உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதில் மஹிந்தவின் அரசாங்கம் அதிகரித்த ஆர்வத்தையும் கரிசனையையும் கொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் முறைமையில் ஏற்படுத்த வேண்டிய திருத்தங்கள் என்பனவற்றின் பிரதான மையங்களாக இருப்பது இரு கூறுகளாகும். அதில் ஒன்று வட்டார முறைமையாகும். இது இன்றிருக்கும் உள்ளூராட்சி மன்றங்களான மாநகர சபை, நகர சபை, பிரதேச சபைகளின் எல்லைகளில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு உதவக்கூடியது
மற்றது உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதில் தொகுதிரீதியான தேர்தல் முறைமையின் கீழ் எழுபது சதவீதமான உறுப்பினர்களையும், விகிதா சாரப் பிரதிநிதித்துவ தேர்தல் மூலம் முப்பது சதவீதமான அங்கத்தவர்களையும் தேர்ந்தெடுப்பதற்கு வழிகளை உருவாக்கிக் கொள்வது.
இவ்வாறான மாற்றங்களை மேற்கொள்வதில் மஹிந்தவின் அரசாங்கம் கரிசனை காட்டுவது என்பது நாட்டின் நிர்வாக முறைமையில் சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதன் ஊடாக நமது நாட்டில் வாழும் பல்சமூகத்தினர்களும் நன்மையடைய முடியும் என்கின்ற நன்னோக்கு தீர்வு நகர்ச்சியல்ல.
மாறாக சிங்கள பௌத்த பேரினவாதத்தினை நிலை நாட்டுவதற்கு இன்னும் வசதிகளை பெருக்கிக் கொள்வதற்கு கொண்டு வரப்படுவதே உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான திருத்தங்கள் என்பது மறைவன்று. ஏனெனில், நமது நாட்டில் உள்ளூராட்சி மன்றங்களை அமைக்கும் போது சிறுபான்மைச் சமூகங்களான தமிழர்களும், முஸ்லிம்களும் போதியளவு நன்மை பெறும் வகையில் உருவாக்கப்படவில்லை. சிங்கள பெரும்பான்மையை நிலைநிறுத்தும் வகையில்தான் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது.
நமது நாட்டில் மாநகர சபைகள் 18, நகர சபைகள் 42, பிரதேச சபைகள் 270 ஆகும். 330 உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கு 4,442 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் வசதிகளைக் கொண்டிருக்கின்றன. இவற்றில் சிறுபான்மைச் சமூகங்களான தமிழர்களும், முஸ்லிம்களும் அடர்த்தியாக வாழாத பகுதிகளில் தமது பிரதிநிதித்துவத்தை நிலைநிறுத்துவதில் பாரிய சங்கடங்கள் உண்டு.
நமது நாடு ஒற்றை ஆட்சி முறைமையைக் கொண்டது. இதில் உள்ளூராட்சி அதிகார சபைகளைப் பொறுத்தவரை அதிகாரப் பரவலாக்கத்தின் அம்சமாகவே கொள்ளப்படுகின்றது. ஏனெனில் மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் அதிகாரங்களையும், கடமைகளையும் செய்யும் மன்றங்களாகவே இவை தொழிற்படுகின்றன. மாநகரசபை, நகரசபை, பிரதேசசபை ஆகியவற்றின் பிரதிநிதித்துவத் தெரிவானது மக்கள் வாக்கெடுப்பின் ஊடாகவே நடைபெறுகின்றது.
ஆதலால், சிறுபான்மைச் சமூகங்களுக்குரிய பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்வதில் காணப்படும் இடர்களை அகற்றுவதில், ஒரு வாக்காளர் தமக்குரிய மூன்று விருப்பு உரிமைகளையும் தாம் விரும்பும் கட்சியின், ஒரு உறுப்பினருக்கு பிரயோகிக்க முடியும் என்கின்ற அம்சம் மட்டும்தான் சாதகமாக இருந்து வருகின்றது. இந்தச் சாதக நடைமுறைமையானது வட்டாரத் தேர்தல் முறைமையில் முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டு விடும் அபாயத்தைக் கொண்டிருக்கின்றது.
