Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

எண்ணெய்க் கசிவு: 17 ஆயிரம் பேர் வேலையிழப்பு

அமெரிக்காவின் மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள எண்ணெய்க் கசிவால் இந்த ஆண்டில் சுமார் 17 ஆயிரம் பேரின் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. கடல் பகுதியில் பல மைல் தொலைவுக்கு எண்ணெய் படலம் காணப்படுவதால் மீன் பிடிப்பு மற்றும் அது தொடர்பான பணிகள் மற்றும் சுற்றுலா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலில் ஏற்பட்ட இந்த மிகப் பெரிய எண்ணெய்க் கசிவால், ஏற்பட்டுள்ள சூற்றுச்சுழல் மற்றும் பொருளாதார பாதிப்புகள் பலகோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம் எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. தீ விபத்தில் எண்ணெய் எடுக்க பயன்படுத்திய இயந்திரம் கடலில் மூழ்கியது. பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 11 ஊழியர்களும் பலியாயினர். கடந்த ஏப்ரல் 20-ல் இந்த சம்பவம் நிகழ்ந்தது. அன்று முதல் இம்மாதத் தொடக்கத்தில் கசிவு அடைக்கப்படும் வரை அந்த இடத்தில் இருந்து இடைவிடாமல் கடலில் எண்ணெய் கலந்து வந்தது. இப்போது சிறிதளவு எண்ணெய்க் கசிவு இருப்பதாகக் கூறப்படுகிறது. எண்ணெய்க் கசிவால் அப்பகுதியில் உள்ள கடல்வாழ் உயிரினங்கள் அனைத்தும் செத்து மிதந்தன. படகுகளும் கடலுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இப்போது பாதிக்கப்பட்ட கடல்பகுதியை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

Exit mobile version