இலங்கை அரசின் ஊடகத் துறை அமைச்சர் ஊடகவிலார்கள் தாக்கப்படுதல் என்பது வழமையான ஒன்று என்கிறார்.
‘ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாகத் தாக்குதலுக்குள்ளாவதென்பது பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையற்ற சிறிய சம்பவங்கள்’ என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இலங்கையிலிருந்து வெளிவரும் லங்கா பத்திரிகையின் ஞாயிறு இதழுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலின் போதே இக் கருத்தை அவர் வெளியிட்டிருக்கிறார்.
அக் கலந்துரையாடலின் போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும் கீழே.
உதயன் பத்திரிகை ஆசிரியர் திரு.குகநாதன் மீதான தாக்குதலுக்காக, ஊடகத் துறை அமைச்சராக நீங்கள் என்ன செய்தீர்கள்?
என்ன செய்வது? என்னால் எதுவும் செய்ய முடியாது. இது உலகின் பொது நியதி. அதற்கு எங்களால் எதுவும் செய்ய முடியாது. குற்றவாளிகள் யாரென்பதைக் கண்டுபிடிக்க, முடிந்தவரையில் முயற்சிக்கிறோம். எனினும் அது அவ்வளவு இலகுவல்ல.
எனினும் அது குறித்த அறிக்கையை கடந்த மூன்றாம் திகதி, காவல்துறையானது ஜனாதிபதியிடம் கையளித்தது. அதில் என்ன அடங்கியிருந்தது?
அதை என்னால் பார்க்க முடியவில்லை. அதை விடுத்து இந் நாட்டில் எவ்வளவு கொள்ளைகள் நடைபெறுகின்றன? கண்டுபிடிக்கப்படாத திருட்டுக்கள் அனேகம் உள்ளன. எனினும் நீங்கள் இச் சிறிய சம்பவங்கள் ஒன்றிரண்டைக் குறித்துத் துள்ளுகிறீர்கள்.
தற்போதைய அரசு ஆட்சியைக் கைப்பற்றிய போதிருந்தே ஊடகவியலாளர்களை படுகொலை செய்வதுவும் தாக்குவதும் அதிக அளவில் நடைபெற்றிருக்கிறது. ஊடகத்துறை அமைச்சராக உங்களுக்கும், அரசுக்கும் இதை விடவும் பாரிய பொறுப்பு இருக்கிறது அல்லவா?
ஆமாம். அதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனாலும் என்ன செய்வது? இதுதான் சாதாரணமான நிலைமை.
எனினும் அரசுக்குத் தேவையான சில விசாரணைகள் உடனடியாக நடைபெறுகின்றன அல்லவா?
ஆமாம். முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டிய சில விடயங்கள் குறித்து அரசு விஷேட கவனம் காட்டுகிறது. எனினும் எல்லாவற்றுக்கும் அதைச் செய்ய முடியாது அல்லவா? அடுத்தது, ‘உதயன்’ ஊடகவியலாளர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். அங்கு நிலைமை கொழும்பு போல இல்லையே.