உலகம் முழுவதும் மக்கள் கொலைசெய்யப்படும் போது கண்ணை மூடிக்கொள்ளும் பல்தேசிய வியாபார ஊடகங்கள், தன்னினச் சேர்க்கையாளர்களின் உரிமைக்காக மட்டும் குரல்கொடுப்பதன் பின்னணி சந்தேகத்திற்குரியது.
பல்தேசிய ஊடகங்கள் மனித உரிமையைப் பாதுகாப்பதாக நாடகமாடும் போதெல்லாம், அவர்கள் தமக்கும் அதிகாரவர்க்கத்திற்கும் பாதிப்பில்லாத ஒன்றைத் தெரிவு செய்து பிரதானப்படுத்துகிறார்கள்.
அந்தவகையில் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் பாலியல் சுதந்திரமும், ஒரினச் சேர்க்கையும் இன்றைய வியாபார ஊடகங்களின் கோரமுகத்தை மறைத்துக்கொள்ளவும் அதிகாரவர்க்கத்தைப் பாதுகாக்கவும் பயன்படுகிறது.
ஆக அரசாங்கத்திற்கும் ஆளும் வர்க்கத்திற்கும் பாதிப்பற்ற வகையில் சுதந்திரத்தை ஊடகங்கள் முதன்மைப்படுத்துகின்றன.
ஆப்கானிஸ்தானிலும் சிரியாவிலும் மக்கள் கொலைசெய்யப்படும் போது மூச்சுக்கூட விடுவதில்லை. ஆங்காங்கு புள்ளிவிபரத் தொகுப்பாக இவை வெளியிடப்பட்டாலும், கொலைகளின் பின்னணியிலுள்ள அமரிக்க எஜமானர்களைப் பற்றிப் பேசுவதில்லை. பாலஸ்தீனத்தில் கொல்லப்படும் மக்களுக்காகக் கண்ணீர்வடிக்கும் ஊடகங்கள் கொலை செய்ய்யும் இஸ்ரேலிய சோவனிஸ்டுக்களையும், அவர்களின் பின்னணியில் செயற்படும் அமெரிக்க, ஐரோப்பிய அரசுகளையும் பற்றிப் பேசுவதில்லை.
எதனைப் பேசவேண்டும் எதனைப் பேசக்கூடாது என்று அவர்கள் தெரிவுசெய்துகொள்கிறார்கள். ஒரினச் சேர்க்கையும் இவ்வாறானதே. அரசிற்கோ ஆளும் வர்க்கத்திற்கோ எதிரானதாக அல்லாத ஒரினச் சேர்க்கையாளர்களின் உரிமைக பல்தேசிய வியாபார ஊடகங்களின் தெரிவு!.
இந்தியாவில் டெல்லியில் மாணவி ஒருவர் ஓடும் பஸ்சில் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட போது, ஊடகங்கள் போட்டிபோட்டுக்கொண்டு குரல்கொடுத்தன. ஆளும் வர்கத்திற்கு பாதிப்பில்லாத ஊடகங்களால் தெரிந்தெடுக்கப்பட்ட உரிமைகளில் இதுவும் ஒன்று. அதேவேளை நாளுக்கு நாள் இந்தியக் காவல்துறையால் கொல்லப்படும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் பெண்கள் பற்றிய சிறிய தகவல்கள் கூட ஊடகங்களில் வெளியானதில்லை.
புலம்பெயர் நாடுகளை மையமாகக்கொண்ட பல தமிழ் ஊடகங்கள் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளே இனப்படுகொலையின் பின்னணியில் செயற்பட்டன என்ற உண்மையை ஆதாரபூர்வமாகத் தெரிந்துகொண்ட பின்னரும் அவர்களுக்கு எதிராகக் குரல்கொடுப்பதில்லை. மாறாக அந்தக் கொலையாளிகளைத் தமிழ் மக்களின் கடவுள்கள் போல மாற்றிவிட்டனர்.
தமிழ்ப் பேசும் மக்களின் பிரதேசங்களை மட்டுமன்றி உலகம் முழுவதையும் சூறையாடும் இக் கொலையாளிகள் மனித உரிமையை தமது சொந்த நலனுக்காகப் பயன்படுத்திக்கொள்ளகின்றனர்.
அண்மையில் ரஷ்யாவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் ஓரினச் சேர்க்கையாளர்கள் தடைசெய்யப்பட்டதாகவும் கைது செய்யப்பட்டதாகவும் அங்கு ஓரினச் சேர்கையைத் தடைசெய்யும் சட்டங்கள் நீக்கப்பட வேண்டும் என்று உலகம் முழுவதும் ஊடகங்கள் பொங்கியெழுந்தன. கூகுள் தேடுபொறி கூட ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவளிப்பதாகப் படங்களை வெளியிட்டது.
ரஷ்யாவில் நடைமுறையிலுள்ள சட்டமோ வேறானது. சிறுவர்கள் மத்தியில் ஓரினச் சேர்க்கைப் பிரச்சாரங்களைத் தடைசெய்வது மட்டுமே சட்டத்தில் கூறப்பட்டிருந்தது. இந்த உண்மை மறைக்கப்பட்டு ரஷ்யாவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் சிரச்சேதம் செய்யப்படுவது போன்ற பிரமை ஏற்படுத்தப்பட்டு பூதாகாரப்படுத்தப்பட்டது..
உண்மையில் பெண்களையும் குழந்தைகளையும் சிரச்சேதம் செய்யும் சவுதி அரேபியா போன்ற கிரிமினல் அரசுகள் ஊடகங்களதும் அமெரிக்க அதிகாரவர்க்கத்தினதும் நண்பர்கள்.
இவை அனைத்தின் பின்பும் ஊடக தர்மம் என்கிறார்கள். அதன் உள்ளர்த்தம் தமது பிழைப்பிற்குப் பாதிப்பில்லாத தர்மத்தைக் கடைபிடிப்பதோ?