30.01.2009.உலக நாடுகளுக்கு உபன்யாசம் செய்து வந்த முதலாளித்துவ நாடுகளே இன்றைய சர்வதேச பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்று ரஷ்ய பிரதமர் புடினும், சீனப்பிரதமர் வென்ஜியா பவ்வும் குற்றம் சாட்டினர்.
முதலாளித்துவ நாடுகளால் உருவாக்கப்பட்ட இந்த நெருக்கடியில் இருந்து உலகப்பொருளா தாரத்தை அனைவரும் ஒன்றுபட்டு உழைத்தால் மீட்கமுடியும் என்றும் ஆரோக்கியமான நிலையை உருவாக்க முடியும் என்றும் அவர்கள் உறுதி அளித்தனர்.
சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் புதன்கிழமை இரவு உலகப் பொருளாதார மாமன்றத்தின் மாநாடு துவங்கியது. மாநாட்டைத் துவக்கி வைத்து சீனப் பிரதமர் வென் ஜியா பவ் உரையாற்றினார். அப்போது லாபம் ஒன்றையே நோக்கமாகக் கொண்டு குருட்டுத்தனமான கொள்கைகளை எல்லையின்றி பின்பற்றியதன் விளைவாகவே இன்றைய பெரும் நெருக்கடியை உலகம் சந்தித்திருக்கிறது என்று கடுமையாக குற்றம் சாட்டினார். (அமெரிக்கா உட்பட) சில நாடுகள் முற்றிலும் பொருத்தமற்ற பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றியதன் விளைவாகவும், சேமிப்பை குறைத்து நுகர்வையும் செலவையும் கடுமையாக அதிகரித்ததன் விளைவாகவும் இந்தப் பொருளாதாரங்கள் வீழ்ந்து கொண்டிருக்கின்றன என்றும் சாடினார். இன்றைய நெருக்கடிக்கு அமெரிக்காவே காரணம் என்றும் சீனப்பிரதமர் வென் ஜியாபவ் சந்தேகமின்றிக் கூறினார்.
சீனப் பொருளாதாரத் தின் வேகமான சீரான வளர்ச்சி தொடரும் என்று வென் முதலீட்டாளர் களுக்கு உறுதியளித்தார். அயல்நாட்டில் கிராக்கி குறைவு, சில துறைகளின் அதீதமான உற்பத்தி திறன் போன்ற சில காரணிகளால் சீனா சில சவால்களைச் சந்தித்து வருகிறது. இருப்பினும் நாங்கள் துடித்து எழுவோம் என்று அவர் கூறினார்.
புடின்
மாநாட்டில் உரையாற்றிய ரஷ்யப் பிரதமர் விளாடிமிர் புடின், நிதியுலகில் உருவான முழுமையான சூறாவளி பழைய பொருளாதார அமைப்புகளை பயனற்றவையாக்கிவிட்டது. ஓராண்டுக்குமுன் இம்மேடைகளில் ஏறிய அமெரிக்க பிரதிநிதிகள் அதன் பொருளாதாரத்தின் அடித்தள வலிமை பற்றியும் எல்லையில்லா வாய்ப்புகள் பற்றியும் வானளாவப் புகழ்ந்து விட்டார்கள். வால்ஸ்ட்ரீட்டின் முதலீட்டு வங்கிகள் இன்று மறைந்து விட்டன என்று சாடினார்.
நாடுகளின் பரஸ்பர நலன்கள் மற்றும் பரஸ்பர சார்பு தன்மை குறித்து புடின் குறிப்பிட்டார். செயலாக்கத்துடன் ஒத்துழைத் தால் மீட்பைக் காண முடியும் என்று புடின் கூறினார்.