19.11.2008.
நைரோபி: செளதி அரேபியாவைச் சேர்ந்த உலகின் மிகப் பெரிய எண்ணெய் கப்பலான சிரியஸ் ஸ்டாரை சோமாலியாவைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட கப்பலில் 100 மில்லியன் டாலர் மதிப்பிலான எண்ணை உள்ளதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.
சோமாலியா கடற்பகுதியில் செல்லும் கப்பல்களுக்கு அப்பகுதியில் செயல்பட்டு வரும் கடற்கொள்ளையர்கள் பெரும் மிரட்டலாக உள்ளனர். இப்பகுதி வழியாக செல்லும் சரக்குக் கப்பல்கள் கடத்தப்படுவது அடிக்கடி நடக்கும் சம்பவமாகி விட்டது.
கடந்த வாரம் தான் எம்.டி.ஸ்டோல்ட் வேலார் என்ற கப்பலைக் கடத்த கடற்கொள்ளையர்கள் முயன்றனர். ஆனால் அது வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.
இந்த நிலையில் செளதி அரேபியாவைச் சேர்ந்த உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்று விட்டனர். அந்தக் கப்பலில் 100 மில்லியன் டாலர் கச்சா எண்ணை இருப்பதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.
சோமாலியா கடற் கொள்ளையர்கள் கடத்திய கப்பல்களிலேயே இதுதான் மிகப் பெரியதாகும். கச்சா எண்ணைய் விலையால் பல நாடுகள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் 100 மில்லியன் டாலர் கச்சா எண்ணையுடன் வந்த கப்பலை கொள்ளையர்கள் கடத்தியிருப்பது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.
சிரியஸ் ஸ்டார் என்று பெயரிடப்பட்ட அந்தக் கப்பலை, வடக்கு சோமாலியாவின் எயில் என்ற பகுதியிலிருந்து கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளனர் என்று அமெரிக்க பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
இந்தக் கப்பல் அராம்கோ நிறுவனத்துக்கு சொந்தமானதாகும்.
சோமாலியா கடற்கொள்ளையர்களை ஒடுக்க உலக நாடுகள் ஒன்று திரள வேண்டிய நேரம் வந்துள்ளதாகவும் குரல்கள் எழும்பத் தொடங்கியுள்ளன.
கடத்தப்பட்ட கப்பலில் 20 லட்சம் பேரல் கச்சா எண்ணைய் உள்ளது. இந்தக் கடத்தலால் கச்சா எண்ணையின் விலையில் லேசாக உயர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.