Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஊடகவியலாளர் பிரகீத் எக்நேலியகொட கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார்!

    சிங்கள ஊடகவியலாளர் ஒருவருவர் வெள்ளை வானில் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். வெள்ளை வானில் சென்ற ஆயுதக் குழுவினர் இவரைக் கடத்திச் சென்று மறுநாள் காலை விடுவித்துள்ளதாக கடத்தப்பட்ட ஊடகவியலாளர் ஹோமாகம காவல்துறை நிலையில் செய்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகபபூர்வ பத்திரிகையான சியரட்ட பத்திரிகையில் பிரதம ஆசிரியராகவும், லங்கா ஈ நியுஸ் இணையத்தளத்தின் சிறப்புக் கட்டுரை ஆசிரியராகவும் இதற்கு முன்னர் பணியாற்றிய பிரகீத் எக்நேலியகொட என்பவரே இவ்வாறு கடத்ததப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

தற்போது சுதந்திர ஊடகவியலாளராக பணியாற்றி வரும் நிலையில், இவர், நேற்று முன்தினம் (27) இரவு தனது வீட்டிற்கு நடந்துசென்றுக்கொண்டிருந்த போதே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற போது வீதியின் அந்தப் பிரதேசத்தில் சனநடமாட்டம் அற்றுக் காணப்பட்டதாகவும் தமக்கெதிரே கொண்டுவந்து நிறுத்தப்பட்ட வெள்ளை வானிலிருந்து அவசராக இறங்கிய மூன்று இளைஞர்கள், தன்னை இழுத்து வேனில் போட்டுக் கொண்டதாகவும் அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். வேனில் ஏற்றப்பட்ட தமது கண்கள் கட்டப்பட்டு, கைகளுக்கு விலங்கிடப்பட்டதாகவும் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
 
 
  வெள்ளை வேனில் வந்து தன்னைக் கடத்திச் சென்றவர்கள் தம்மை யார் என அடையாளங் காட்டிக் கொள்ளாத போதிலும், அவர்கள் ஆயுதப் பயிற்சிப் பெற்றவர்கள் என்பதை தம்மால் உணரமுடிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வேனில் ஏற்றப்பட்டு அரை மணி நேரம் வாகனம் பயணித்த பின்னர், வீடொன்றில் உள்ள அறையொன்றுக்கு கொண்டுசெல்லப்பட்டு விலங்கிடப்பட்டதாகவும் அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

அன்னைய தினம் இரவு முழுவதும் தனது கண்களைக் கட்டியே வைத்திருந்ததாகவும், மறுநாள் காலை அந்த இடத்திற்கு வந்த அந்தக் குழுவின் தலைவரென தன்னை இனங்காட்டிக் கொண்ட ஒருவர்,  எம்மால் ஒரு தவறு இழைக்கப்பட்டுள்ளது. உங்களினால் எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை. நாம் உங்களை திரும்பி அனுப்பிவிடுகிறோம். எனினும், இதுகுறித்து எவருக்கும் கூறக்கூடாது. அவ்வாறு கூறினால் எதிர்காலத்தில் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் | எனக் கூறி முற்பகல் 10.30 அளவில் தன்னை ஓரிடத்திற்குக் கொண்டுசென்று விடுவித்ததாக எக்நேலியகொட கூறியுள்ளார்.

விடுவிக்கப்பட்ட இடத்தில் தனது கண்கள் கட்டப்பட்டிருந்த துணியை அகற்றிப் பார்த்த போது அந்த இடம் ஹோமாகம, கொரதொட்ட எனும் பிரதேசத்திலுள்ள கல்குளி என்பதை தான் அறிந்துகொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதன்பின்னர் நேராக வீட்டிற்குச் சென்ற பிரகீத் எக்நேலியகொட, எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு அறியப்படுத்தியதை அடுத்து, அவர்களின் ஆலோசனையின் பேரில் சட்டத்தரணியொருவருடன் சென்று இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக ஹோமாகம காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்தக் கடத்தல் தவறுதலா மேற்கொள்ளப்பட்டதா, அல்லது அச்சுறுத்தல் விடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்து உறுதியாக கூற முடியாது என பிரகீத் எக்நேலியகொட மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version