Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உலகம் முழுவதும் மரணத்துள் வாழும் போராளிகள்:புலம்பெயர் கனவான்கள் எங்கே?

refugeesமுள்ளிவாய்க்கால் வரைக்கும் போராட்டத்தில் பங்குபற்றிய ஆயிரக்கணக்கான போராளிகள் இலங்கை அரச பாசிஸ்டுக்களிடம் சரணடைந்த பின்னர் அழிக்கப்பட்டுள்ளனர். இன்னும் ஆயிரக்கணக்கில் சிறைகளில் வாடுகின்றனர். மேலும் பலர் உலகின் பல்வேறு நாடுகளில் அனாதரவாகத் தவிக்கவிடப்பட்டுள்ளனர். உலக வரைபடத்தில் வறுமையினாலும், இரத்தத்தினாலும் எல்லைக்கோடுகள் வரையப்பட்டுள்ள கேள்விப்பட்டிருக்காத நாடுகளிலெல்லாம் தமிழ் அகதிகள் பயண முகவர்களால் ஏமாற்றப்பட்டும், கடல் பயணங்களின் முடிவிலும் வாழ்விழந்து தெருக்களில் தவிக்கின்றனர்.

தன்சானியா,மாலி,டோகோ,பெனின்,சாட் போன்ற ஆபிரிக்க நாடுகளில் கூட அகதிகள் எங்கிருந்தாவது தொலைபேசி அழைப்புக்கள் கிடைக்குமா என்று பல வருடங்களாகக் காத்திருக்கின்றனர்.

புலம் பெயர் நாடுகளிலோ கலர் புல் விளம்பரங்களோடு ஆடம்பரக் கூடங்களில் மரணித்துப்போனவர்களின் விழாக்கள் நடைபெறுகின்றன. தமிழகத்தில் உணர்ச்சிப் பிழம்புகளாகவும், மத அடிப்படை வாதிகளாகவும், தமிழ் வெறியர்கள் போன்றும் உலாவரும் ‘உணர்வாளர்கள்’ தமது கொல்லைப்புறத்திலேயே அகதிகள் சிறை வைக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்படுவதைக் கண்டுகொள்வதில்லை.

அவுஸ்திரேலியாவிற்கும், நியூசிலாந்திற்கும் அழைத்துச் செல்வதாக முகவர்களால் கப்பல்களில் அழைத்துவரப்பட்டவர்கள் இந்தோனிசியாவின் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்தோனேசியா சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் ஒன்பது பேர் 21.04.2014 முதல் உண்ணாவிரதமப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். .தங்களை விடுதலை செய்து சுதந்திர நாடொன்றில் அகதியாக வாழ்வதற்கான அனுமதியை ஐ நா வழங்க வேண்டும் இல்லையெனில் கருணைகொலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையினை வைத்தே உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக கொலைக் குற்றவாளிகள் போன்று சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இவர்கள் யாரையும் பணவசதி படைத்த புலம்பெயர் அமைப்புக்கள் பொருட்படுத்துவதில்லை.

தமது தேசிய வியாபாரத்தை இலாபகரமாக நடத்துவதற்கு அவலத்துள் வாழும் அகதிகள் பயன்படமாட்டார்கள் என்பதை அறிந்து வைத்திருக்கும் இந்த அமைப்புக்கள் இவர்கள் குறித்து அறிக்கை கூட விடுத்ததில்லை.

போராளிகள் மீது உண்மையான அக்கறையிருந்தால் இந்தத் ‘தேசிய’ அமைப்புகள் அகதிகளின் அவலம் குறித்து குறைந்தபட்சம் பேச விழைந்திருப்பார்கள்.

தாம் வாழும் நாடுகளில் கூட அகதிகளுக்கு எதிரான அடிப்படைவாத அரசுகளின் விசில்களாக மாறியிருக்கும் இப் புலம்பெயர் கனவான்களின் தேசிய வியாபாரத்திற்கு அப்பால் சமூகப்பற்றுள்ள அரசியல் இயக்கம் வளர்ச்சி பெறுவதற்கான காலத்தில் வாழ்கிறோம்.

Exit mobile version