Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

எங்கே எங்கே எம் பிள்ளைகள் எங்கே பதில்கூறு அரசே!

ஆகஸ்ட் 30, கட்டாயப்படுத்தப்பட்டு காணாமல் போய் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினத்தை, காணாமல் போகச்செய்யப்பட்டோரை தேடும் உறவுகளின் இணையமும், மன்னார் வவுனியா முல்லைத்தீவு கிளிநொச்சி யாழ்ப்பாணம் மாவட்டங்களின் பிரஜைகள் குழுக்களும் இணைந்து நாளை (30.08.2014) வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு அனுஸ்டிக்கின்றனர்.

“எங்கே எங்கே எம் பிள்ளைகள் எங்கே, பதில்கூறு அரசே?” எனும் தொனிப்பொருளை வலியுறுத்தி நீதி கேட்டு அனுஸ்டிக்கப்படவுள்ள இந்நிகழ்ச்சியில், காணாமல் போகச்செய்யப்பட்டோரை தேடும் உறவுகள் குடும்பங்கள், அரசியல் கைதிகளின் உறவுகள் குடும்பங்கள், வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன், மன்னார் மறை மாவட்ட ஆண்டகை இராசப்பு ஜோசப், நாடு தழுவிய மனித உரிமை செயல்பாட்டாளர்கள் நில்மிகா பெர்ணான்டோ, பிறிட்டோ பெர்ணான்டோ ஆகியோரும்,

தென்னிலங்கையைச்சேர்ந்த அரசியல் கட்சிகளும் அதன் பிரமுகர்களும், வடமாகாணத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாணசபை உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் உறுப்பினர்கள், தென்பகுதி சிங்கள மக்கள், சர்வ மதத்தலைவர்கள், ஊடகவியலாளர்கள், தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு, “காணாமல் போகச்செய்யப்பட்டோர் மற்றும் அரசியல் கைதிகளின் ஆத்ம பலம் வேண்டி சர்வமதப்பிரார்த்தனையில் ஈடுபடவுள்ளதுடன்,

காணாமல் போகச்செய்யப்பட்டோர் தொடர்பில் அரசை பொறுப்புக்கூறுமாறு வலியுறுத்தியும், நீதி கேட்டும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கும், காணாமல் போகச்செய்யப்பட்டோரை தேடிக்கண்டறியும் ஜனாதிபதியின் ஆணைக்குழுவுக்கும் மகஜர்கள் கையளிக்கவுள்ளனர்.

இதில் அனைத்து பொதுமக்கள், சிவில் சமுக மனித உரிமை செயல்பாட்டாளர்கள், சமுக ஆர்வலர்களையும் கலந்து கொள்ளுமாறு வடமாகாணத்தைசேர்ந்த பிரஜைகள் குழுக்கள் அழைப்பு விடுத்துள்ளன.

Exit mobile version