Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஊடகவியலாளர் மரி கொல்வின் கொல்லப்பட்டமையை சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கண்டிக்கிறது!

IATAJபிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு இயங்கிய மூத்த உடகவியலாளர் மரி கொல்வின் அவர்கள் சிரியாவில் அந்நாட்டு அரசபடைகளின் எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டமைக்கு சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

லண்டனிலிருந்து வெளியாகும் Sunday Times பத்திரிகையின் செய்தியாளராக சிரியாவில் செய்தி சேகரிக்கும் பணியிலிருந்த போதே அவர் சிரிய படைகளின் தாக்குதலுக்கு உள்ளானார். ஒரு துணிச்சல் மிகுந்த செய்தியாளரான மரி, கொசோவோ, செச்சினியா. மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் போர் முனைகளில் செய்தியாளராகப் பணியாற்றியிருக்கிறார். அவர் இலங்கை தீவில் பணியாற்றியபோது சிறிலங்கா படையினரின் தாக்குதலில் ஒரு கண்ணை இழந்தார்.
யுத்தப்பிரதேசங்களில் பெண்கள், சிறுவர்கள் மீது பிரயோகிக்கப்படும் வன்முறைகள் பற்றிய செய்திகளை வெளிக்கொணரந்து உலகின் கண்களுக்கு கொண்டுவருவதில் அவர்அதிக கவனம் செலுத்தி வந்தார்.
இலங்கைத் தீவின் போரின் இறுதிக்கணங்களில் விடுதலைப்புலிகளின் அரசியல் துறையினருக்கும், சர்வதேச அமைப்புகளுக்கும் இடையில் தொடர்பாடல்களை ஏற்படுத்திக் கொடுத்த மரி கொல்வின், சிறிலங்கா அரசாங்கம் புரிந்த மோசமான யுத்த நிறுத்த மீறல்கள் விடயத்தில் சாட்சியாகவும் இருந்தார்.

சமீபகாலமாக, ஐனாதிபதி அசாத் தலைமையிலான சிரிய அரசு, தமது நாட்டில் நடைபெறும் மக்கள் போராட்டங்களை அடக்குவதற்கு வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு வருகிறது. அங்கு நடைபெறும் அரசபயங்கரவாதத்தை வெளியுலகுக்கு தெரியப்படுத்தியதில் மரி கொல்வினின் பங்கு அளப்பரியது. அவரது முயற்சி முடிவுறு முன்னரே அவர் கொல்லப்பட்டுள்ளார்.

சர்வதே மனிதவுரிமை விதிகளை மதிக்காது ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடாத்தும் சிரிய அரசாங்கத்தை கண்டிப்பதுடன், இவ்வியடத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச நாடுகளை சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் கேட்டுக்கொள்கிறது. கடமை உணர்வுமிக்க துணிகரமான ஒரு ஊடகவியலாளரை இழந்து தவிக்கும் சக ஊடவியலாளர்களுக்கும்;, மேரி கொல்வின் அவர்களது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம். IATAJ

Exit mobile version