Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஊடகத்துறையை மகிந்த பொறுப்பேற்ற 3ம் நாள்!!:மஹாராஜா ஒலி- ஒளிப்பரப்பு கலையகங்கள் தாக்கப்பட்டுள்ளன

மஹாராஜா ஒலி- ஒளிப்பரப்பு நிறுவனங்களின் கலையகங்கள் இன்று அதிகாலை கடுமையாக தாக்கப்பட்டுள்ளன :

பன்னிப்பிட்டிய தெபானமவிலுள்ள மகாராஜா ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் மற்றும் மகாராஜா ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகியன அமைந்திருக்கும் கட்டிடத் தொகுதியினுள் இன்று அதிகாலை 2.10 மணியளவில் அத்துமீறி நுழைந்த 10-12பேர் வரையான ஆயுதக்குழுவினர் பிரதான கட்டப்பாட்டு அறைக்குள் நுழைந்து அதனைத் தாக்கியழித்துவிட்டு அதற்குத் தீ மூட்டியுள்ளனர்.

ஆயுதம் தாங்கிய இந்நபர்கள் முகத்தை மூடி முகமூடி அணிந்திருந்தனர். வந்தவர்கள் பெற்றோல் குண்டுகளை வீசி கட்;டிடத்தொகுதிக்கு நெருப்பு வைத்தனர். கூடவே அந்த நேரம் கடமையிலிருந்த ஊழியர்களைக் கடுமையாகத் தாக்கியுமுள்ளனர். கட்டிடத் தொகுதிக்குள் அவர்கள் நுழைந்த இடங்களிலெல்லாம் எல்லாவற்றையும் அடித்து நொருக்கியுள்ளனர்.

சில ஊழியர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டு பிஸ்டலைப் பிடரியில் வைத்து பிரதான கட்டுப்பாட்டு அறையை காண்பிக்குமாறு உத்தரவிடப்பட்டனர்.
பிரதான கட்டுப்பாட்டு அறையுள் நுழைந்த ஆயுததாரிகள் அங்கிருந்த ஒலி மற்றும் ஒளி பெருக்கி உபகரணங்களை அடித்து நொருக்கிவிட்டு அவ்வறைக்குத் தீ வைத்தனர்.
இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஒரு ஜீப்பிலும் ஒரு வானிலுமாக வந்திருந்தனர். இவை இலக்கத்தகடற்றிருந்தன.
 

குறித்த பகுதி வெடிக்கும் வகையில் குண்டு பொருத்தப்பட்டுள்ளதாக அவ்வாயுதக் குழுவினர் தெரிவித்து விட்டுச் சென்றதால் தீயணைக்கும் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்திருந்தாலும் அவர்கள் உட்சென்று தீயை அணைக்க முயலவில்லை.
குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினர் ஸ்தலத்திற்கு விரைந்து புதைக்கப்பட்டிருந்த வயர்களை அகற்றிய போது அது வெறும் ஏமாற்று வேலை எனத் தெரிய வந்தது.
 

இத்தாக்குதல் காரணமாக இந்நிறுவனத்தின் ஒலி ஒளி பரப்புக்கள் சிறிது நேரம் தடைப்பட்டாலும் உடனடியாக மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு ஒலி ஒளி பரப்புக்கள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 

ஏற்கெனவே கடந்த இரண்டாம் திகதி பெற்றோல் குண்டுத் தாக்குதலுக்கு இந்நிறுவனம் உள்ளாகியிருந்ததும் அதனைக் கண்டித்து நான்கு ஊடக அமைப்புக்கள் அறிக்கை வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
 

பன்னிப்பிட்டிய தெபானமவிலுள்ள மகாராஜா ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் மற்றும் மகாராஜா ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகியன அமைந்திருக்கும் கட்டிடத் தொகுதி மீது ஜனவரி 2ஆம் திகதி இரவு 9.30 மணி மீது நடாத்தப்பட்ட தாக்குதலை நான்கு ஊடக அமைப்புக்கள் வன்மையாகக் கண்டித்துள்ளன.
 

இத்தாக்குதல் தகவல் அறிந்து கொள்ளும் உரிமையையும், கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரத்தையும் ஒடுக்கும் நடவடிக்கை என இவ்வமைப்புக்கள் கண்டித்துள்ளன.  உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், முஸ்லிம் மீடியா போரம், ஊடக தொழிலாளர் ஒன்றியம் ஆகிய நான்கு அமைப்புக்களுமே இவ்வாறு கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளன.
 

சிரச தாக்குதலுக்குள்ளாவது இது முதல் தடவையல்ல. இதற்கு முன்னரும் பல தடவைகள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. குறிப்பாக அமைச்சர் மேர்வின் சில்வாவினால் சிரச படப்பிடிப்பாளர் நேரடியாகவே தாக்கப்பட்டதும், அது தொடர்பாக சிரச அமைச்சர் மீது வழக்குத் தொடர்ந்திருந்ததும் நீதிமன்றில் அமைச்சர் மன்னிப்புக் கேட்டதும் வாசகர் அறிந்ததே.
 

இதேவேளை மகாராஜா நிறுவனம் அரசாங்கத்திடம் பாதுகாப்புக் கேட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 ஆதாரம்: குளோபல்தமிழ்னியூஸ்

Exit mobile version