அதுமட்டுமன்றி உத்தேச உள்ளூராட்சி சபைகளுக்கான திருத்தத்தின் படி வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கு வெளியே வாழும் தமிழர்களும், முஸ்லிம்களும் தமது பிரதிநிதித்துவத்தை சரியாகப் பெற முடியாதளவில் மீள் எல்லை நிர்ணயங்களை உள்ளூராட்சி அமைச்சினால் முன்மொழிந்து நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தையும், அபாயத்தையும் இது கொண்டிருக்கின்றது.
உள்ளூராட்சி அமைச்சர் வர்த்தமானியில் வெளியிடப்படும் கட்டளை மூலம் பின்வரும் மாற்றங்களைச் செய்யும் அதிகாரத்தை உள்ளூர் அதிகார சபைகளின் சட்டங்களில் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டிருக்கும் திருத்தச் சட்டமூலம் கொண்டிருக்கின்றது.
“”ஒரு வட்டாரத்தின் பிரதேசம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டிருக்கலாம்’ என்றும், “”ஒரு வட்டாரத்தின் பிரதேச வரையறையை வேறொரு வட்டாரத்தின் பிரதேச வரையறையின் பாகத்துடன் ஒன்று சேர்க்கலாம்’ என்றும், “ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புதிய வட்டாரங்களை அமைத்து உருவாக்கலாம்’ என்றும் இச்சட்ட மூலம் எடுத்துக் காட்டுகின்றது.
இது உள்ளூராட்சி அமைச்சர் என்கின்ற ஒருவரிடம் குவிந்து காணப்படும் அதிகாரமாக அமைவது எல்லை மீள் நிர்ணயத்தில் தனது சொந்த விருப்பு, வெறுப்புக்கும், தான் சார்ந்திருக்கும் கட்சியின் தீர்மானத்திற்கும் கட்டுப்பட்டு சிறுபான்மைச் சமூகங்களான தமிழர்களையும், முஸ்லிம்களையும் நசுக்கும் வகையிலான நடவடிக்கைகளில் இறங்குவதை இலகுபடுத்திவிடும். பேரினவாத குணாம்சத்தை பிரதிபலிக்கும் ஒருவர் உள்ளூராட்சி அமைச்சராக நியமிக்கப்படும் சந்தர்ப்பத்தில் இந்நிலை இன்னும் இறுக்கமாகி, சிறுபான்மையினர் அல்லல்பட நேரிடுவதை உறுதிப்படுத்திவிடும் ஆபத்தையும் இது கொண்டிருக்கின்றது.
ஏனெனில் சிங்களப் பிரதேசங்களை அண்டியுள்ள தமிழ், முஸ்லிம் பிரதேசங்கள் மற்றும் சிங்களப் பிரதேசங்களில் தமிழர்களும் முஸ்லிம்களும் சற்று அதிகரித்த தொகையில் வாழும் கிராம சேவகர் அலுவலகப் பிரிவுகளை, சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்டு வாழும் கிராம சேவகர் அலுவலகப் பிரிவுகளுடன் இணைப்பதன் மூலம் இவ்விரு சமூகங்களையும் சிறுபான்மையாக்கும் இடர்களையும் இதன் மூலம் எதிர்கொள்ள வேண்டிவரலாம்.
இந்தப் பாதகச் சூழல் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள சிங்களப் பிரதேசங்களின் எல்லைப் பிரதேசங்களாக இருக்கும், தமிழ், முஸ்லிம் பிரதேசங்கள் எதிர்கொள்ளும் பாரிய அபாய சிறுபான்மைச் சமூக மக்களை அச்சத்தோடு இந்த உள்ளூராட்சி அதிகார சபைகளின் திருத்தச் சட்ட மூலத்தை நோக்க வேண்டிய தேவையை உருவாக்கியுள்ளது எனலாம்.
