24.03.2009.
இலங்கையில் ஊடகத்துறை மீதான வன்முறைகள் கடந்த வருடம் மோசமடைந்திருந்ததாக பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.
பத்திரிகையாளர்கள் கிரமமாகக் கொல்லப்படுவதும் அரசாங்கங்கள் குற்றச் செயல்களுக்குத் தீர்வு காண தவறுவதுமான நாடுகளின் பட்டியலை பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு தயாரித்துள்ளது. இலங்கை, பாகிஸ்தான் போன்ற நீதியானது மோசமடைந்திருக்கும் நாடுகளை பார்க்கையில் நாம் கவலையடைந்துள்ளோம். பத்திரிகையாளரின் கொலைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணத்தவறிவிடுவதானது பத்திரிகைகளுக்கு எதிரான வன்முறையை மேலும் தீவிரமாக்கும் என்பதை எமது ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன என்று பத்திரிகையாளரை பாதுகாக்கும் குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜொயல் சிமொன் கூறியுள்ளார்.
நியாயத்தைத் தாங்களே தேடுவதற்கான உறுதிப்பாட்டுடன் இருந்தால் மட்டுமே வெட்கத்திற்கிடமான இந்தப் பட்டியலிலிருந்து நாடுகள் விடுபட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முன்னெடுக்கும் அரசாங்கம் பத்திரிகையாளர்களுக்கு எதிரான வன்முறையை மேற்கொண்டுள்ளதாக பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு கூறியுள்ளது. குறைந்தது 9 ஊடகவியலாளர்களின் படுகொலைச் சம்பவங்களுக்குத் தீர்வு காணப்படவில்லை என்றும் அந்த அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.