Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஊடகங்கள் பொய்யுரைத்தன : இலங்கை அரசைப் பாராட்டும் தமிழக காங்கிரஸ்!

campsமுகாம்களைப் பார்வையிடுவதற்கான அனுமதியை சர்வதேச ஊடகங்களுக்கும், இலங்கை எதிர்க்கட்சிகளுக்கும் தொடர்ச்சியாக மறுத்துவரும் இலங்கை அரசு தமிழக நாடாளுமன்றக் குழுவொன்றிற்கு மட்டும் அனுமதி வழங்கியிருந்தது.

இக் குழுவில் அங்கம் வகித்த காங்கிரஸ் எம்.பீ கள் இலங்கை அரசைப் பாராட்டியுள்ளனர்.
காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆரூண், சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டியளித்த பொழுது,
“போரினால் இடம் பெயர்ந்த மக்களுக்கு வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் அனைத்துலக விதிகளுக்கு ஏற்றார் போல அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு பாது காப்புக்காகவே முள்வேலி போடப்பட்டுள்ளது.

முகாமில் இருப்பவர்கள் தங்கள் ஊருக்கு உடனடியாக திரும்ப வேண்டும் என்று கோரிக்கை விடுகிறார்களே தவிர வேறுஎந்த கோரிக்கை யையும் முன்வைக்க வில்லை.
இடம் பெயர்ந்து முகாம்களில் இருக்கும் தமிழர்கள் ஊடகங்களில் வந்த தகவலை போல அவலங்களை எதிர் நோக்கவில்லை. முகாம்களை நேரில் சுற்றி பார்த்தது மூலம் இந்த உண்மைகளை கண்டறிந்துள்ளோம்.

முகாம்களில் உள்ள மக்கள் குடிநீர் மற்றும் காய்கறி போன்றவற்றை பெற்றுக் கொள்வதில் சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாக மட்டும் தெரிவித்தனர். இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணப்படும் என்று வவுனியா கலெக்டர் உறுதியளித்து உள்ளார்.

இந்தியா திரும்பியதும் இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங், முதல்- அமைச்சர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோரிடம் விளக்கம் அளிக்க உள்ளோம். ” என்று கூறினர்.
இவ்வறிக்கை பிரித்தானிய சனல் 4 நிறுவனம்,பீபீ.சி ஆங்கில சேவை ஆகியன் ஒரு மாதகாலத்துள் வீடியோ ஆதாரங்களுடன் வெளியிட்ட செய்தியறிக்கைகளுக்கு முற்றிலும் முரணாக அமைந்திருப்பது மனிதாபிமான சக்திகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“வவுனியாவில் இன்று மாலையிலிருந்து கடும் மழை பொழிய ஆரம்பித்துள்ளது.
முகாம்களின் கூடாரங்கள் ஏற்கெனவே கடும் சேதத்திற்குள்ளானதால் 1500க்கு மேற்பட்டோர் முகாம்களுக்குள் இருக்க முடியாதவாறு பெரும் அவதியுற்றுள்ளனர்.
அவதியுறும் மக்கள் முகாம்களை விட்டு வெளியேற முயற்சித்துள்ளனர். இதன்காரணமாக வலயம் 6இன் இராணுவ அதிகாரிக்கும் மக்களுக்குமிடையே முறுகல் ஏற்பட்டுள்ளது. ” என ஜீ.ரீ.என் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

Exit mobile version