Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உல்ஃபா அமைப்பினரை இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது வங்கதேசம்!

ulpaஇந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தின் முக்கிய பிரிவினைவாதத் தலைவர்களில் ஒருவரை வங்கதேசம் கைதுசெய்து இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது.

ஆங்கிலத்தில் சுருக்கமாக உல்ஃபா என்றழைக்கப்படும் அஸ்ஸாம் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவரான அரபிந்த ராஜ்கோவாவை சென்ற வாரம் கைது செய்துள்ள வங்கதேச பாதுகாப்புப் படையினர் தற்போது அவரை இந்திய எல்லைக் காவல் படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு வர ராஜ்கோவா ஆர்வமாக உள்ளார் என்று தெரிகிறது. உல்ஃபா அமைப்பினருடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும் என்று தான் எதிர்பார்ப்பதாக இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தது, உல்ஃபா அமைப்புக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதோ என்ற ஊகங்களும் சந்தேகங்களும் எழ வழிவகுத்துள்ளது.

ஆனால் அஸ்ஸாமின் இறையாண்மை குறித்து விவாதிக்க இந்தியா தயாராக இல்லாதவரை அரசாங்கத்துடன் பேசுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இதுவரை கைதாகாமல் தப்பிவரும் உல்ஃபா அமைப்பின் இராணுவப் பிரிவு கடும்போக்குத் தலைவரான பரேஷ் பரூவா பிபிசிடம் தொலைபேசி ஊடாகத் தெரிவித்துள்ளார்.

நவம்பர் மாத தொடக்கத்திலும் உல்ஃபா அமைப்பின் இரண்டு முக்கியப் பிரமுகர்களை வங்கதேசம் இந்தியாவிடம் ஒப்படைத்திருந்தது.

வங்கதேசத்திலிருந்து செயல்படும் இஸ்லாமிய கடும்போக்காளர்கள் மற்றும் இந்தியப் பிரிவினைவாதிகள் மீது வங்கதேசத்தின் அவாமி லீக் அரசாங்கம் கடும் நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ள நிலையில், இந்த சம்பவங்கள் நடந்துள்ளன.

Exit mobile version