ஐ. நாவின் உணவு நிறுவனமும், உலக உணவுத் திட்டமும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போதைய பொருளாதார சிக்கல் துவங்கும்வரை போஷாக்கின்மையால் வாடுவோரின் எண்ணிக்கை குறைந்து வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது உணவுப் பொருட்கள் விலையேறிவிட்டதாகவும், வருமானம் குறைந்து வருவதாகும் அது குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதார சுருக்க நிலை பெரிய அளவில் இருப்பதால், உள்ளூர் நாணய மதிப்பை குறைப்பது, வெளிநாட்டில் இருக்கும் ஊழியர்கள் அனுப்பும் அந்நிய செலாவணி போன்ற பாரம்பரிய முறைகள் பயனளிக்கவில்லை என்று ஐ. நா கூறியுள்ளது.
அதே நேரம் சர்வதேச உதவி நிறுவனங்கள் மற்றும் முன்னணி ஆய்வு மையங்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வு பட்டினியைக் குறைக்க சிறந்த வழி பெண்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்குவதுதான் என்று கண்டறிந்துள்ளது.
குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ் என்ற வருடாந்திர ஆய்வு, பெண்களுக்கு கூடுதல் கல்வியும், கூடுதல் வேலை வாய்ப்புக்களும் கிடைத்தால் அது குழந்தைகளுக்கு அதிக அளவு போஷாக்கை அளிக்க பெண்களுக்கு ஏதுவாக இருக்கும் என்று கூறியுள்ளது.