இவ்வாறான ஆபத்துகளை சிறுபான்மைச் சமூகங்களான தமிழ், முஸ்லிம் மக்கள் மீது விதைக்கக் கூடிய உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான திருத்தச் சட்டத்தினை மகிந்தவின் அரசாங்கம் நடைமுறைக்குக் கொண்டு வருவதில் காட்டும் ஈடுபாட்டு அக்கறையில் இருந்தே இது சிறுபான்மைச் சமூகங்களுக்கு பாதகங்களைக் கொண்டு வரக்கூடும் என்கின்ற நியாயபூர்வமான அச்ச நிலை நமக்குள் பூதாகரமாக ஏற்படுவதில் வியப்பில்லை.
மகிந்தவின் அரசாங்கம் உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதில் முனைப்போடு செயற்படுவதன் ஒரு முன்முயற்சிதான் கடந்த 07042009 இல் கிழக்கு மாகாணசபையின் இச்சட்ட மூலத்தை விவாதிக்க காட்டப்பட்ட முனைப்பாகும். இச்சட்ட மூலம் பாராளுமன்றத்திற்கு முன்னர் கொண்டு வரப்பட்ட போது, இதனை எதிர்த்து ஐக்கிய தேசியக்கட்சியும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஒன்றிணைந்து உயர் நீதிமன்றில் வழக்கொன்றினை தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கிற்கு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டவற்றில் இரண்டு விடயங்கள் நமது அவதானத்திற்கு முதன்மைப் படுகின்றது “”(1) உள்ளூர் அதிகார சபைகள் (விஷேட ஏற்பாடுகள்) திருத்தச் சட்ட மூலம் மாகாண சபைகளில் விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பின்பே பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்ற முடியும் என்றும் ஏதேனும் மாகாண சபை இந்த திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தால் அதனைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து சட்டமாக்க முடியாது. (2), சட்டமாக்குவதாயின் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றே சட்டமாக்க முடியும்’ என்பதாகும்.
ஆகவே, மாகாணசபைகளின் கூட்டு மொத்த ஆதரவும் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலமும் இன்றி இந்த திருத்தச் சட்ட மூலம் நிறைவேற்ற முடியாது என்பது தெளிவாக இருப்பதனால்தான் அதன் முதற்கட்ட தேவையான மாகாண சபைகளின் அங்கீகாரத்தை நோக்கி முன்னகர்த்துப்பட்டிருகின்றது என்பது தெளிவானது.
நமது நாட்டில் நடைமுறையில் இருந்து வருகின்ற எட்டு மாகாண சபைகளில் (தேர்தல் நடைபெற இருக்கும் மேல்மாகாணசபையைத் தவிர) மஹிந்தவின் அரசாங்கம் சார்ந்திருப்பதும் இவற்றில் கிழக்கு மாகாண சபையைத் தவிர ஏனைய மாகாண சபைகளில் சிங்களப் பெரும்பான்மைப் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருப்பதும் வெளிப்படையானது. இதனால் இந்தத் திருத்தச் சட்ட மூலத்தின் ஊடாக சிங்களப் பேரினவாதம் உறுதிப்படும் சாதகம் இருப்பதனால் சில வேளை கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்ட திருத்த மூலம் நிறைவேற்றப்படுவதற்கான அனுகூலம் அதிகமாகும்.
அதேநேரம் கிழக்கு மாகாண சபை மஹிந்தவின் அரசாங்கம் சார்ந்த சபையாக இருந்தாலும் இதில் உள்ள உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் சிறுபான்மைச் சமூகங்களைச் சார்ந்தவர்களாக அமைந்திருப்பதனாலும் இச்சட்ட திருத்தத்தினால் அதிகம் கைசேதப்படப் போவோர்கள் சிறுபான்மைச் சமூகத்தினர் என்பதனாலும் உள்ளூராட்சி அதிகாரசபைகள் சட்ட திருத்த மூலத்தை எதிர்த்து வாக்களிப்பதில் அதிக அக்கறையைக் காட்ட வேண்டிய தேவை கிழக்கு மாகாண சபைக்கு இருப்பதை மிகவும் தெளிவாக உணரலாம்.
