சிறையில் நாம் சித்திரவதையையும் சொல்லொணாத் துன்பங்களையும் அனுபவித்துவிட்டோம்.எமது மனைவி மக்களும் உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி என்ன பாடுபடுகின்றார்களோ யாரறிவார். குற்றம் எதுவும் இழைக்காத எமக்கு விடுதலை பெற்றுத் தாருங்கள்
. மலையக அரசியல் தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் உங்களுக்குள்ள செல்வாக்கை பிரயோகித்து பொது மன்னிப்பின் கீழ் எங்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள்” என மலையக தமிழ் பேசும் சிறைக்கைதிகள் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மலையக தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மலையகத் தோட்ட தொழில் நிறுவன அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் மலையக தமிழ் பேசும் மக்களுக்கும் என தலைப்பிட்டு கனகராஜா பிரபாகரன், ராமையா , ரவீந்திரன், சண்முகம், ஆனந்தராசா, முத்து நடராஜா , பிரபாகரன் ஆகியோர் அனுப்பி வைத்துள்ள அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“நம் உடல்களை மட்டும் இங்கு சிறைவைக்கவில்லை. எமது மனம், உடல், உயிர் அனைத்தையும் நாலடிச் சுவருக்குள் வைத்துள்ளனர். ஏழைகளாக பிறந்த எம்மை விட எம் மனைவி, மக்களையும் பரம ஏழைகளாக்கிவிட்டது சந்தர்ப்ப சூழ்நிலைகள். 1999.11.26 இலிருந்து 2009.12.27 ஆம் திகதி வரை 10 ஆண்டுகள் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டு சிறையில் வாழ்கின்றோம். கடவுள் பரம ஏழையாக மலையகத்து மக்களிடையே எம்மைப் படைத்ததால் எம் குடும்பங்களை சுமக்க வேண்டிய நிலைமை காரணமாகவும் உழைத்து வருமானம் தேடி வாழ்வை சீர்படுத்தவும் கொழும்பிற்கு வேலை தேடி வந்தோம். சந்தேகத்தின் பேரில் பயங்கரவாதச் சட்டம் மூலம் நாம் சிறை வைக்கப்பட்டு 10 ஆண்டுகள் தண்டனைகளும் அனுபவித்து விட்டோம்.
எம் வாழ்க்கை நல்லபடியாக அமையும் என்று கொழும்பு வந்தோம். கிடைத்தது சிறையில் சித்திரவதையும், சொல்லொணாத் துன்பங்களுடன் கடந்த 10 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டோம். நம்மை நம்பி வந்த எம் மனைவி, மக்களும் உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி உழைப்பின்றி என்ன பாடுபடுகின்றனர். இதை யாரறிவார்? எம் மனைவிமார் உழைத்து தம் பிள்ளைகளைக் காப்பாற்ற என்ன பாடுபடுவர்? எத்தனை நாள் உணவின்றி தவித்திருப்பார்கள்? எம் குடும்பத்துக்கு உழைத்து, ஆறுதல் கொடுக்க வேண்டிய நாம் சிறைக்கைதிகளாக உடலால் மட்டுமல்ல, மனதாலும் சித்திரவதைப்படுகின்றோம். நாம் அநாதரவாகி யாருமற்ற அநாதைகளாகி நிற்கின்றோம்.
உங்கள் அனைவரையும் அழாத குறையாக கெஞ்சிக் கேட்கிறோம். மலையக அரசியல் தலைவர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதியிடம் இருக்கும் மதிப்பையும் செல்வாக்கையும் யாவரும் அறிவார்கள். நீங்கள்தான் எங்களை சிறையெனும் துன்பத்திலிருந்து பொது மன்னிப்பின் கீழ் விடுதலை பெற முன்வந்து உதவ வேண்டும். இது சம்பந்தமானவர்களிடம் நீங்கள் பேச்சு வார்த்தை நடத்தி ஜனாதிபதி அவர்களுக்கும் எடுத்துக்கூறி, நமக்கு விடுதலை பெற்றுத் தாருங்கள்.
மலையகத் தமிழ் மக்களே நீங்கள் நாட்டுக்கும், மலையக அரசியல் தலைவர்களுக்கும் அரும்பாடுபட்டு உழைத்துள்ளீர்கள். உங்களில் ஒருவர் தானே நாம். பொது மன்னிப்பின் கீழ் விடுதலை பெற குரல் எழுப்ப ஒத்துழைக்க ஒன்றிணையுங்கள். எங்களுக்கு ஆதரவு தர உங்களை விட வேறு யார் இருக்கிறார்கள்? இனிமேல் தான் நாம் உழைத்து எம் மனைவி, பிள்ளைகளுக்கு ஒரு வேளைக்காவது கஞ்சி ஊற்ற வேண்டும். ஏழை ஜென்மமாய் நாம் பிறந்ததால் சிறையெனும் சித்திரவதைக் கூடத்திலே எமது காலம் துன்பப் பொழுதாகி விட்டது.
எம் மனைவி, பிள்ளைகள் அநாதைகளாகிவிட்டனர். அவர்களுக்கு உதவியும், ஆதரவும் வழங்க எங்களை விட வேறு யார் இருக்கின்றனர். எங்களுக்கு நீங்கள் அனைவரும் கருணை காட்டி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை அளிக்க நடவடிக்கை எடுங்கள். தொடர்ந்தும் எங்களையும் எங்கள் குடும்பத்தையும் அநாதைகளாக்கி விடாதீர்கள். உங்கள் உதவிக்கரங்களை ஏக்கத்துடன் சிறைக் கம்பிகளிடையே எதிர்பார்க்கின்றோம்.
நன்றி : வீரகேசரி