Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உலகில் ஊடகவியலாளர்கள் பணியாற்றும் மோசமான இடங்களில் இலங்கையும் ஒன்றாகக் காணப்படுகிறது.

11.12.2008.

ஒரு சம்பவம் இடம்பெற்றால் அது தொடர்பான உண்மைகளை, விபரங்களை செய்தியாக வெளிக்கொண்டுவருவதனாலேயே ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர், தாக்கப்படுகின்றனர்.

அந்த செய்தியிலும் பார்க்க இன்று ஊடகவியலாளர்களின் உயிர் முக்கியமானது. எனவேதான் நமது பாதுகாப்பு விடயத்தில் ஊடகத்துறையினர் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்’.

இவ்வாறு சுதந்திர ஊடக அமைப்பின் செயலாளர் கே.றுஷாங்கன் தெரிவித்துள்ளார்.

வத்தளை ஹோட்டல் ஒன்றில் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்புத் தொடர்பாக நடைபெற்ற இரண்டுநாள் செயலமர்வில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்;

இலங்கையில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. ஊடகவியலாளர்கள் சக்திவாய்ந்தவர்களாக இருந்தும்கூட 2006 முதல் 2008 வரையான இரண்டு வருட காலப்பகுதியில் மட்டும் இலங்கையில் 35 ஊடகவியலாளர்கள் உயிர் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளுக்குச் சென்று தஞ்சமடைந்துள்ளனர்.

ஊடகவியலாளர்களில் 16 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 39 பேருக்கு மிரட்டல்கள் வந்துள்ளன. 34 பேர் தாக்கப்பட்டுள்ளனர். 15 பேர் கடத்தப்பட்டுள்ளனர் என சுதந்திர ஊடக அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உலகில் ஊடகவியலாளர்கள் பணியாற்றும் மோசமான இடங்கள் நான்கு உள்ளன. அவற்றில் இலங்கையும் ஒன்றாகக் காணப்படுகிறது.

கடந்த 2007 ஆம் ஆண்டு இலங்கையில் நான்கு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலைமை தொடரக்கூடாது.

ஊடகவியலாளர்கள் தமது செய்திகளை துல்லியமாகவும், பக்கச்சார்பற்ற நிலையுடனும் நேர்மையாக அறிக்கையிட வேண்டும். எக்காரணம் கொண்டும் ஊகங்களை வெளியிடக்கூடாது.

போர்ச்சூழலிலேயே இலங்கை ஊடகவியலாளர்கள் பணியாற்றுகின்றனர். எனவேதான் அவர்கள் மீதான மேலதிக பாதுகாப்புக் கவனம் செலுத்தப்படவேண்டும் என சுதிந்திர ஊடக அமைப்பு வலியுறுத்திவருகின்றது.

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களை நடத்துபவர்கள் இனம் தெரியாத நபர்கள் என்ற பெயருக்குள் ஒளிந்துள்ளனர் என்றார்.

சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனத்தின் அனுசரணையுடன் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சுதந்திர ஊடக அமைப்பு இந்தச் செயலமர்வை நடத்தியது.

இலங்கையில் ஊடகவியலாளர்கள் மீதான யுத்தம், ஊடகவியலாளர்களுடைய உரிமைகள், தொடர்பாடல் பாதுகாப்புச் சிக்கல்களும் அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள், வேலை தவிர்ந்த நேரத்தில் பாதுகாப்பு, கொலை மிரட்டல்களைக் கையாளும் வழிகள், போராட்டங்கள் மற்றும் பிற பொதுக்கலவரங்கள் பற்றி அறிக்கையிடல், சர்வதேச செய்தி பாதுகாப்பு நிறுவனத்தின் ஆலோசனைகள், கைது செய்யப்பட்டால் என்ன செய்யவேண்டும். கடத்தப்பட்டால் அல்லது பணயக்கைதியாகக் கொண்டு செல்லப்பட்டால் என்ன செய்வது, பொதுவான பாதுகாப்பு அறிவுறுத்தல்கள், உங்களுக்கு காயம் ஏற்பட்டால் அதற்கு எவ்வாறு முதலுதவி அளிப்பது போன்ற தலைப்புக்களின் கீழ் பயிற்சிகள் வழங்கப்பட்டது.

Exit mobile version