின்று தமக்குரியவற்றை வாதாடியும் போராடியும் இணங்கியும் விட்டுக்கொடுத்தும் பெற்றுக்கொள்ள வேண்டும். சொந்த நாட்டில் பிறர்க்கு அடிமையாய் நடந்து கொள்ளக்கூடாது. அயலாரிடமும் அந்நியரிடமும் கையேந்தி எதனையும் பெறலாம் என்ற இழி நிலைக்குச் செல்லக்கூடாது. இது எல்லாமக்களுக்கும் பொருந்தக்கூடிய ஒன்றாயினும் குறிப்பாகத் தமிழ் மக்கள் மத்தியில் இனி மேலும் அப்படி ஒரு எதிர்பார்ப்புநிலை இருக்கக்கூடாது. அத்தகைய எதிர்பார்ப்பு அரசியலும் அடிமை விசுவாச நிலைப்பாடும் மீளவும் தமிழ் மக்கள் மத்தியில் செல்லுபடியுள்ளதாக இருக்கக்கூடாது.

மேலும் மீள்குடியேற்றத்தில் தெளிவான திட்டவட்டமான நிலை காணப்படாமை போன்றே போருக்குக் காரணமான தேசிய இனப்பிரச்சினையிலும் தீர்வுக்குரிய முன்மொழிவுகளோ ஆலோசனைகளோ முன்வைக்கப்படவில்லை. முப்பது வருடகாலப் போருக்குப் பின் யதார்த்தங்கள் கொண்டதும் தூரநோக்கிலுமான நியாயமான அரசியல் தீர்வு முன்வைக்கப்படுவதையே தமிழ்த் தேசிய இனம் மட்டுமன்றி முஸ்லிம் மலையகத் தமிழ்த் தேசிய இனங்களும் விரும்புகின்றன. அதற்கான வழிமுறைகள் பிறக்கும் என எதிர்பார்க்கின்றனர்.

ஆனால், புதிதாக எதனையும் அரசாங்கத் தரப்பினர் முன் வைப்பதாக இல்லை. 22 வருடங்களுக்கு முந்திய பதின் மூன்றாவது திருத்தம் என்ற அரசியல் யாப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்ட விடயத்தையே மீண்டும் மீண்டும் எடுத்துரைக்கப்படுகிறது. இன்று இப் பதின்மூன்றாவது திருத்தத்தை வைத்து அரசாங்கத் தரப்பில் ஒரு பட்டிமன்றமே நடத்தப்பட்டு வருகிறது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய , விமல் வீரவன்சவின் கட்சி, சில அமைச்சர்கள் ஒரு புறமாகவும் வேறு சில அமைச்சர்கள் அதிகாரிகள் மறுபக்கமாகவும் நின்று விவாதங்கள் எழுப்பிவருகின்றனர். இவ்விவாதங்களில் பதின்மூன்றாவது திருத்தம் தேவையற்றது என்றும் அதன் சிறு பகுதி கூட நடைமுறைக்கு வரக்கூடாது என்றும் உச்சக்குரலில் விமல் வீரவன்சவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் பேசி வருகின்றனர். அதேவேளை, அமைச்சரும் அரசியல் தீர்வுக்குரிய சர்வகட்சிப் பிரதிநிதிகளின் மாநாட்டுத் தலைவரான அமைச்சர் திஸ்ஸ விதாரண அமைச்சர் டியூ. குணசேகரா போன்றோர் பதின்மூன்றாவது திருத்தமும் அதற்கு மேலும் வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

இவ்வாறு இடம்பெறும் பதின்மூன்றாவது திருத்தப் பட்டிமன்றத்தில் நடுவராகக் காணப்படும். ஜனாதிபதியானவர் எவ்வித தீர்ப்பும் கூறாதவராகவே இருந்து வருகிறார். ஏற்கனவே இந்தியா முன்னின்று கொண்டு வந்து நிறைவேற்றிய திருத்தம் என்பதால் அந்தப் பதின்மூன்றாவது திருத்தத்திற்கு எதிராகப் பேசுவது இந்தியாவை நோகடித்துவிடும் என்று ஜனாதிபதி நம்புகிறார் போலும்.

