11.12.2008.
விலைவாசி உயர்வின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் ஏழை மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் உணவுக்கழகம் எச்சரித்துள்ளது. போதிய உணவு இல்லாத மக்களின் எண்ணிக்கை 96 கோடியை எட்டிப்பிடித்துள்ளது என்று கூறும் கழகத்தின் புள்ளி விபரம், 2008ல் மட்டும் 4 கோடிப்பேர் புதிதாக இந்தப் பட்டியலில் இணைந்துள்ளனர் என்று தெரிவிக்கிறது. அமெரிக்காவில் துவங்கிய முதலாளித்துவ நெருக்கடி கிட்டத்தட்ட அனைத்து நாடுகளின் குரல்வளைகளையும் நெரித்து வருகிறது.
இந்த நெருக்கடியின் விளைவாக உணவுப்பொருட்களின் விலைகள் உயர்ந்து கொண்டே இருக்கின்றன. குறிப்பாக, ஏழை நாடுகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. புதிதாக நான்கு கோடிப்பேர் பட்டினிப்பட்டியலில் இடம் பெற்றிருப்பதற்கு இது பிரதான காரணமாகும். ஏராளமானவர்கள் வீடின்றி தெருக்களில் படுத்துறங்கும் அவலமும், பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் அமெரிக்காவிலேயே ஏற்பட்டுள்ளது. நெருக்கடியைத் தீர்க்க சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் நிலைமை கடுமையானதாக மாறிவிடும் என்று ஐ.நா.உணவுக்கழகம் எச்சரிக்கிறது.
வளரும் மற்றும் வளர்ச்சி குன்றிய நாடுகளில் வசிக்கும் கோடிக்கணக்கான ஏழைகளுக்கு ஒவ்வொரு நாளும் குறைந்தபட்ச தேவையான உணவுப்பொருட்களைப் பெறுவதென்பது கனவாகவே இருந்து வருகிறது என்கிறார் ஐ.நா.உணவு மற்றும் விவசாயக்கழகத்தின் துணை இயக்குநர் ஹபேஸ் கனெம். இதற்கு வெறும் விலைவாசி உயர்வை மட்டும் அவர் குற்றம் சாட்டவில்லை. விலைவாசி உயர்வோடு, நிலம், கடன் மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவற்றையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறார். 2008 ஆம் ஆண்டில் உலகில் நிலவிய உணவுப்பாதுகாப்பு நிலைமை குறித்து ஐ.நா.உணவு மற்றும் விவசாயக் கழகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இது கூறப்பட்டுள்ளது.
நிலம் வைத்திருக்கும் விவசாயிகளும் இடுபொருட்களின் விலைகள் உயர்ந்திருப்பதால் பிரச்சனையில் சிக்கியுள்ளனர். 2006 ஆம் ஆண்டில் இருந்த விதைகள், உரம் உள்ளிட்ட விவசாய இடுபொருட்களின் விலை, தற்போது இரு மடங்காக ஆகியுள்ளது. அவர்களுக்கு தேவையான கடன்களைத் தரும் ஏற்பாடுகளும் குலைந்து போய்க்கிடக்கின்றன. பொருளாதார வளர்ச்சி என்று கூறப்பட்டபோதும், விவசாயிகளுக்கு எதிர்மறைவிளைவுகளே இருந்தன. பிற வேலைவாய்ப்புகளும் ஏமாற்றம் தரும் நிலையில்தான் உள்ளன. பட்டினியால் வாடும் 96 கோடிப்பேரில் 90 கோடிப்பேர், வளரும் மற்றும் வளர்ச்சி குன்றிய நாடுகளில்தான் வசிக்கின்றனர். மூன்றில் இரு பங்கினர் ஆசியக்கண்டத்தில் உள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளில் மூன்றில் ஒருவர் கடுமையான பட்டினியால் வாடுகிறார் என்று ஐ.நா.உணவு மற்றும் விவசாயக்கழகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
தங்கள் பயிருக்கு போதிய விலை கிடைக்காததாலும், கடன் உதவிகள் வராத நிலையிலும் விவசாயம் செய்வதை விவசாயிகள் குறைத்துவிட்டால் அடுத்த ஆண்டில் கடுமையான விளைவுகளை உலகம் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கிறது ஐ.நா. அமைப்பு. அரசுகள் தலையீட்டின் மூலமே பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்று உலகம் முழுவதும் குரல்கள் எழுந்து வருகின்றன.
அதல பாதாளத்தில் விழுந்துள்ள பெரும் நிறுவனங்களைத் தூக்கி விடுவதில் கவனம் செலுத்தும் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் அரசுகள் சாதாரண மக்களின் பக்கம் இன்னும் தனது பார்வையைத் திருப்பவில்லை.
அடிப்படைக்கட்டமைப்பிலேயே
குறைபாடு உள்ளது என்கிறது ஐ.நா. உணவு மற்றும் விவசாயக் கழகம். தொழில் நிறுவனங்களின் தேவை என்கிறபோது கடன், சலுகைகள் போன்றவற்றிற்கு முன்னுரிமை அளிக்கும் அரசு விவசாயத்தைப் பொறுத்தவரை அத்தகைய நிலையை எடுப்பதில்லை. விவசாயிக்கு நிலம், அதில் பயிரிடுவதற்கு தேவையான இடுபொருட்கள், அதை வாங்குவதற்கு தேவையான கடன், விளைச்சலை போதிய விலைக்கு விற்பது போன்ற அம்சங்கள் விவசாயத்துறையில் முன்னுரிமை பெற வேண்டும்.
உலகின் உணவுப்பாதுகாப்புக்கு இது
பெரிய அளவில் தேவைப்படுகிறது என்று ஐ.நா.அமைப்பின் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
வளர்ச்சி என்று கூறப்பட்டு வந்தவை
வெறும் போலி முழக்கங்கள்தான் என்பது அம்பலமாகியுள்ளது. புள்ளிவிபரங்களை தாங்களாகவே உருவாக்கி வளர்ச்சியைப் பெருக்கிக் கொண்டதால் வந்த விளைவுதான் இது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.