இன்று உருவாகியுள்ள கிழக்கு மாகாண சபை அரசியல் ஊடாக கிழக்குச் சமூகங்களுக்குள் பெருகிவரும் நல்லுறவுக்கான பல அம்சங்களும் இதனால் கெட்டு விடலாம் எனும் அச்சத்தை உள்ளூராட்சி அதிகார சபைகள் திருத்தச் சட்ட மூலம் எமக்கு புலப்படுத்துகின்றது. அதேநேரம் இது விடயத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் பாதிக்கப்படாது பாதுகாக்க வேண்டிய கடப்பாடு கிழக்கு மாகாண சபைக்கு அதிகமிருக்கின்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்தத் திருத்தச் சட்டத்திற்கு மாகாண சபைகளின் அங்கீகாரம் கிடைத்து விட்டால் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையை மஹிந்தவின் அரசாங்கம் பெற்றுக் கொள்வதை இலகுபடுத்தி விடக் கூடும். ஏனெனில் இச்சட்ட மூலம் சிறுபான்மைச் சமூகங்களான தமிழர்களையும் முஸ்லிம்களையும் நெருக்குவாரங்களின்பால் ஈர்க்க வல்லது என்பதனால் பாராளுமன்றத்திலும் சிங்கள பௌத்தபேரினவாத ஆதிக்க சிந்தனையுடைய உறுப்பினர்கள் கட்சி பாகுபாட்டிற்கு அப்பால் இச்சட்ட மூலத்தை அங்கீகரிக்கக் கூடிய சாத்தியங்கள் நிறையஉண்டு.
ஆகவே உள்ளூராட்சி அதிகார சபைகள் திருத்தச் சட்ட மூலத்தை நடைமுறைக்குக் கொண்டு வர முடியாது தடுப்பதற்கு இருக்கும் ஒரே வழி கிழக்கு மாகாண சபை இச்சட்ட மூலத்தை எதிர்த்து உறுதிப்படுத்துவதுதான். இதனை செய்வது பற்றிய எந்தவிதமான தீர்மானங்களையும் கிழக்கு மாகாண சபையின் ஆளும் தரப்பினர்கள் எடுக்க வில்லை என அச்சபையின் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கின்றார்.
அதேநேரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினர் இவ்விவாதம் பற்றிய அறிவித்தல் கிடைத்ததும் எதிர்க்க வேண்டிய அவசியத்தை தீர்மானித்திருக்கின்றனர். ஆனால் அவர்களினால் மட்டும் இச்சட்டமூலத்தை தோற்கடிக்க முடியாது. தற்காலிகமாக கால அவகாசத்தை மட்டுமே ஏற்படுத்த முடியும். அதனையே அவர்கள் இப்போது செய்திருக்கின்றனர்.
கிழக்கு மாகாண சபையின் ஆளும் தரப்பில் 19 உறுப்பினர்கள் இருப்பதனால் இச்சட்ட மூலத்தை அரசாங்கம் சார்ந்து நிறைவேற்றுவது மிக எளிதானது. இதன் ஊடாக சிறுபான்மைச் சமூகங்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் மிக வலிதானது. ஆகவே ஆளுந் தரப்பில் உள்ள சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் எதிர்த்து வாக்களிப்பதுதான் இந்த அபாயத்திலிருந்து சிறுபான்மைச் சமூகங்களான தமிழர்களையும், முஸ்லிம்களையும் பாதுகாக்கும். இதனை கிழக்கு மாகாணசபை செய்யத் தவறின் அதனை நிவர்த்திக்கும் காலத்தை மீண்டும் பெறுவோமா என்பது மிகுந்த சந்தேகத்துக்குரியதே.
Thanks: Thinakkural