 அத்திருத்தத்தில் உள்ளபடி காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கும் விடயத்திலும் தயக்கம் காட்டப்பட்டு வருகின்றது. ஆனால், இந்தியா தான் முன்நிறுத்திக் கொண்ட பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றே விரும்புகிறது. அதனை இந்தியாவின் ஆளும் தரப்பிற்கு மிக நெருக்கமாக இருந்துவரும் ஜனாதிபதியினால் ஏற்கவும் முடியவில்லை நிராகரிக்கவும் இயலாமல் உள்ளது. அதாவது விழுங்கவும் முடியாது கக்கவும் இயலாது இருந்துவரும் இக்கட்டான போக்கே காணப்படுகிறது. இந்த நிலை எத்தனை காலத்திற்குத் தான் நீடிக்கப்போகிறது என்பது முக்கியமானதாகும்.

பாராளுமன்றத் தேர்தலும் ஜனாதிபதித் தேர்தலும் முடியும்வரை அரசியல் தீர்வுக்கான எந்த முன்மொழிவுகளோ ஆலோசனைகளோ ஜனாதிபதியிடம் இருந்தும் அரசாங்கத் தரப்பிலிருந்தும் வெளிவரமாட்டாது என்பதே அரசியல் நோக்கர்களது பார்வையாகும்.

போரினால் கிடைத்த வெற்றியின் ஆதாயங்களை அடுத்துவரும் பாராளுமன்ற ஜனாதிபதித் தேர்தல்களுக்குரிய முதலீடாக வைப்புச் செய்வதிலேயே ஆளுந்தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். அதன் காரணமாகவே வடக்கிலும் நீலக்கொடியும் வெற்றிலைச் சின்னமும் வெற்றிபெற வேண்டும் என விரும்புகின்றனர்.

இலங்கையின் ஒன்பது மாகாண சபைகளிலும் மாநகர, நகர, பிரதேச சபைகளிலும் ஆளும் தரப்பே அதிகார சக்தியாக வரவேண்டும் என்ற அவாவில் உள்ளனர். இவை யாவற்றையும் அடி மனதில் கொண்டே மீள்குடியேற்றம் புனர்வாழ்வு, புனரமைப்பு, அரசியல் தீர்வு இணக்க அரசியல் அபிவிருத்தி சுபிட்சம் போன்றவற்றுக்கான காய்நகர்த்தல்கள் இடம்பெற்று வருகின்றன.

போரின் முடிவுடன் அந்தக் கொடூரப்போர் ஏற்படுத்திய காயங்களுக்கும் முறிவுகளுக்கும் மன வடுக்களுக்கும் வாழ்க்கை நெருக்கடிகளுக்கும் படிப்படியான தீர்வுகளும் மறுவாழ்வுச் சூழல்களும் ஏற்படும் என்றே மக்கள் நம்பினர். இயல்பு வாழ்வுக்கான ஒளிக்கீற்றுகள் தென்படுமா என்று மக்கள் தெற்கு நோக்கிப் பார்த்த வண்ணமே உள்ளனர். ஆனால், அவையாவும் இருந்த இடத்தை விட்டு நகர்வதாக இல்லை.

இந்நகரா நிலையை அல்லது ஆமை வேகத்தைப் மாற்றி அமைக்க மக்கள் மத்தியில் இருந்து உரிய நெருக்குதல்கள், அழுத்தங்கள் அரசிற்குக் கொடுக்கப்படல் வேண்டும். அதனையே மக்களும் மக்களின் நேர்மையான அரசியல் சக்திகளும் செய்ய வேண்டும்.

 

 

 

 

Exit mobile version